புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையான நேற்று, நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கொங்கு நாட்டில் உள்ள வைணவத் தலங்களில் புகழ் பெற்றது நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதிக்கு அருகில் நைனாமலை என்னும் ஊரில் செங்குத்து வடிவிலான மலை மீது வாசம் செய்யும் பெருமாள் சுற்று வட்டார குதியில் புகழ் பெற்றவர்.
பார்ப்பதற்கு சாய்வாகத் தோன்றும் இம்மலை மிகவும் செங்குத்தான, குறைந்த அகலமே கொண்ட 3,700 படிகளை கொண்ட 3 கிலோ மீட்டர் யின் உயரம் கொண்டதாகும். இக்கோவில் நாமக்கல் சேந்தமங்கலம் பகுதியை ஆண்ட ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் இன்றளவும் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். மேலும் நாயக்கர்கள் இப்பகுதியை ஆண்டு வந்ததாலும், நைனா என்றால் தந்தை என்று தெலுங்கில் பொருள் படுகிறது, கடவுளை தந்தை என்று கூறும் வழக்கம் இருப்பதால் இம்மலையை நைனா மலை என்று அழைக்கிறார்கள் என்றும், சிவ தலங்களைப் போல தொன்மை வாய்ந்த இம்மலையில் ரிஷிகள் தவமிருந்து, வரதராஜப் பெருமாளை தரிசித்து வந்ததாகவும், கன்மநையின மகரிஷி என்பவர் பெருமாளுக்கு கைங்கரியங்கள் செய்து, மலை மீதே சமாதி ஆனதால், இம்மலைக்கு நைனாமலை என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
மலை மீது திருத்தலம் நான்கு யுகமாகக் கொண்டு இந்திரஜாலம், பத்மஜாலம், யாதவா ஜாலம், நைனா ஜாலம் ஆகிய பெயர்களுடன் திகழ்கின்றது. இம்மலை மீது 108 தீர்த்தங்கள் இருந்தன. இவற்றில் காலப்போக்கில் பராமரிப்பின்றி மறைந்து தற்போது கடும்பஞ்சத்திலும் என்றென்றும் வற்றாத தீர்த்தங்கள் மூன்று மட்டும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த மின்னாம்பள்ளியில், 2700 அடி உயரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு, 3600 படிக்கட்டுகள் கொண்ட நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. திருப்பதியில் உள்ள அண்ணன் கோவிந்தராஜ பெருமாள் நீராட தலைக்கு எண்ணெய் தேய்த்து கொண்டு தலைக்கு தேய்க்க அரப்பு தேடியபோது, அரப்பு இல்லையாம் ஆகையால் சகோதரன் வரதராஜ பெருமாளிடம் அரப்பு கொண்டு படி தெரிவித்தார். இதனை தொடர்ந்து வரதராஜ பெருமாள் அரப்பு தயாரிக்க பயன்படும் ஊஞ்சை மரங்களை தேடி அழைக்கிறார்.
ஆனால் நெடுதூரம் பயணம் செய்து ஒரு வழியாக நைனாமலையை வந்தடைகிறார். அந்த மலையின் நாலாபுறமும் உள்ள ஊஞ்சை மரங்களை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறார் வரதராஜ பெருமாள். தன்னுடைய சகோதரனுக்கு அரப்பு தேடி வந்ததை மறந்து இங்கேயே குடி கொள்கிறாள் வரதராஜ பெருமாள். அண்ணண் கோவிந்தராஜ பெருமாளும் திருப்பதியில் அரப்பு கொண்டு வருவான் என்று எதிர்பார்த்து காத்து இருப்பதால் தான் கோவிந்தராஜ பெருமாள் எண்ணெய் முகத்துடன் இருப்பதாக வரலாறு.
வரதராஜ பெருமாள் குவலயவல்லியுடன் காட்சியளிக்கிறார். மலை மீது மகா மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணன், வெண்ணை தாழ் கிருஷ்ணன், நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், மன்மதன், ரதி, அய்யப்பன், தசாவதார சிலைகளும் உள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் ஆனி முதல் தேதி முதல் ஆடி 30-ஆம் தேதி வரை சூரிய உதயத்தின்போது சூரிய ஒளி சுவாமி மீது விழுவது விசேஷம் அகும்.
இவ்வளவு சிறப்பு மிக்க நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருப்பதியை போலவே உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான உற்சவ திருவிழா தொடங்கியது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், வெள்ளிக்கிழமை மாலை முதலே மலையேறி வரதராஜ பெருமாளை வழிபாடு செய்தனர். நாமக்கல், திருச்சி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், ராசிபுரம், ஈரோடு பகுதிகளிலிருந்து பக்தர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மின்னாம்பள்ளி வழியாக சென்று செங்குத்தான படிகள் ஏறமுடியாதவர்கள் இருளப்பட்டி வழியாக சென்று மலை உச்சியில் உள்ள வரதராஜ பெருமாளை தரிசனம் செய்தனர். இப்படியும் மலை ஏறி செல்ல முடியாதவர்கள் அடிவாரத்தில் உள்ள பாத மண்டபத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
புரட்டாசி 2-வது சனிக்கிழமை என்பதால் வரதராஜ பெருமாளுக்கும், ஆஞ்சநேயருக்கும் பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. பின்னர், வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நைனாமலைக்கு வந்து மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தனர்.