நகைக்கடை அதிபர்களிடம் ரூ.20 லட்சம் பாஜவினர் வசூலா..!?

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை குடியாத்தம் உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் நகர பாஜவினர் செய்திருந்தனர். குடியாத்தம் நேதாஜி சிலை சந்திப்பு முதல் பஸ் நிலையம் வரையில் நடை பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சாலையின் இருபுறமும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியின் ராட்சத பேனர் மற்றும் கொடிகளுடன் கம்பங்கள் நடப்பட்டது. இந்நிலையில், குடியாத்தம் நகர பாஜகவினர், அண்ணாமலை நடை பயணம் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் ரூ.20 லட்சம் வரை நன்கொடையாக பெற்றுள்ளார்களாம்.

இதற்கிடையில் பாஜக நகர நிர்வாகிகள், நகர தலைவர் சாய் ஆனந்தனிடம் வசூல் செய்த நன்கொடை தொகையை பிரித்து வழங்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு நகரத்தலைவர் மாவட்டம், மாநில நிர்வாகிகளிடம் பணத்தை ஒப்படைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பாஜகவினர் வாட்ஸ் அப் குழு மற்றும் முகநூலில் பணம் வசூல் செய்தது சம்பந்தமாக ஒருவரை ஒருவர் தாக்கி பதிவு செய்து வருகின்றனர். நகைக்கடை அதிபர்களிடம் வசூல் வேட்டை நடத்தியது கட்சியினர் மூலமே அம்பலமாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் சாப்பிடும் பருக்கையில் உதயநிதி ஸ்டாலின் பெயர்..

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கோயம்புத்தூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த பாதயாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன், கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். ஏராளமான பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை, “பாஜக ஒரு நாள் ஆட்சிக் கட்டிலில் அமரும். கோயம்புத்தூர் தேசியம், ஆன்மிகம், உண்மையின் பக்கம் இருக்கும் என்பதற்கு, கடந்த முறை கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் பாஜக பெற்ற வெற்றியே சாட்சியாக உள்ளது. கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜகவின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்டுவோம். விக்ரம் படத்திற்கு கூட்டம் வருவதைப் போல நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு கூட்டம் சேரும் என கமல்ஹாசன் பேசியதை போல நான் பேசவில்லை.

1996-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோயம்புத்தூர் கோரமான தீவிரவாத தாக்குதலுக்குள்ளாகி 25 ஆண்டுகள் பின்னால் போனது. 2006 திமுக ஆட்சியில் வரலாறு காணாத மின்வெட்டால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. மீண்டும் நடக்க வேண்டியிருந்த மாபெரும் விபத்தில் இருந்து கோட்டை ஈஸ்வரன் நம்மைக் காப்பாற்றினார். அதை முதலமைச்சர் ஸ்டாலின் சிலிண்டர் விபத்து என்றார். தீவிரவாத செயலில் ஈடுபட்ட 13 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. வானதி சீனிவாசன் குரல் கொடுக்கவில்லை என்றால், இதில் உயிரிழந்த நபருக்கு 10 இலட்ச ரூபாய் கொடுத்து சுதந்திர போராட்ட தியாகி என்று சொல்லியிருப்பார்கள்.

திமுக வரும் போது கோயம்புத்தூருக்கு தீய சக்தி வந்தது போலாகி விடும். செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றதால் மற்றொரு ஆபத்தில் இருந்தும் கோயம்புத்தூர் மக்கள் தப்பியுள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தலில் திமுக என்ற தீய சக்தியை அப்புறப்படுத்த வேண்டும். மத்திய அரசு மற்றும் வானதி சீனிவாசன் என்ற டபுள் இன்ஜின் கோயம்புத்தூரை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இழுத்துக் கொண்டுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வரும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு வானதி சீனிவாசன் உதாரணம். சில அரசியல் தலைவர்களுக்கு வானதி சீனிவாசன் மீது தான் கண். 6 மாதத்திற்கு ஒருமுறை மக்கள் நீதி மய்யம் இங்கு ஆர்ப்பாட்டம் செய்ய வந்து விடுவார்கள். ஆடல் பாடல் நடத்தியும் மக்கள் ஏமாறவில்லை என்பதால், கோயம்புத்தூர் மீது கமல்ஹாசனுக்கு கண் உள்ளது. கமல்ஹாசனுக்கு காங்கிரசில் சேர்வதா? திமுக சேர்வதா? என்ற குழப்பத்திற்கு 6 மாதமாக விடை தேடிக் கொண்டிருக்கிறார்.

கமல்ஹாசன் சாப்பிடும் பருக்கையில் கூட உதயநிதி ஸ்டாலின் என்ற பெயர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இது தான் கமல்ஹாசனின் வீரமா? தன்மானமா? நடிப்பிற்கு இலக்கணமாக உள்ள கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினை பார்த்து பம்முகிறார். கமல்ஹாசனின் தோலை கோயம்புத்தூர் மக்கள் முழுமையாக உரித்து வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள் என தெரிவித்தார்.

பாதயாத்திரையில்.. அண்ணாமலையிடம் அளித்த மனு.. கொஞ்ச நேரத்தில் பார்த்தால் ரோட்டில்..

தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தொடங்கி வைத்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில், தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை த ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியை வலிமைபடுத்தியது போல அண்ணாமலையின் ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் என்று பாஜக நம்பிக்கை கொண்டுள்ளார்.

அண்ணாமலை செல்லும் வழியில் அவர் ஓய்வு எடுக்க இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இடை இடையே அவர் உறங்க, சாப்பிட இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காவி நிறத்தில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காலை 6 மணிக்கெல்லாம் பயணத்தை துவக்குவார்கள். திருச்செந்தூரை நோக்கி ஒரு காலத்தில் கலைஞர் நடந்த நடைப்பயணமும் சரி, வைகோ நடந்த நடைப்பயணமும் சரி, கடந்த ஆண்டு ராகுல் நடந்த நடைப்பயணம் சரி… காலை 6 மணிக்கெல்லாம் நடக்கத் துவங்கினர். இடையில் காலை உணவினை போகும் இடத்திலேயே முடித்துக் கொள்வர். பிறகு மீண்டும் நடைப்பயணம் தொடங்கும்.

ஆனால் அண்ணாமலை பெரும்பாலும் கேரவனிலேயே பயணம் செய்கிறார். தினமும் காலையில் 9:30-க்குத்தான் பயணத்துக்கே ரெடியாகி 2 கிலோமீட்டர் நடக்கிறார். பிறகு சட்டென்று கேரவனில் ஏறிக்கொள்கிறார். இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அவரின் நடைப்பயணத்தின் போது கொடுக்கப்பட்ட மனு சிறிது நேரத்தில் சாலை ஓரத்தில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ரமா என்ற பெண், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடன்களை கட்ட வழி இல்லாததால், அவற்றை ரத்து செய்ய ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்து உள்ளார். அண்ணாமலை அங்கிருந்து நகர்ந்த சில நிமிடங்களில் அந்த மனு சாலையில் கிடந்துள்ளதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.