குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது முன்பு நாட்டை ஆண்ட மகாராஜாக்கள் வௌிநாட்டு ஆட்சியாளர்கள், ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து நடந்ததாகவும், அவர்களின் பெண்களை திருமணம் செய்து கொண்டதாகவும் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ரூபாலாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜபுத்திர சமூகத்தினர், ராஜ்கோட் வேட்பாளர் ரூபாலாவை நீக்க வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் க்ஷத்திரிய மகா சம்மேளனம் சார்பில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் இதர க்ஷத்திரிய சமூகங்களின் தலைவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று பேசினர். அவர்கள் உடனடியாக பாஜக வேட்பாளர் ரூபாலாவை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
வரும் 19-ம் தேதி வேட்பாளர் வாபஸ் பெறுவதற்கான இறுதி நாளாகும். எனவே ரூபாலாவை வாபஸ் பெறாவிட்டால் ஏப்ரல் 19-ம் தேதிக்கு பின்னர் கடுமையான போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் க்ஷத்திரிய சமூக தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், ஜம்முவை சேர்ந்த ராஜ்புத் சமூக இளைஞர் அமைப்பு ஒன்று ரூபாலாவின் நாக்கை அறுத்து வருவோருக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்துள்ளது என்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.