ராகுல் காந்தி உருக்கம்: ‘அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிப்பவை…’’

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 80-வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீர் பூமிக்குச் சென்ற ராகுல் காந்தி டெல்லியில் மழை பெய்து வரும் நிலையில் மழையில் நனைந்தபடி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நினைவிடத்தை வலம் வந்தார். அவரோடு, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தனது தந்தையைப் பற்றி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் , “அவர் இரக்கமுள்ள ஆளுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் சின்னம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவை. உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” என எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி: சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவு ஒரு பூச்செடி போன்றது..!

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான அண்ணன் – தங்கைகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை பறைசாற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் தங்களுடைய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ராகுல் காந்தி தனது பதிவில், “ரக்‌ஷா பந்தன் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் – தங்கைக்கு இடையிலான உடைக்க முடியாத அன்பையும் பாசத்தையும் பறைசாற்றும் ஒரு பண்டிகை. இந்த பாதுகாப்புக் கயிறு, எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுப்படுத்தட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவு ஒரு பூச்செடி போன்றது, அதில் வெவ்வேறு வண்ணங்களின் நினைவுகள், ஒற்றுமையின் கதைகள் மற்றும் நட்பை ஆழமாக்குவதற்கான மரியாதை ஆகியவை அன்பு மற்றும் பரஸ்பர புரிதலின் அடித்தளத்தில் செழித்து வளரும்” என பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Sonia Gandhi: “நாட்டின் ஜனநாயகத்தை மோடி படிப்படியாக அழித்து வருகிறார்..! ”

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் நேற்று பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், சுதந்திர போராட்ட காலத்தில் நமது முன்னோர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களின் தியாகத்தால் இந்தியா சுதந்திரமடைந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்தது. ஆனால் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியால் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது.

இந்த நாடு ஒரு சிலரின் சொத்து கிடையாது. அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டை விட, தன்னை உயர்ந்தவராக கருதுகிறார். நாட்டின் ஜனநாயகத்தை அவர் படிப்படியாக அழித்து வருகிறார். இந்திய அரசமைப்பு சாசனத்தை மாற்றவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி பாஜகவில் இணையச் செய்கின்றனர்.

மேலும் பேசுகையில், இது அநாகரிக அரசியல் ஆகும். நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாமல் பரிதவித்து வருகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் சர்வாதிகார பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன் என சோனியா காந்தி பேசினார்.

பிரியங்கா காந்தி கேள்வி: பாஜகவுக்கு ரூ.4,600 கோடி அபராதம் விதிக்காதது ஏன்..!?

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், காங்கிரசுக்கு ஏன் வருமான வரித்துறை ரூ.3,567 கோடி அபராதம் விதித்தது? காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டு என்ன? 1994-95 மற்றும் 2014-15 முதல் 2016-17ம் ஆண்டுகளில் சில தலைவர்கள், தொண்டர்கள் கட்சிக் கணக்கில் ரொக்கமாக டெபாசிட் செய்துள்ளனர். இதுதொடர்பான தகவல்கள் ஏற்கனவே வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தி விட்டோம். ஆனாலும், இந்த தகவல்களை காங்கிரஸ் தரவில்லை என தன்னிச்சையான குற்றச்சாட்டை அரசு சுமத்துகிறது.

இதற்காக வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியின் கணக்கில் இருந்து ரூ.135 கோடியை எடுத்துக் கொண்டது. அதோடு ரூ.3,567 கோடி அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியது. கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இப்போது இன்னொரு உண்மையை பாருங்கள், தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ள பாஜகவின் அறிக்கைப்படி, 2017-18ம் ஆண்டில் யார், எந்த ஊர் என எந்த தகவலையும் தெரிவிக்காமல் 1,297 பேர் பாஜகவுக்கு ரூ.42 கோடி கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த மர்மமான ரூ.42 கோடி வருமானம் குறித்து வருமான வரித்துறை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் கட்சிகளுக்கான விதிமுறைப்படி, அவற்றை மீறியதற்காக பாஜகவுக்கு ரூ.4,600 கோடி அபராதம் விதித்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. காங்கிரசுக்கு விதிக்கப்படும் விதிமுறைகள், பாஜகவுக்கு மட்டும் பொருந்தாதது ஏன்? நாங்கள் இரட்டை பலத்துடன் போராடுவோம். பாஜகவின் ஜனநாயக விரோத திட்டங்களை நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவித்து உள்ளார்.