தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்..! நோயாளிகள் பெரிதும் பாதிப்பு..!

புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைவராக மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைவராக மருத்துவர் பாலாஜிமீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனை முன்பாக மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனைகளுக்கு புறநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சென்னை கிண்டியில் கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ 230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை தரை தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 1000 படுக்கை வசதிகள் கொண்டு இதயம், நுரையீரல், நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய் உள்ளிட்ட பல்துறை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டதில் இருந்தே புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைவராக மருத்துவர் பாலாஜி என்பவர் பணியாற்றி வருகிறார். தாம்பரம் பெருங்களத்தூர் பகுதியிலுள்ள காமராஜர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த விக்னேஷின் தந்தை 3 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். தாய் மற்றும் 2 சகோதரருடன் விக்னேஷ் வசித்து வருகிறார். இவரது தாய் உடல்நலக்குறை ஏற்பட்டுள்ளது. முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாயின் சிகிக்சைக்கு பணம் தடையாக இருந்ததால் தாயை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்திலுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்தவமனையில் சேர்த்துள்ளார். இங்கு விக்னேஷின் தாயாருக்கு 6 முறை கீமோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தாயாரை விக்னேஷ் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதற்கிடையே தான் தாயாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மீண்டும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் உன்னுடைய தாயாருக்கு முதலில் சரியாக வழங்கப்படவில்லை. அதனால், தற்போதைய உடல்நல பிரச்சனைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சிகிச்சை சரியாக கொடுக்காதது தான் காரணம் என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த விக்னேஷ் சுமார் 10 மணி அளவில் புறநோயாளிகள் பிரிவில் ஓ.பி. சீட்டு வாங்கிக் கொண்டு, புற்றுநோய் மருத்துவ நிபுணர் பாலாஜியின் அறைக்குச் சென்றார்.

பின்னர் விக்னேஷ் அறையின் கதவை மூடிவிட்டு, “எதற்காக எனது தாயாருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவில்லை” எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த வீட்டில் காய்கறிகள் வெட்டும் கத்தி எடுத்து மருத்துவர் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

மருத்துவர் பாலாஜி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இதன்பின்னர் அங்கிருந்த பணியாளர்கள், பொதுமக்கள் அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவல் அறிந்துவந்த கிண்டி போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீஸார் விக்னேஷை கைது செய்து, அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் கிண்டி மருத்துவமனையில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்படிருந்தது. அதன்படி, சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.