நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள்… லாட்டரி விற்பனை படு ஜோர்!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள்… லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை..!!

நாமக்கல் மாவட்டத்தில்  ஆட்சியர் ச.உமா அவர்களின் தலைமையில் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் 30 -06-2023 (வெள்ளிகிழமை) நடைபெற்றது. இதில்,கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட அனைத்து மனுவிற்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

அப்பொழுது அரசு  மதுபான கடைகளுக்கு அருகில் சந்து கடைகள் இருப்பதாக அதிக அளவில் புகார்கள் விவசாயிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கூட்டத்தில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜூ இது குறித்து வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இதற்கு மட்டும் 300 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் இது  தொடர்புடைய 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இப்பொழுது சந்து கடைகள் எதுவும் இல்லை என்று காவல் கண்காணிப்பாளர் ராஜூ தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர் . ஈஸ்வரன் மேலும் பேசுகையில், காவல்துறை கூறியது போன்று சந்து கடைகள் எதுவும் மூடப்படவில்லை அதற்கு மாறாக அது அதிகரித்த வண்ணமே உள்ளது மற்றும் அதிக அளவில் லாட்டரி சீட்டுகளும் விற்கப்படுகின்றது என்று அவர் கூறினார்.

இதுமட்டுமின்றி, கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றது என்று தெரிவித்தனர் . இது குறித்து காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் தங்களை மிரட்டுவதாகவும் விவசாயிகள் கூறினர்.

மேலும் நாமக்கல் மாவட்டத்தின் ஆட்சியர் ச.உமா அவர்கள் உடனடியாக விவசாயிகளின் குறைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் உதவி ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

நாமக்கல் மோகனூர் சாலையில் இருக்கும் திருநகரில் வசித்து வரும் பூபதி நாமக்கல் நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பூபதி, ராசிபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, நிலப் பிரச்னை தொடர்பாக பணம் பெற்றிருக்கிறார் என்று இவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

அதேபோல், கடந்த 2020 – ம் ஆண்டு நாமக்கல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, கஞ்சா வியாபாரிகளிடம் ரூ.40 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்பட்டது. பூபதி இப்படி சம்பாதித்த பணத்தில், சொகுசு கார் மற்றும் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

அதன் அடிப்படையில்தான் இன்று காலை முதல் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சுபாஷினி தலைமையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, மல்லசமுத்திரத்தில் இருக்கும் இவரது தந்தை மற்றும் மாமனார் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக ரூ.7 லட்சம் நூதன மோசடி

நாடு முழுவதும் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் மேற்படிப்பிற்கு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் பலர் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்து இருந்தனர். அவர்களை குறி வைத்து அரசின் கல்வி உதவித்தொகை பிரிவில் இருந்து பேசுவதாக கூறி ஒரு கும்பல் மோசடியை அரங்கேற்றியது.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர் விவரங்களை ஆன்லைன் மூலமாக சேகரித்த கும்பல், அவர்களை செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு உங்களது மகன் மற்றும் மகளுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளது என அரசு அலுவலர்கள் போல் பேசி, அந்த கும்பல் வாட்ஸ் அப் ப்ரோபைலில் தமிழ்நாடு அரசின் லோகோவை வைத்துள்ளனர். தொடர்ந்து வாட்ஸ் அப்பில் கியூ.ஆர்.கோடு அனுப்பி உங்களுக்கு ஸ்காலர்ஷிப் பணம் அனுப்பி வைக்கப்பட்டதாக போட்டோ எடுத்து அனுப்பி உள்ளனர்.

இதனை உண்மை என நம்பி கியூஆர் கோடை அழுத்தியவுடன் அவர்கள் வங்கிக்கணக்கில் உள்ள மொத்த பணமும் மர்ம நபர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது. இதேபோல், கோயம்புத்தூரில் 7 பேரிடம் ரூ.7 லட்சத்திற்கும் மேல் மோசடி நடைபெற்றுள்ளது. அந்த கும்பலிடம் பணத்தை இழந்தவர்கள், கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தனர். இது குறித்து காவல் ஆய்வாளர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த மோசடியில் நாமக்கல் மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்த டேவிட், லாரன்ஸ்ராஜ், மாணிக்கம், சகாயராஜ், எட்வின் மற்றும் ஜேம்ஸ் ஆகிய 5 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே அவர்கள் 5 பேரும் கைது செய்து, இந்த கும்பலிடம் இருந்து 44 செல்போன்கள், 22 சிம்கார்டுகள், 7 ஏ.டி.எம். கார்டுகள், 1 காசோலை, 7 வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும் இதில் வங்கி கணக்குகள் மற்றும் சிம்கார்டு ஆகியவற்றை டெல்லி முகவரியில் வாங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் தமிழகம் முழுவதும் 500 பேரிடம் நூதன முறையில் பண மோசடி செய்து இருக்கலாம் என பது தெரிய வருகிறது.

கண்டு கொள்ளாத ஆட்சியர்: குறைத்தீர் கூட்டத்தில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகள் …!

நாமக்கல் மாவட்டம் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகளுடன் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பிரச்சினைகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த மாத கூட்டத்தில் அதிகாரிகள் செல்போன் பார்ப்பதை அறிந்த ஆட்சியர் அதிகாரிகள் கூட்டங்களில் பங்கேற்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்ற சில அதிகாரிகள் கூட்டத்தில் முறையாக விவசாயிகளின் பிரச்சினையை கவனிக்காமல் தங்களது செல்போன்களில் வீடியோ காட்சிகளை பார்த்துக் கொண்டும், சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பதை அதிகாரிகள் வாடிக்கையாகவே கொண்டுள்ளனர்.

ஆட்சியர் நடத்தும் குறைதீர் கூட்டதில் குறைகளை கேட்காமல் அலட்சியமாக செல்போன்களில் வீடியோ காட்சிகள் பார்த்துக் கொண்டு உள்ள அதிகாரிகளின் செயல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் மட்டுமல்லாது விவசாயிகளையும் அவமான படுத்தும் செயல் என சமூக ஆர்வலர்கள் வேதனை படுகின்றனர்

இலவச பயணச்சீட்டை தொலைத்ததுக்கு அபராதம்?

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நகரப் பேருந்தில் இலவச பயணச்சீட்டை தொலைத்த பெண்ணிடம் பரிசோதகர் ரூ.100 அபராதம் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் கையெழுத்திட்ட பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த 5 திட்டங்களில் ஒன்று மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணத் திட்டம். இதற்காக கடந்தாண்டு மட்டும் 1500 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்ட பிறகு டிக்கெட் அச்சடித்து வருவதற்கு சில நாட்கள் ஆனது. அப்போது டிக்கெட் இல்லாமல் தான் பயணம் செய்தனர். பின்னர், டிக்கெட் வந்த பிறகு பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் அனைவருக்கும் இலவச பயணச்சீட்டு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், ஒரு சில இடங்களில் போக்குவரத்து துறையில் பணிபுரியும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் இலவசமாக பயணம் செய்யும் பெண்களை ஏளனமாக பேசுவது, மீன் வியாபாரிகளை பேருந்தில் ஏற்றாமல் சென்றது. சரியான நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி இறக்கி விடாமல் போனது என பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்த வீடியோக்கள் வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின்னர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே பயணச்சீட்டு பரிசோதகர்கள் அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது தடன் எண் – R12 என்ற அரசு பேருந்து சேலத்தில் இருந்து ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளது. அதில் பயணம் செய்த சித்ரா என்ற பெண் மகளிருக்கு இலவசம் என்ற பயணச்சீட்டை பெற்றுள்ளார்.

ஆனால், கவனக்குறைவாக பயணச்சீட்டை சித்ரா தொலைத்து விட்டதாக பரிசோதகரிடம் கூறியுள்ளார். அதற்கு 100 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என பரிசோதகர் கூறியதும் அதிர்ச்சியடைந்த சித்ரா பெண்களுக்கு இலவசம் தானே என்று கூறியுள்ளார். ஆனாலும், அபராதம் கட்ட வேண்டும் என வற்புறுத்தியதால் செய்வது அறியாமல் தவித்ததை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவசம் என தமிழக அரசு அறிவித்துள்ளதே பிறகு ஏன் அபராதம் கட்ட வேண்டும் என பரிசோகரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர், அந்த பெண் அபராதம் செலுத்தவில்லை. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது