கணக்கில் வராத ரூ.3.25 லட்சம் சேரங்கோடு ஊராட்சியில் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை

கணக்கில் வராத ரூ.3.25 லட்சம் சேரங்கோடு ஊராட்சியில் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை, ஊராட்சி தலைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சி உள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லில்லி ஏலியாஸ் தலைவராக உள்ளார். இந்த ஊராட்சியில் திட்டப் பணிகளுக்கு கமிஷன் பெற்று, தகுதியில்லாத நபர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று மாலையில் சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஊராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத, ரூ.3.25 லட்சம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அந்தப் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை, ஊராட்சி செயலர் சஜீத், தலைவர் லில்லி ஏலியாஸ் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

யானைகள் வழித்தடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட 12 விடுதிகளை இடிக்க உத்தரவு..!

நீலகிரி மாவட்டம், ஊட்டி தாலுகா மசினகுடி அருகே மாயார், சீகூர், சோலூர், முதுமலை, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் வழித்தடங்களில் சொகுசு விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி கோட்டத்தில் உள்ள சீகூர் சமவெளியில் யானைகள் வழித்தடம் தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு கிராம வரைப்படத்துடன் கூடிய அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சொகுசு விடுதிகள் மற்றும் காட்டேஜ் உரிமையாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மசினகுடி, பொக்காபுரம், வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 309 அறைகள் கொண்ட 39 கட்டிடங்கள் யானைகள் வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறிய அனைத்து கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

இதில் 12 கட்டிட உரிமையாளர்கள் மட்டும் ஆட்சேபனைகள் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தரப்பில் ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்க வசதியாக கடந்த 14-10-2020 அன்று காட்டு யானைகள் வழித்தடம் தொடர்பாக ஆராய ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கடராமன் தலைமை 3 நபர் கொண்ட விசாரணைக்குழு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

யானைகள் வழித்தடம் குறித்து ஆட்சேபனைகள் உள்ளவர்கள் தங்கள் பாதிப்புகளையும், அதன் விபரங்களையும் குறிப்பிட்டு தங்களது கோரிக்கைகளுக்கு ஆதாரமாக உள்ள ஆவணங்களின் நகல்களை இணைத்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் விசாரணை குழுவிடம் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வந்தது. இதில் ஆட்சேபனைகள் தெரிவித்த 12 கட்டிட உரிமையாளர்களின் கட்டிடங்களை ஆய்வு செய்த போது எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனால் 12 கட்டிடங்களையும் இடித்து அகற்ற சீகூர் யானைகள் வழித்தட விசாரணை கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

கண்காணிப்பு கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி காந்திநகரில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறிது நேரம் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நடைபாதை சீரமைப்பு பணியை தொடங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கையெழுத்து இயக்கம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி 11-வது வார்டில் பழைய ஆஸ்பத்திரி குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு வசிக்கும் மக்களின் வசதிக்காக கால்வாயுடன் கூடிய நடைபாதை நகராட்சி மூலம் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே அந்த நடைபாதை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர். இதைத் தொடர்ந்து கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நகராட்சி சார்பில் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபாதையை சீரமைப்பதற்காக ஜல்லி, மண் போன்ற கட்டுமான பொருட்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டன.தொடர்ந்து நடைபாதை சீரமைப்பு பணி தொடங்கி நடந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பணி திடீரென பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பணிக்காக நடைபாதையில் கட்டுமான பொருட்கள் கொட்டப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

அந்த வழியாக நடந்து செல்லும் போது தவறி, கழிவுநீர் கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது. உடனடியாக கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை சீரமைப்பு பணியை தொடங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோத்தகிரியில் அமைதி ஊர்வலம்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையை கண்டித்தும், மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகள் அங்கு அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கபட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ திருச்சபைகள் ஐக்கியம் சார்பில் நேற்று மாலை கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அருகே உள்ள புனித லூக்கா ஆலயத்தில் இருந்து அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் மணிப்பூருக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர்.

ஆதிவாசி மக்கள் எதிர்பார்ப்பு…வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்…!

நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவர்சோலையில், தொகுப்பு வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் தொடர்ந்து பாழடைந்த வீடுகளில் வசித்து வரும் ஆதிவாசி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மாரக்கரா ஆதிவாசி கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இவர்கள் பழுதடைந்த வீடுகளிலும், பலர் குடிசை வீடுகளிலும் வசித்து வந்தனர். இதனால் மழைக்காலத்தில் அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.

தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதேப்பகுதியில் புதிய தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு பேரூராட்சி மூலம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. தொடர்ந்து அடித்தளம் அமைக்கப்பட்டு சில வீடுகள் கட்டப்பட்டது. ஆனால் சில வீடுகளுக்கு அடித்தளமும், மேல் சுவரும் கட்டப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆகையால், அப்பகுதி ஆதிவாசி மக்கள் வசிக்க நல்ல வீடுகள் இல்லாமல் தொடர்ந்து பழுதடைந்த வீடுகள், குடிசைகளிலேயே வசித்து அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் இரவில் திறந்த வெளியில் தூங்கமுடியாமல் ஒரே வீட்டுக்குள் சிறிய இடத்தில் பல குடும்பங்கள் தூங்க வேண்டிய அவல நிலை காணப்படுகிறது. நிறுத்தப்பட்டுள்ள வீடுகள் கட்டுமான பணியை தொடங்கி முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என ஆதிவாசி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பழங்குடியினர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி…! ஆட்சியர் அலுவலகத்தில் 10 ஆண்டுகளாக நடையாய் நடந்தும் பயனிலை…!

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது . கோத்தர் பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி ஊட்டி விவசாய நிலத்தை ஒருசிலர் அபகரித்ததாகவும், அதனை மீட்டுத்தரக் கோரியும் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கோத்தர் பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்கொலை முயற்சி நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.

இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் ஊட்டி அருகே கோக்கால் கிராமம் கோத்தர் பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த மோகன் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் 13 வயது மகள் உள்பட 6 பேருடன் வந்தார். அப்போது அவர்கள் அனைவரும் திடீரென தங்களின் உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறை உடனடியாக அவர்கள் 6 பேரையும் தடுத்து நிறுத்தி தீப்பெட்டியை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் தற்கொலைக்கு முயன்ற மோகன் குமார் கூறிகையில், கோக்கால் பகுதியில் எங்கள் தாய் வழி சமூகம் மூலம் எனக்கு பாத்தியப்பட்ட பாரம்பரிய நிலத்தில் 6 ஏக்கரை ஒருசிலர் ஆக்கிரமித்துள்ளனர். சுமார் 35 ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்பு தொடர்கிறது. நிலத்தின் சிட்டா உள்ளிட்ட ஆவணங்கள் எங்களது பெயரில் உள்ளது. இதுகுறித்து காவல் நிலையம், ஆர்.டி.ஓ., ஆட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனு கொடுத்து வருகிறேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாங்கள் சுமார் 40 சென்ட் நிலத்தில் கேரட் பயிரிட்டோம். ஆனால் ஒருசிலர் கேரட்டை அழித்துவிட்டு அவர்கள் தற்போது அவரை பயிரிட்டு உள்ளனர். நாங்களோ எங்களது குடும்பத்தை சேர்ந்தவர்களோ பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லை. மேலும் பழங்குடியின நிலத்தை பழங்குடியின சமுதாயம் அல்லாத ஒருவர் வாங்கியுள்ளார். எனவே போலியாக நடந்த பத்திரப்பதிவை ரத்து செய்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்தார்.

ஊட்டியில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு..!

நீலகிரி மாவட்டம், ஊட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் ஒரு பஜனை சபை செயல்பட்டு வருகிறது. இங்கு கிரீன்பீல்ட் பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். விழா காலங்கள் மற்றும் முக்கியமான நேரங்களில் இங்குள்ள பஜனை சபை கூடத்தில் வழிபாடு நடக்கும். இந்நிலையில் பஜனை சபை கூடத்தில் உள்ள அம்மன் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும் என்று ஊட்டி அனந்தகிரி பகுதியை சேர்ந்த அஸ்வின் என்பவரது மனைவி ஸ்வீட்டி பெட்ரீசியா என்பவர் பஜனை கூடத்தின் சாவியை கடந்த 9-ந் தேதி கோகுல்ராஜிடம் வாங்கியுள்ளார்.

இதன் பின்னர் பூஜை முடிந்து சாவியை ஒப்படைத்து விட்டார். இந்நிலையில் கோகுல்ராஜ் பஜனை சபை கூடத்திற்கு சென்றபோது அம்மன் கழுத்தில் அணியப்பட்ட 4 கிராம் தங்கத்தாலியை காணவில்லை. அப்போதுதான் அவருக்கு, அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ஊட்டி மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் கடந்த 9-ந்தேதி அம்மன் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும் என்று வந்த ஸ்வீட்டி பெட்ரீசியா தங்கத்தாலியை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காவல்துறை, ஸ்வீட்டி பெட்ரீசியாவிடம் இருந்த தங்கத்தாலியை மீட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குன்னூரில் பள்ளி மாணவர் மீது கொடூராக தாக்குதல்…!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூத்தூர்மட்டம் மகாலிங்கம் காலனி பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளி உதயசந்திரன். இவரது மகன் குன்னூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார்.இந்நிலையில் கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் பெற்றோர் மாற்றுச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்காமலே தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் தாமாகவே மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்ள கூறி இருக்கிறார். தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் மாணவனின் தாயாரை அழைத்து மாற்று சான்றிதழை கடந்த ஜூன் 21-ம் தேதி கொடுத்து அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் மாணவன் வேறு பள்ளிக்குச் செல்ல மனமில்லாமல் வீட்டில் அடம் பிடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாணவன் ஜூன் 22-ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து தான் அதே பள்ளியில் தான் படிக்க விரும்புவதாகவும், என் தாயாரிடம் மாற்றுச் சான்றிதழை கொடுத்து அனுப்பி உள்ளனர். மீண்டும் தன்னை அதே பள்ளியில் படிக்க வழி வகை செய்யுமாறும் மனு ஒன்றை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கொடுத்திருக்கிறார்.

இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீண்டும் மாணவனை அதே புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் என்னை மீறி மாவட்ட அலுவலரிடம் புகார் அளித்து மீண்டும் இதே பள்ளிக்கு வந்து விட்டாய் எப்படி நீ படிக்கிறாய் என்று பார்ப்போம் என்று சவால் விட்டு இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாணவன் விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் ட்ராக் சூட் உடை அணிந்து சென்ற பொழுது முறையாக ஆடை அணியவில்லை என கூறி மாணவனை தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் கம்பால் சரமாரியாக தலை மற்றும் கை கால்களில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவனின் தந்தை உதயச்சந்திரன் பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் மீது குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.