வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட கடலூர் ஆயுதப்படை காவலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த சம்பத் வழுதரெட்டியைச் சேர்ந்த கடலூர் ஆயுதப்படை முதல்நிலை காவலராக பணியாற்றி வரும் பாண்டியன் என்பவரிடம் அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் பாண்டியன் தனக்கு அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் நல்ல பழக்கம் உள்ளதால் யாருக்காவது அரசு வேலை கேட்டால் சொல்லுமாறு சம்பதிடம் தெரிவித்து இருந்தாராம். இதையடுத்து சம்பத் தனது மகன் ஞானவேல் BE முடித்துள்ளதாகவும் அவருக்கு அரசு வேலை கேட்டு பாண்டியனிடம் அணுகியுள்ளார்.
அப்போது, பாண்டியன் உங்கள் மகனுக்கு நான் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி மேலும் சில அரசு பணி நியமன உத்தரவுகளை காண்பித்தும், ஆசை வார்த்தைகளை கூறி உள்ளார். இதனை நம்பிய சம்பத் தெரிந்தவர், தெரியாதவர் என அங்கும் இங்கும் கடனை வாங்கி பாண்டியன் வங்கி கணக்கில் ரூ.4.50 லட்சம் செலுத்தி உள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு பாண்டியன் வேலை வாங்கித் தராமல் இன்று, நாளை என இழுக்கடித்து உள்ளார்.
இதனால் மனம் நொந்துபோன சம்பத் வேலை இல்லாவிட்டாலும் பரவாயில்லை பணத்தையாவது திருப்பி கொடுங்கள் என கேட்டுள்ளார். ஆனால் பணம் வரவில்லை ஆகையால் விழுப்புரம் குற்றப்பிரிவில் புகார் சம்பத் கொண்டார். இது குறித்து சம்பத் அளித்த புகாரின்பேரில் பாண்டியன் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து நேற்று இரவு அவரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.