மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொண்ட 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கல்..!

தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 6 பத்திரிகையாளர்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள பத்திரிகையாளர் நலநிதித் திட்டத்தின் கீழ் ரூ.10,01,206/- நிதியுதவி வழங்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் 14.1.2008 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி புதிய திட்டமாக பத்திரிகையாளர் நல நிதியம் உருவாக்கப்பட்டது. அன்று அரசின் 1 கோடி ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ நிதியுதவி வழங்கிட வழி செய்யப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தி-மக்கள் தொடர்புத்துறையின் பத்திரிகையாளர் நல நிதித் திட்டத்தின் கீழ் 19.7.2022 அன்று பிறப்பித்த அரசாணையின்படி பத்திரிகையாளர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது ஏற்படும் மருத்துவச் செலவினை ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு நிதியுதவியாக ரூ 2 இலட்சத்து 50 ஆயிரம் வரையும் பத்திரிகையாளர் ஓய்யூதியம் பெறுபவர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதித் தொகையிலிருந்து 50 சதவிகித தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பத்திரிகையாளர் நலநிதித் திட்டத்தின் கீழ் இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமைச் செயலகத்தில் உடல் நலம் குன்றி மருத்துவம் சிகிச்சைகள் மேற்கொண்ட 6 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் 10 இலட்சத்து ஆயிரத்து 206 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

உயர்கல்வித் துறை தகவல்: புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் ரூ10,000 நிதியுதவி..!

தமிழக உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு ரூ75 லட்சம் அனுமதித்து இளநிலை/முதுகலை பொறியியல், முதுகலை தொழில் படிப்புகள் மற்றும் அறிவியல் பிரிவுகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கிறது. புதுமையான மாணவர் ஆராய்ச்சித் திட்டங்களை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வாயிலாக வேளாண்மை, உயிரியல், வேதியியல், பொறியியல், சுற்றுப்புறவியல், மருத்துவம், கால்நடையியல், இயற்பியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பிரிவுகளில் செயல்படுத்த ரூ10,000 வரை நிதியுதவியாக வழங்குகிறது.

மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட திட்டங்கள் வல்லுநர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கும் போது, ​​சமூகப் பிரச்சினைகளுக்கான பயன்பாடு மற்றும் பொருந்தக்கூடிய தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாணவர்களிடையே உள்ள அபரிமிதமான திறமைகள் நமது மாநிலத்தின் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியாக தீர்வு காண பயன்படுத்தப்படுகிறது. இந்த மாணவர் கண்டுபிடிப்புகள், வடிவமைப்பு, யோசனைகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டு மன்றத்தின் காப்புரிமை தகவல் மையம் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழ்களில் வெளியிட ஊக்குவிக்கப்படுகிறார்கள். இத்திட்டம் மாணவர் சமுதாயத்தை அறிவியல் மனப்பான்மையை நோக்கித் தூண்டுகிறது. இந்நிலையில் ஒப்புதல் பெறப்பட்ட 1010 மாணவர் ஆராய்ச்சி திட்டங்கள் மன்றத்தின் இணையதளத்தில் www.tanscst.tn.gov.in < http://www.tanscst.tn.gov.in > பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தமிழக உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்டை துரைமுருகனிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 2022-ம் ஆண்டு மே மாதம் காவல்துறை நடத்திய வாகன சோதனையில், பைக்கில் வந்த 2 பேர் வெடி பொருட்கள், துப்பாக்கிகளுடன் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி என்பதும் இருவரும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்புகளுடன் நேரடி தொடர்பு இருந்து வந்ததும் தெரிந்தது.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு இணையாக மற்றொரு புதிய அமைப்பை நிறுவி தமிழ்நாட்டில் ஆயுதப்புரட்சி முயற்சியில் ஈடுபட்டதும், இதற்காக யூடியூப் மூலம் துப்பாக்கி மற்றும் வெடி குண்டுகள் தயாரித்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு ஓமலூர் காவல் நிலையத்தில் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து கைதான 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் 2 பேரும் ஈடுபட்டு வந்ததும், அதற்கு திருச்சியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு மாநில செயலாளரும், யூடியூபரான சாட்டை துரைமுருகன், கோயம்புத்தூர் ஆலாந்துறையை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தொழில்நுட்ப பாசறை பிரிவு முன்னாள் நிர்வாகி ரஞ்சித்குமார், நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக உள்ள விஷ்ணு பிரதாப், முன்னாள் நிர்வாகி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பாலாஜி ஆகியோர் தொடர்பில் இருந்து வந்ததாகவும், ஆயுதப்புரட்சிக்கு தேவையான நிதி உதவியை இவர்கள் வெளிநாடுகளில் இருந்து பெற்று தந்ததாகவும் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தனர்.

அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள், சட்டவிரோத பண பரிவர்த்தனை உள்ளிட்ட ஆவணங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்தனர். அதில், சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன், விஷ்ணு பிரதாப், பாலாஜி, ரஞ்சித்குமார் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு நேரடி தொடர்பு இருந்தது உறுதியானது. அதற்கான ஆதாரங்களை என்ஐஏ அதிகாரிகள் சேகரித்தனர். பின்னர் அதிரடியாக கடந்த வாரம் சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன், விஷ்ணு பிரதாப், பாலாஜி, ரஞ்சித்குமாரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், வெளிநாடுகளில் இருந்து விடுதலை புலி அமைப்புகளிடம் பல கோடி ரூபாய் நிதி சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தெரியாமல் பெற்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு நேற்று சென்னையில் உள்ள என்ஐஏ மண்டல அலுவலகத்தில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது. அந்த சம்மனை தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு சாட்டை துரைமுருகன் மற்றும் இசை மதிவாணன் ஆகியோர் தங்களது வழக்கறிஞர்களுடன் ஆஜராகினார்.