சில்வர் பீச்சில் ‘பன் ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி

தமிழக அரசு, போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறது. அதன்படி கடலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை இணைந்து கடலூர் சில்வர் பீச்சில் இளைஞர்கள், இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் அனைத்து பொதுமக்களிடமும் போதை பொருட்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘பன் ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

காலை 6 மணி முதல் 9.30 மணி வரை இந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதை அறிந்ததும் இளைஞர்கள், இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் காலை 5.30 மணிக்கே சில்வர் பீச்சில் குவிய தொடங்கினர். தொடர்ந்து சில்வர் பீச்சில் அமைக்கப்பட்ட திறந்த வெளி மேடையில் காலை 6 மணிக்கு பிறகு நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் ஆட்சியரும், திட்ட இயக்குனருமான மதுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.