திடீரென சாய்ந்த மெட்ரோ ரயில் தூண் கம்பிகளால் பூவிருந்தவல்லியில் பரபரப்பு..!

சென்னை பூவிருந்தவல்லியில் 30 அடி உயர தூணின் கம்பிகள் பாரம் தாங்காமல் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் 2 -ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை 3 வழித்தடங்களில் செயல்படுத்த ரூ. 63,246 கோடி செலவில் 118.9 கிலோமீட்டர் நீளமுள்ள மூன்று வழித்தடங்களைக் கொண்ட மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் 2020 ஆண்டு இறுதியில் தமிழக அரசு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி மாதவரம் – சிறுசேரி வரை 45.4 கி.மீ 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் – பூவிருந்தவல்லி வரை 26.1 கி.மீ 4-வது வழித்தடத்திலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை 44.6 கி.மீ 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வழிதடங்களில் தற்போது, பல்வேறு இடங்களில் உயர் மட்டப்பாதை, சுரங்கப் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயிலுக்காக கட்டுமான பணியில் 30 அடி உயர தூணின் கம்பிகள் கட்டப்பட்டு நீண்ட நாட்களாக கட்டுமானப் பணி நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று காற்று அதிகம் வீசியபோது திடீரென கம்பிகள் மொத்தமாக வளைந்ததாக கூறப்படுகிறது.

கம்பிகள் திடீரென வளைந்து தொங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இத்தனை தொடர்ந்து அபாயத்தை உணர்ந்து சாய்ந்த கம்பிகளை நிலைநிறுத்த 2 ராட்சத கிரேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, கம்பிகளை நிமிர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், பூவிருந்தவல்லியில் கம்பிகள் பாரம் தாங்காமல் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சியில் ஊழியர்களை நகராட்சி சூப்பர்வைசர் விவசாய வேலை செய்ய வைத்த வீடியோ வெளியாகி பரபரப்பு..!

கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நகரத்தில் உள்ள அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், நகராட்சியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வரும் அன்னலட்சுமி என்பவர், நகராட்சியின் சூப்பர்வைசராக உள்ளார்.

இந்நிலையில் இவர் தனது சொந்த வேலைக்காக, நகராட்சி ஊழியர்களை அழைத்துக் கொண்டு , பார்வதிபுரம் கிராமத்தில் உள்ள அவரது விவசாய நிலத்தில், மல்லாட்டை செடி பிடுங்க வைத்து, விவசாய வேலை செய்ய சொன்ன வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி, பொது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடலூர் நகரத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும், நகராட்சி ஊழியர்களுக்கு எண்ணற்ற வேலைகள், நகரம் முழுவதும் உள்ள நிலையில், அவர்களை அப்பணி செய்வதற்காக, நகராட்சி நிர்வாகம் பயன்படுத்தாமல், தற்காலிக ஊழியராக பணியாற்றும் அன்னலட்சுமிக்காக, நகராட்சி ஊழியர்களை விவசாய வேலைக்கு அனுப்பியது, அனைத்து தரப்பு மக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வடலூர் திமுக நகராட்சி சேர்மன் சிவகுமார் கண்டுகொள்ளவில்லை எனவும், நகராட்சி ஊழியர்களை விவசாய வேலை செய்ய வைத்த, தற்காலிக ஊழியர் அன்னலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவருக்கு உறுதுணையாக இருந்த நகராட்சி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என வடலூர் நகரப் பகுதி வாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.