மதுரையில் எடப்பாடி பழனிசாமிக்கு, புரட்சித்தமிழர் பட்டம் வழங்கியதை முன்னிட்டு, ஆட்டோ தொழிலாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், சந்திரயான்-3 வெற்றி பெற்றதை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க வளாகத்தில் நடந்தது.தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, சந்திரயான்-3 வெற்றிக்கு கேக் வெட்டினார்.
பின்னர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், தமிழக மக்களுக்கு பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை தந்ததால் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் சூட்டப்பட்டது. இந்த பட்டத்தை வழங்கிய மதுரை மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கி சாதனை படைத்து இருக்கிறது. அதற்கு தமிழர் வீரமுத்துவேல் முக்கிய காரணமாக திகழ்கிறார்.
மேலும் கருவாடு மீன் ஆகாது. காகித பூ மணக்காது. அதேபோல் நீட் தேர்வினை தி.மு.க.வால் ரத்து செய்ய முடியாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வினை ரத்து செய்வோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். இப்போது ராகுல்காந்தி பிரதமராக வந்தால்தான் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொல்கிறார். இவரது பேச்சை கேட்டு மக்கள் சிரிக்கிறார்கள்.
உதயநிதியின் பேச்சு எப்படி இருக்கிறது என்றால், கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று காத்திருந்த கொக்கு கடைசியில் குடல் வற்றி செத்து போனதாம். அதுபோல கடல் என்றைக்கு வற்றுவது, மீன் என்றைக்கு பிடிப்பது, அது என்றைக்கு கருவாடு ஆவது, அந்த கருவாடு கொக்குக்கு என்றைக்கு கிடைப்பது? அதுபோல தான் ராகுல்காந்தி எப்போது பிரதமராக வருவது, நீட் தேர்வினை எப்போது ரத்து செய்வது என்பது தமிழக மக்களின் கேள்வியாக இருக்கிறது என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.