மகாவிஷ்ணுவின் சர்ச்சைப் பேச்சுகள் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கி விடும். அவரது பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை அசோக் நகரிலுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு மத்தியில் தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார். அப்போது, ‘மாற்றுத்திறனாளிகள் கண் இல்லாமல், கால் இல்லாமல் பிறக்கிறார்கள். அவ்வாறு பிறப்பதற்கு காரணம், அவர்கள் போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியம்தான் காரணம் என்றும், கடவுள் அனைவருக்கும் சமமானவர் என்றால் அவ்வாறு ஏன் வேறுபாட்டுடன் படைக்கிறார் என்று மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியும், மாற்றுத்திறனாளிகள் மனம் புண்படும்படியும் மகாவிஷ்ணு பேசினார். இந்த பேச்சுக்கு அங்கிருந்த பார்வையற்ற ஆசிரியர் சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது விஷ்ணுவுக்கும், ஆசிரியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு கல்வியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்கள், இந்திய மாணவர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், பள்ளி மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையும், எதிர்காலத்தில் நல்வழிகாட்டும் முறைகள் குறித்தும், அவர்களுடைய ஆற்றலை வலுப்படுத்தும் விதமாகதான் பேச வேண்டும். இவ்வாறு பேசுவதை விட்டுவிட்டு சர்ச்சையான பேச்சினை மகாவிஷ்ணு பேசியுள்ளார். இதுபோன்ற சர்ச்சை பேச்சுகள் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும். மகாவிஷ்ணு பேசிய பேச்சுகள் கண்டிக்கத்தக்கது. இதனை நாங்கள் ஆதரிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.