விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாதா கோயில் காவல்துறை பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை காவல்துறை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பருகம்பட்டு கிராமத்தில் ராகவன் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்காலில் இருந்து திருநாவலூர் ஏரிக்குச் செல்லும் கிளை வாய்க்கால் கரையின் மீது கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு கெபி என்று அழைக்கக்கூடிய சிறிய அளவிலான மாதா கோயிலை கிராம மக்கள் கட்டி வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் ராகவன் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கவிதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், ராகவன் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சிறிய அளவிலான மாதா கோயிலை இடித்து அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, ஆக்கிரமிப்பில் இருந்த மாதா கோயிலை இடிப்பது தொடர்பான நடவடிக்கைகளை வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஆனால் இதற்கு, அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாதா கோயிலை இடிக்காமல் நகர்த்தி வைப்பதற்கு தேவையான கால அவகாசம் அளிக்க வேண்டும் என கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று வருவாய் துறை அதிகாரிகள் பலமுறை கால அவகாசம் அளித்தனர். ஆனால், மாதா கோயிலை நகர்த்தி வைப்பதற்கான எந்த பணிகளையும் கிராம மக்கள் மேற்கொள்ளவில்லை.
இதையடுத்து, மாதா கோயிலை இடித்து அகற்றுவதற்கான நடவடிக்கையில் இன்று வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மாதா கோயில் இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, மாதா கோயிலை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாதா கோயிலை இடிக்க விடாமல் தற்கொலை மிரட்டல் விடுத்தும், மாதா சிலையை இடிக்க விடாமல் கட்டி அணைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுகட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இச்சம்பவத்தால் கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.