2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் திமுக முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட உள்ளது. அதேசமயம் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் தவித்து வருகின்றன.
கடந்த முறை பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், இந்த முறை, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எந்த அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து ஆலோசனை கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. அதில் மக்களவைத் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “இன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும், தேமுதிக இந்த முறை தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கூறினார்கள். காரணம், கட்சியின் தலைவர் விஜயகாந்த் இல்லாமல் நாங்கள் சந்திக்கப்போகும் முதல் தேர்தல் இது.
விஜயகாந்த்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று அவரது நினைவிடத்தில் நாள்தோறும் மக்கள் குற்ற உணர்வுடன் கண்ணீர் சிந்துவதை நான் பார்க்கிறேன். எனவே, விஜயகாந்தின் மரணத்துக்கு வந்தது ஏதோ அனுதாப அலை என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். இது அனுதாப வாக்குகளாக மாறும், இதை அனுதாபம் என்று நினைத்துவிடாதீர்கள். எனவே, இத்தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் தேமுதிகவைச் சேர்ந்த அனைத்து மாவட்டச் செயலாளர்களின் கருத்து.
ஒன்று அதிமுக கூட்டணி, மற்றொன்று திமுக கூட்டணி, பிறகு பாஜக கூட்டணி இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவது என மொத்தம் 4 வழிகள்தான். எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் கருத்து தனித்துப் போட்டியிடுவது. அல்லது, மீதமுள்ள 3 கூட்டணிகளில் யார் தேமுதிகவுக்கு அதிகமான இடங்களை, அதாவது 14 மக்களவை இடங்கள், ஒரு மாநிலங்களவை இடம் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைக்கலாம் என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தங்களது இறுதி முடிவாக அறிவித்துள்ளனர்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.