கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார் அறிவிப்பு: பட்டா, குடும்ப அட்டை… உடனடி தீர்வு..!

ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும், மக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் விதமாக ஜமாபந்தி நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் வரும் 16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் அரசின் சேவைகள் தொடர்பாக மனு அளிக்கலாம். குறிப்பாக பட்டா, பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை, அரசின் உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்பாக மனு அளித்து, பயன்பெற முடியும்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வெளியிட்ட அறிவிப்பில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய 8 தாலுகாக்களில் வருகிற 16-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அலுவலர்களிடம் வழங்கலாம். அதன்படி கிருஷ்ணகிரி தாலுகாவில் ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் வருகிற 16-ந் தேதி மற்றும் 20 முதல் 23-ந் தேதி வரையிலும், 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது.

இதேபோல சூளகிரி தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் தலைமையில் 16, 20, 21, 22, 23-ந் தேதிகளிலும், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் ஓசூர் உதவி ஆட்சியர் பிரியங்கா தலைமையில் 16, 20, 21, 22, 23, 27, 28-ந் தேதிகளில் நடக்கிறது. போச்சம்பள்ளி தாலுகாவில் கிருஷ்ணகிரி உதவி ஆட்சியர் ஷாஜகான் தலைமையில் 16, 20, 21, 22, 23, 27-ந் தேதிகளிலும் பர்கூர் தாலுகாவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் தனஞ்செயன் தலைமையில் 16, 20, 21, 22, 23-ந் தேதிகளிலும் ஓசூர் தாலுகாவில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் தர்மராஜ் தலைமையில் 16, 20, 21, 22, 23-ந் தேதிகளிலும் நடக்கிறது. ஊத்தங்கரை தாலுகாவில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் 16, 20, 21, 22, 23-ந் தேதிகளிலும், அஞ்செட்டி தாலுகாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி தலைமையில் 16, 20-ந் தேதிகளிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது” என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.பெ.​சாமி​நாதன்: பத்​திரி​கை​யாளர்​களுக்கு சலுகை விலை​யில் வீட்டு மனை ​பட்டா..!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்து பேசி வருவதாக பேரவையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மதுராந்தகம் தொகுதி அதிமுக MLA மரகதம் குமாரவேல் பேசும்போது, ‘‘பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.

கேள்விக்கு பதிலளித்த செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்து எங்கள் துறையின் செயலர், இயக்குநர் ஆகியோர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி வருகின்றனர். விரைவில் நல்ல சூழல் ஏற்படுத்தப்படும்’’ என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

புறம்போக்கு நிலத்துக்கு பட்டா கேட்டவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த காவலர் மற்றும் பெண் கைது ..!

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சசிகுமார் என்பவர், திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதன் புகார் மனுவில், தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்த முருகராஜ் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் இவருக்கும், ஓசூர் பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்ற பெண்ணுக்கும் கூடாநட்பு ஏற்பட்டு, அந்தப் பெண்ணுக்கு திருநெல்வேலியில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து, தங்க வைத்திருந்தார்.

இந்நிலையில், வளர்மதியை மாவட்ட வருவாய் அலுவலர் என்று பலரிடம் அறிமுகப்படுத்தி, புறம்போக்கு நிலத்துக்கு பட்டா பெற்றுத் தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, தலைமைக் காவலர் முருகராஜும், வளர்மதியும் சேர்ந்து பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகவும் , சசிகுமார் திருநெல்வேலி பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்துக்கு பட்டா மாறுதல் வாங்கித் தருமாறு இவர்களை அணுகியுள்ளார். இதற்காக வளர்மதியிடம் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் பட்டா மாறுதல் செய்து கொடுக்கவில்லை.

இதையடுத்து, திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் சசிகுமார் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். இதில், வளர்மதி, முருகராஜ் ஆகியோர் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பட்டாவில் பெயர் திருத்தும் செய்ய ரூ.20,000 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது..!

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமம், மங்கம்மாள் புரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் 2002-ல் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமியிடமிருந்து 94 செண்டு நிலத்தை கிரையம் பெற்றுள்ளார். ஆனால், நிலப் பட்டாவில் கிருஷ்ணசாமிக்குப் பதிலாக கிருஷ்ணமூர்த்தி என்று பெயர் தவறாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக மோகன், லால்குடி வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்தில், 2024 மார்ச் 5-ல், அதை சரி செய்ய விண்ணப்பம் அளித்தார். நடைமுறையின்படி, அவரது விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி பெயர் மாற்றத்திற்கான பரிந்துரையுடன் துணை தாசில்தார் ரவிக்குமாருக்கு அனுப்பினார்.

ஆனால், ஆறு மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஜூலை 2024 முதல் துணை தாசில்தார் ரவிக்குமாரை தொடர்ந்து பின்தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 26- ஆம் தேதி மோகன் மீண்டும் லால்குடி தாலுக்கா அலுவலகத்திற்குச் சென்று, பெயர் திருத்தக் கோரிக்கையை செயல்படுத்த துணை தாசில்தாரிடம் கோரிக்கை வைக்க பெயர் மாற்ற பரிந்துரை செய்ய ரவிக்குமார் ரூ.50,000 லஞ்சம் கேட்டுள்ளார். பின்னார் தொடர்ந்த பேச்சுவார்த்தைஇல் ரூ.20,000 குறைக்கப்பட்ட லஞ்சத்திற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்க ரவிக்குமார் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசனின் மகன் மோகன் லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளித்தார். நேற்று மதியம் லஞ்ச ஒழிப்பு துறை அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய 20 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை துணை தாசில்தார் ரவிக்குமாரிடம் சம்பத்குமாரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புதுறை துணை தாசில்தார் ரவிக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.