பானிபூரி சாப்பிட்டது பிரச்சனையா..!? நரிக்குறவர் பெண் வீட்டு வாசலில் உட்கார்ந்து பிரச்சனையா..!?

நரிக்குறவ சமூக பெண் ஒருவரை, கொடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நரிக்குறவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை போரூர் அடுத்த மாதா நகர் மெயின் ரோடு பகுதியை சுற்றிலும் நரிக்குறவர் மக்கள் வசித்து வருகிறார்கள். நேற்றிரவு 8 மணி அளவில், நரிக்குறவர் பெண்கள் சிலர், அங்கிருந்த ஒரு வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு, பானிபூரி சாப்பிட்டு கொண்டிருந்தனர். 50 வயது மதிக்கத்தக்க அந்த வீட்டின் உரிமையாளர் பைக்கில் வந்துள்ளார்.

தன்னுடைய வீட்டுவாசலில் நரிக்குறவர் பெண்கள் உட்கார்ந்திருந்த பெண்களை பார்த்ததுமே, கோபம் அடைந்துள்ளார். அந்த பெண்களை மிகவும் கேவலமாக தகாத வார்த்தைகளால் திட்டி பேசியுள்ளார். அத்துடன் விடாமல் தன்னுடைய பைக்கிலிருந்த அரிசி மூட்டையை தூக்கி வந்து, ராதா என்ற பெண்ணின் மீது போட்டுள்ளார்.

அதன் பிறகும் இவருடைய கோபம் தீரவில்லை, தன்னுடைய வீட்டிற்குள் சென்று, பெரிய விறகு கட்டையை எடுத்துவந்து, அந்த பெண்ணின் தலையிலேயே கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் ராதா, அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்து விழுந்துள்ளார். இதைப்பார்த்து பதறிப்போன மற்ற பெண்கள், அவரை உடனடியாக அங்கிருந்து மீட்டு பூவிருந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பூவிருந்தமல்லி அரசு மருத்துவமனையில் ராதாவின் தலையில் 13 தையல்கள் போடப்பட்டது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மாங்காடு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன்னுடைய வீட்டு வாசலில் நரிக்குறவர் இன பெண்கள் உட்கார்ந்திருந்ததால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவம்தான் இணையத்தில் சிசிடிவி காட்சியாக வெளிவந்து சென்னைவாசிகளை பதற வைத்துள்ளது. இரவு நேரம் என்பதால், சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

இந்த பிஸியான ரோட்டில், பெண்கள் கொடூரமாக தாக்கப்படுவதும், இதில் மண்டை உடைந்து தரையில் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் விழுவதும், இந்த சம்பவத்தை சுற்றிலும் ஏராளமானோர் திரண்டு நின்று வேடிக்கை பார்ப்பதும், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. இதைப்பார்த்து பதறிய பொதுமக்கள், நரிக்குறவ பெண் என்பதால் அவரை மனிதாபிமானமின்றி, வீட்டு வாசலில் கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்.