நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு வீடு மற்றும் நிலம் கொடுத்த குடும்பத்தை சேர்ந்த , ஐடிஐ படிப்பு படித்தவர்களை, தொழில்துறை பயிற்சியாளர் பணிக்கு 262 பேர் தேர்வு செய்ய, என்எல்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வருகின்ற பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி அன்று எழுத்து தேர்வுக்கான கடிதம் என்எல்சி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் என்எல்சி நிறுவனம் மூலம் பயிற்சி முடித்து, NCVT சான்றிதழ் வைத்திருக்கும், நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு எழுத்து தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படவில்லை. இந்த செயல் என்எல்சி நிறுவனம், தானே பயிற்சி அளித்து, ஐடிஐ சான்றிதழ் கொடுத்த நிலம் கொடுத்தவர்களை, எழுத்து தேர்வுக்கு அனுமதிக்காதது என்எல்சி நிறுவனம் தன்னைத்தானே நம்பாதது போல் உள்ளது.
மேலும் நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தில், என்எல்சியில் பயிற்சி முடித்து, 13 ஆண்டுகள் காத்திருந்து, தற்போது கிடைத்துள்ள வாய்ப்பில், எழுத்து தேர்வு எழுத அனுமதிக்காதது சட்டப்படியும், நியாயப்படியும் தவறான செயல் என்பதால் மிகவும் கண்டனத்திற்குரியது எனவும், இடம் கொடுத்த விவசாயிகள் மீது என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு அக்கறை இல்லை என்பதை இச்செயல் மீண்டும் நிரூபித்துள்ளது.
எனவே என்எல்சி இந்தியா நிறுவனம் வருகின்ற பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி நடத்த உள்ள எழுத்து தேர்வை ஒத்திவைத்து, என்எல்சி நிறுவனத்தில் ஐடிஐ பயிற்சி முடித்தவர்களுக்கும் எழுத்து தேர்வுக்கான அழைப்பை அனுப்பி, மற்றொரு தேதியில், எழுத்து தேர்வு நடத்த வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.