கோவில்களில் திருப்பணிகளுக்கு அரசு நிதிக்கான வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கல்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து புதிய உத்வேகத்துடன் இந்து சமய அறநிலையத் துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

மேலும் 2021 – 2022 -ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையில், கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி தலா ஒரு லட்சத்தை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அதன் எண்ணிக்கையை தலா 1,000- லிருந்து 1,250 ஆக உயர்த்தியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய நிதியாண்டுகளில் 2,500 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 2,500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 100 கோடி ரூபாய்க்கான வரைவோலைகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ஏற்கனவே வழங்கப்பட்டது.

இவற்றில் 1,085 கிராமப்புறத் திருக்கோயில்கள், 1,070 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் என 2,155 திருக்கோயில்களில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதர திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள நிதி வசதி குறைவாக உள்ள ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத திருக்கோயில்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள ஒரு கால பூஜைத் திட்டத்தில் ஏற்கனவே வைப்பு நிதியாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாயை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 17,000 திருக்கோயில்கள் பயன்பெற்று வருவதோடு, முதன் முறையாக அதன் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.1,000/- வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு கூடுதலாக 1,000 திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படுவதோடு, வைப்பு நிதியை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.2.50 இலட்சமாக உயர்த்தி வழங்கிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2023-2024 -ஆம் நிதியாண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா 2 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 50 கோடி ரூபாய்க்கான வரைவோலைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருக்கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் வழங்கினார்.

இதன்மூலம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் மட்டுமின்றி, கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்றிடும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்டத்தில், கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள வழங்கப்பட்டு வரும் தலா 2 இலட்சம் ரூபாய் நிதியுதவியினை ரூ.2.50 லட்சமாக உயர்த்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பழங்குடியினர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி…! ஆட்சியர் அலுவலகத்தில் 10 ஆண்டுகளாக நடையாய் நடந்தும் பயனிலை…!

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது . கோத்தர் பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி ஊட்டி விவசாய நிலத்தை ஒருசிலர் அபகரித்ததாகவும், அதனை மீட்டுத்தரக் கோரியும் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கோத்தர் பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்கொலை முயற்சி நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.

இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் ஊட்டி அருகே கோக்கால் கிராமம் கோத்தர் பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த மோகன் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் 13 வயது மகள் உள்பட 6 பேருடன் வந்தார். அப்போது அவர்கள் அனைவரும் திடீரென தங்களின் உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறை உடனடியாக அவர்கள் 6 பேரையும் தடுத்து நிறுத்தி தீப்பெட்டியை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் தற்கொலைக்கு முயன்ற மோகன் குமார் கூறிகையில், கோக்கால் பகுதியில் எங்கள் தாய் வழி சமூகம் மூலம் எனக்கு பாத்தியப்பட்ட பாரம்பரிய நிலத்தில் 6 ஏக்கரை ஒருசிலர் ஆக்கிரமித்துள்ளனர். சுமார் 35 ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்பு தொடர்கிறது. நிலத்தின் சிட்டா உள்ளிட்ட ஆவணங்கள் எங்களது பெயரில் உள்ளது. இதுகுறித்து காவல் நிலையம், ஆர்.டி.ஓ., ஆட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனு கொடுத்து வருகிறேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாங்கள் சுமார் 40 சென்ட் நிலத்தில் கேரட் பயிரிட்டோம். ஆனால் ஒருசிலர் கேரட்டை அழித்துவிட்டு அவர்கள் தற்போது அவரை பயிரிட்டு உள்ளனர். நாங்களோ எங்களது குடும்பத்தை சேர்ந்தவர்களோ பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லை. மேலும் பழங்குடியின நிலத்தை பழங்குடியின சமுதாயம் அல்லாத ஒருவர் வாங்கியுள்ளார். எனவே போலியாக நடந்த பத்திரப்பதிவை ரத்து செய்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்தார்.