<நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், முகக்கவசம் அணிந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அம்மன் மனு கொடுத்தார். நாமக்கல் அடுத்த வளையப்பட்டி முத்துராஜா தெருவை சோந்த ஞானசேகரன் மனைவி புவனேஸ்வரி நேற்று முகக்கவசம் அணிந்து அம்மன் வேடத்தில் கையில் வேலுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். பின்னர், ஆட்சியர் உமாவிடம் அவர் மனுவில் கொடுத்தார்.
அந்த மனுவில், வளையப்பட்டியில் தையல் தொழில் செய்து வருகிறேன். எனது கணவர் ஞானசேகரன், கட்டிட வேலை செய்து வருகிறார். எங்கள் பகுதியில் வசிக்கும் சிலர், ரோட்டில் செல்லும் பெண்களை தொடர்ந்து கேலி, கிண்டல் செய்கின்றனர். அவர்களை தட்டிக்கேட்டதால் என்னையும், என் குடும்பத்தையும் தகாத வார்த்தையால் திட்டி தாக்கினர்.
இதுகுறித்து, மோகனூர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடன் வாங்கி வீடு கட்டினோம். இதற்கு மாத தவணை செலுத்துகிறோம். தொடர்ந்து, பிரச்னை செய்வதால் தொழில் செய்ய முடியாமல், வருமானம் பாதிக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால், எங்களால் வாழ முடியாது. எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.