விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கொடியில் “யானை” பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு..!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என். ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என விஜய் அறிவித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து, கட்சியில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகை வடிவமைக்கப்பட்ட கொடியை அறிமுகம் செய்தார்.

தமிழக வெற்றிக் கழகம் நிறுவனர் விஜய் கொடியை அறிமுகம் செய்த ஒரு சில மணித்துளிகளில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் பி.ஆனந்தன் வெளியிட்ட வீடியோ பதிவில், “1968-ம் ஆண்டு சின்னம் ஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, யானை சின்னத்தை அசாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் எந்த அரசியல் கட்சிகளும் எந்த வடிவத்திலும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை வடிவமைக்கும்போது இச்சட்டம் தொடர்பாக அவர்களின் கவனத்துக்கு வந்திருக்காது என தெரியவந்தது.

இதனால் அக்கட்சித் தலைமையை தொடர்பு கொள்ளுமாறு பகுஜன் சமாஜ் மத்திய தலைமையிடம் இருந்து அறிவுறுத்தல் பெறப்பட்டது. அதனடிப்படையில் தவெக நிர்வாகி வெங்கட் என்பவரை தொடர்பு கொண்டோம். கட்சிகளுக்குள் முரண்பட்ட கருத்துகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக சட்ட ஆவணங்களையும் மத்திய தலைமையின் அறிவுறுத்தல்படி அனுப்பியுள்ளோம். இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து முடிவெடுப்பதாக சொல்லியிருக்கின்றனர். அது நல்ல முடிவாக இருக்கும் என நம்புகிறோம்,” என பி.ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், “சகோதரர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறும் செயலாகும். மேலும், தேர்தல் காலங்களில் வாக்காளர்கள் மத்தியில் இது மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன். மீறும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்,” என பி.ஆனந்தன் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வத்தாமன் நண்பனாக உறவாடியே ஆம்ஸ்ட்ராங்கை கொன்றேன்..!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ஆம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருக்கே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஆரம்பத்தில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என இந்த வழக்கில் அடுத்தடுத்து சிக்கியுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அது போல் இதுவரை 23 பேர் வரை கைது ஆகியுள்ளனர். இவர்களை காவல்துறையினர் ஒவ்வொருவராக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது காவல்துறை காவலில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உள்ளனர். இவர்களிடம் தனித்தனியாகவும் நேருக்கு நேர் வைத்தும் தனிப்படை காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்கள் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறார்கள். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் என்பவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். அவர் தாய்லாந்தில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அஸ்வத்தாமனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்து உள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது ஆம்ஸ்ட்ராங்குடன் இணக்கமான சூழலை கடைப்பிடித்துள்ளார். அவரிடம் போய் “உங்களுக்கும் அப்பாவுக்கும்தானே முன் விரோதம். நான் இணக்கமாக செல்ல விரும்புகிறேன்” என்று ஆம்ஸ்ட்ராங்கை அங்கிள் என்றே அழைத்தாராம் அஸ்வத்தாமன்.

அவருடன் நட்புடன் இருப்பது போல் நடித்ததாகவும் மாமூல் , அரசியல் எதிர்காலம் என அனைத்துமே பூஜ்ஜியம் ஆகிவிடும் என்பதால் நாகேந்திரனிடம் கூறி ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல சொன்னாராம் அஸ்வத்தாமன். மேலும் கடந்த 4 நாட்களாக அஸ்வத்தாமனிடம் காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர் கூறுகையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய அருள் எங்களை அணுகினார். அப்போது நான் அப்பாவிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என கூறினேன்.

அதன் பிறகு அனைத்தும் நல்லவிதமாக முடிந்தால் கண்டிப்பாக கொலை வழக்கில் கைது செய்யப்படுவோருக்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். இந்த கொலைக்கு அஸ்வத்தாமன் ஒப்புக் கொண்டஎன்பதற்கான மூன்று காரணங்கள். ஒரக்காடு நிலப்பிரச்சினையில் என்னை உள்ளே நுழைய விடாமல் ஆம்ஸ்ட்ராங் தடுத்தார். இதனால் எங்கள் வருமானம் பாதிக்கப்பட்டது.

மேலும் மீஞ்சூரில் காங்கிரஸ் பிரமுகர் ஜெயப்பிரகாஷை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் ஆம்ஸ்ட்ராங் தூண்டுதலின் பேரில் ஜெயப்பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த வழக்கில் நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். அது எனக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியது. அது போல் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டச் செயலாளர் தென்னரசு கொலை வழக்கில் எனது தந்தை நாகேந்திரனை குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

அவருக்கும் அந்தக் கொலைக்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் ஆம்ஸ்ட்ராங் தூண்டுதலால்தான் என் தந்தை சிறைக்குச் சென்றார். எனது வாழ்விலும் எனது தந்தை வாழ்விலும் குறுக்கே வரும் ஆம்ஸ்ட்ராங்குடன் எனக்கு முன்விரோதம் ஏற்பட்டது. இதனால்தான் அருள் என்னை அணுகிய போது நான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சம்மதம் தெரிவித்தேன் என அஸ்வத்தாமன் தெரிவித்ததாக தெரிகிறது.