அண்ணாமலை பொய் மூட்டை…! அண்ணாமலைக்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்கக்கூடாது பிடிஆர்!

சென்னையில் அண்மையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக எதிர்த்தார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்தார். அதற்கு பயந்து அண்ணாவும், பிடி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்” என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. திமுக, அதிமுக, திராவிட இயக்கத்தினர் என பலரும் அண்ணாமலை சொன்ன விஷயம் பொய் எனக் கூறினர். அண்ணா பற்றி தவறாகப் பேசியதற்காக அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர். முடிவில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் பூதாகரமானது.

இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “தி இந்து ஆங்கில நாளிதழ் 1956 ஜூன் 1,2,3 தேதியிட்ட நாளிதழ்கள் என்னிடம் உள்ளது. யார் வேண்டுமானாலும் படிக்கலாம். 10 நாட்கள் நடந்த தமிழ்ச்சங்க விழாவில் முதல் நாள் ராஜாஜி பேசினார். நான்காவது நாள் பி.டி.ராஜன் பேசினார். அன்றுதான் அண்ணா பேசினார். அண்ணா பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் நாளிதழ்கள் பதிவு செய்துள்ளன. நான் இரண்டரை ஆண்டுகள் தமிழகத்தின் பாஜக தலைவராக உள்ளேன். நான் ஒரு விஷயத்தை சொன்னால் சரியாகத்தான் சொல்லுவேன்” எனத் தெரிவித்தார்.

ஆனால் அதன் பிறகு தி இந்து, தினமணி உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்கள் அண்ணாமலை குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சி நடந்தது தொடர்பான செய்திகளை வெளியிட்டு, அண்ணா மன்னிப்பு கேட்டதாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளன. ஆனால் தான் ஆதாரத்துடன் தான் பேசுவதாகவும் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் அண்ணாமலை கூறி வருகிறார்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் அண்ணாமலையின் பேச்சுகளுக்கு பதில் அளித்தார், “எனது தாத்தா மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சர், பேரறிஞர் அண்ணா எங்கள் கட்சியைத் தொடங்கியவர், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர். தேவர் ஐயா ஒரு இயக்கத்திற்கு தலைவராக இருந்தவர், மிகவும் புலமை வாய்ந்தவர். தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகவும் புலமை வாய்ந்தவர். இவர்களுக்குள் இருந்த நல்ல உறவை, அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறக்காத அண்ணாமலை சொல்லும் அவதூறு கருத்துகளை பொய் என நிரூபிக்க பலர் உண்மையை எடுத்துக்கூறி வருகின்றனர்.

1956-ல் நடந்தது என சொல்லி, எங்கேயோ படித்தேன் என சொல்லி அதற்கு எந்த ஆதாரமும் கொண்டு வராமல் ஏதோ ஒரு கருத்தை முன் வைக்கிறார். இதற்கெல்லாம் நாம் பதில் சொல்லக்கூடாது. யாரிடம் என்ன கருத்து வருகிறது என்பதை தெரிந்து கொண்டு எதற்கு பதில் சொல்ல வேண்டும் கூடாது என்பதை சிந்திக்க வேண்டும். அண்ணாமலை போன்றவர்களின் பொய்யான கருத்து ஜனநாயகத்திற்கே கேடு.

எதை ஏற்றுக்கொள்ள வேண்டும், எதை புறம்தள்ள வேண்டும் என சிந்திப்பது தான் ஜனநாயகத்திற்கு நல்லது. இந்த மாதிரியான கருத்துகளுக்கு சாதாரண நபர்கள் பதில் பேசவே கூடாது. நாம் ஏன் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தொடர்ந்து ஒருவர் பொய் சொல்லிக் கொண்டே இருந்தால் நாம் விளக்கம் சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? அவர் பாட்டுக்கு பொய் சொல்லிக் கொண்டே இருக்கட்டும். தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.