டிடிவி தினகரன் விளாசல்: முன்பு துரோகி என்றால் எட்டப்பன்..! இனி துரோகி என்றால் பழனிச்சாமி பெயர் தான் ஞாபகம் வரும்..!

தமிழ்நாட்டு வரலாற்றில் முன்பெல்லாம் துரோகி என்றால் எட்டப்பன் என்று கேள்விப்பட்டுள்ளோம். அதுமாதிரி வருங்காலத்தில் பழனிச்சாமியின் பெயர் தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு துரோகி என்றால் பழனிச்சாமி பெயர் ஞாபகம் வருகின்ற அளவுக்குச் செயல் கொண்டிருப்பவர் ஆவார் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், “அதிமுக கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கட்சியைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன.

ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?. களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா?. விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா?. முடியாது, முடியாது என்று முழங்குவது கேட்கிறது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சென்னை அடையாற்றில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு கொடியேற்றி கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “ஏதோ லாட்டரி சீட்டு போலக் குருட்டு யோகத்தில் பதவிக்கு வந்துவிட்டு துரோகத்திற்கு ஒரு சின்னம் போட வேண்டும் என்றால் பழனிச்சாமி தான் என்கிற அளவிற்கு என்பதற்குத் தமிழ்நாட்டில் மக்களுக்குத் தெரிந்துள்ளது. முன்பெல்லாம் துரோகி என்றால் எட்டப்பன் என்று கேள்விப்பட்டுள்ளோம். அதுமாதிரி வருங்காலத்தில் பழனிச்சாமியின் பெயர் தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு துரோகி என்றால் பழனிச்சாமி பெயர் ஞாபகம் வருகின்ற அளவுக்குச் செயல் கொண்டிருப்பவர் ஆவார். அவரே தெரியாமலேயே தான் தான் அந்த துரோகி அப்படித்தான் என்று ஒத்துக் கொண்டு உள்ளார் என்று தான் இதைப் பார்க்கிறேன்” என டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களை அட கொலைகார பாவிகளா.. என விமர்சனம் செய்த திண்டுக்கல் சீனிவாசன்..!

அட கொலைகார பாவிகளா… எவ்வளவு தெளிவா இருக்காங்க பாருங்க.. என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். தமிழகத்தில் 2026 -ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பணியை அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி உத்தரவில் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கள ஆய்வுக்கு என்று தனியே குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, எஸ்பி வேலுமணி உள்பட 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சாவூரில் அதிமுக களஆய்வு என்பது நடந்தது. அப்போது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது, நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு அதிகாரிகளும், ஆசிரிய பெருமக்களும். அது தெரியுமா? தெரியாதா? நமக்கு எதிராக தானே ஓட்டுப்போட்டார்கள். எனக்கு என்ன? நான் இப்போது திண்டுக்கல் தொகுதி MLA, 22 ஆயிரம் ஓட்டில் நான் வெற்றி பெற்றதாக கூறினார்கள். சரியென்று கையெழுத்துப்போட நான் உட்கார்ந்து இருந்தேன். ஆட்சியர் எல்லோரும் உட்கார்ந்து இருந்தோம்.

அப்போது துணை தாசில்தார் ஓடிவந்தாங்க. அய்யா.. அய்யா தபால் ஓட்டு எண்ணி கொண்டு இருக்கிறோம். கொஞ்சம் இருங்க.. கையெழுத்து போடாதீர்கள் என்று சொன்னார். சரி வரட்டும். ஒரு ஆயிரம், இரண்டாயிரம் ஓட்டு கிடைக்கும் என்று உட்கார்ந்து இருந்தேன். ஆனால் வெற்றி வித்தியாசத்தில் 5 ஆயிரம் ஓட்டு எனக்கு குறைந்து போய்விட்டதாக கூறினார்கள்.

என்னய்யா.. என்று கேட்டேன். அதற்கு எல்லா தபால் ஓட்டுகளும் திமுகவுக்கு போய்விட்டது. இதனால் 17,500 ஓட்டில் நீங்கள் ஜெயித்து உள்ளீர்கள் என்றார்கள். அதையாவது கொடுங்களேன்யப்பா.. நான் ஜெயிச்சிட்டேல்ல என்று கூறி தாய்மார்கள் பிரசவத்தின்போது குழந்தையை பார்த்து மகிழ்ச்சியடைவது மகிழ்ச்சியடைந்தேன்.

இதை எதுக்கு சொல்கிறேன் என்றால் என் தொகுதியில் மட்டும் 5 ஆயிரம் ஓட்டு.. தபால் ஓட்டில் எத்தனை ஓட்டு தான்யா எங்களுக்கு வந்துள்ளது என்று கேட்டேன். ஒரு ஓட்டு கூட எனக்கு வரவில்லை என்று கூறினார்கள். எவ்வளவு தெளிவா இருக்காங்க பாருங்க.. அட கொலைகார பாவிகளா என்று சொல்ல வேண்டிய சூழ்நிலை. தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் அவர்களின் குடும்பம் என்று மொத்தம் 80 லட்சம் ஓட்டுகள் தோழர்களே. இதனால் இது விளையாட்டு கிடையாது. அந்த ஓட்டுகளால் தான் நாம் தோற்றோம். இதனால் அவர்களின் ஓட்டுகளை பெற முயற்சிக்க வேண்டும்” என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.