தள்ளுவண்டி கடைக்கும் பாஸ்ட் புட் கடைக்கும் சண்டை… கடைசியில் உடைந்தது தள்ளுவண்டி காரரின் மண்டை..!

நாமக்கல் பரமத்தி சாலை போதுப்பட்டியில் கொங்குநகர் காலனியை சேர்ந்த ஜோதிமலர், அவரது மகள் நிஷாஸ்ரீ ஆகியோர் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் காவேட்டிப்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தள்ளுவண்டி கடை வைத்து இட்லி வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த மே 12-ஆம் தேதி அன்று இரவு ஸ்ரீதர் ‘பாஸ்ட் புட்’ கடைக்கு சென்று சிக்கன் ரைஸ் ஆர்டர் கொடுத்து இருக்கிறார்.

அது தயார் செய்து வருவதற்குள் கடையில் இருந்த ஜோதிமலர் மற்றும் நிஷாஸ்ரீ ஆகியோருக்கும், ஸ்ரீதருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இருவரும் சேர்ந்து ஸ்ரீதரை தாக்க தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் இது குறித்து நிஷாஸ்ரீ தனது கணவர் மவுலீஸ்குமாருக்கு செல்போனில் தகவல் கொடுத்தாராம். மேலும் அப்போது சம்பவ இடத்துக்கு மவுலீஸ்குமார் தனது நண்பர் பிலிக்ஸ் என்பவரை அழைத்து வந்தாராம். அப்போது கடை முன்பு நின்று கொண்டு இருந்த ஸ்ரீதரை உருட்டு கட்டை மற்றும் சிக்கன் ரைஸ் செய்ய பயன்படுத்தப்படும் கரண்டி ஆகியவற்றை கொண்டு கடுமையாக தாக்கி உள்ளார்களாம்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த ஸ்ரீதரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

இந்த கொலை சம்பவம் குறித்து ஸ்ரீதரின் மனைவி பூமதி நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்கள். அதில், இந்த கொலை சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தொழில் போட்டியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஸ்ரீதரை அவர்கள் காலி செய்தது காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதையடுத்து ஜோதிமலர், நிஷாஸ்ரீ, மவுலீஸ்குமார், பிலிக்ஸ் ஆகியோரை காவல்துறை கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் குற்றச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தப்பிக்க உதவிய நாமக்கல் மதுரைவீரன் புதூரை சேர்ந்த கோபிநாத் மற்றும் அடைக்கலம் கொடுத்த கொல்லிமலை தின்னனூர் நாட்டை சேர்ந்த அரவிந்த் என்பவறரையும் கைதானார். இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.