பொதுமக்கள் புகார் தெரிவிக்க செல்போன் எண் வீடு, ஆபீஸ் சுவர்களில் அச்சு..!

பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக நொளம்பூர் காவல் ஆய்வாளரின் செல்போன் எண், வீட்டின் சுவர், அலுவலக சுவர்களில் அச்சிடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை நொளம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 1000 -க்கும் மேற்பட்ட சுவர்களில் சட்டம், ஒழுங்கு ஆய்வாளர் சந்திரசேகரின் செல்போன் நம்பர் அச்சடிக்கப்பட்டு மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு தங்களுக்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக சுவரில் உள்ள ஆய்வாளரின் செல்போன் நம்பரை நேரடியாக தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். குறிப்பாக கல்லூரி, பள்ளி மாணவிகள், வேலைக்கு தனியாக செல்கின்ற பெண்கள் ஆகியோருக்கு இது மிகவும் வசதியாக உள்ளது. நொளம்பூர் காவல் நிலைய காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் பெரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சிட் பண்ட் நடத்தி பொதுமக்கள் பணம் ₹4½ கோடி ஆட்டைய போட்டதாக புகார்..!

கடலூர் மாவட்டம் ஆவினங்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் ஊரை சேர்ந்த இரண்டு பேர் சிட் பண்ட் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தொழில் செய்ய மூலதனமாக எங்கள் பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் பணம் பெற்று அந்த பணத்திற்கு வட்டியும் தருவதாக கூறினார்கள். ஆனால் கடந்த இரண்டு வருட காலமாக வட்டியும், அசலும் கொடுக்கவில்லை.

இது குறித்து நாங்கள் அவர்களிடம் சென்று கேட்டால் எங்களை மரியாதை குறைவான வார்த்தைகளால் பேசி வருகிறார்கள். அவர்கள் எங்களிடம் சுமார் ரூ.4 ½ கோடிக்கு மேல் பணத்தை வாங்கி ஏமாற்றி உள்ளனர். எனவே இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பணத்தை அவர்களிடம் இருந்து திரும்பி பெற்று தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலில் தீக்காயங்களுடன் மதுரை ஆட்சியரிடம் புகார் அளித்த மூதாட்டி..!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட கச்சகட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மனைவி பிச்சையம்மாள். பிச்சையம்மாள் இன்று காலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார். அந்த புகார் மனுவில், ‘எனது வீட்டின் அருகிலுள்ள நபர்கள் எனக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்கவும், பணம் மற்றும் நகையை பறிக்கவும் திட்டமிடுகின்றனர். இதற்காக எனது வீட்டை அடித்து நொறுக்கி உடலில் மண்ணைண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்தனர். பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பினேன்.

இது தொடர்பாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என்னை கொல்ல முயன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என மூதாட்டி பிச்சையம்மாள் அந்த மனுவில் குறிப்பிடுள்ளார்.