செருப்புக்காக நடந்த மோதலில் 11-ம் வகுப்பு மாணவன் மரணம்..!

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே வரகூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் இரு மாணவர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த மோதல் சம்பவத்தில் ஒரு மாணவர் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த நிலையில், ஆசிரியர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மற்றொரு மாணவர் தாக்கியதில் மயக்கமடைந்த மாணவன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்த மாணவன் ஓட்டுநர் ரமேஷ் என்பவரின் மகன் ஆகாஷ் என்பதும், அவர் அருகில் உள்ள நவலடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல், ஆகாஷை தாக்கி கொலை செய்த மாணவர், அருகில் உள்ள செல்லிபாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் மகன் என்றும் சொல்லப்படுகிறது.

வகுப்பறையில் சுவர் ஓரமாக வைக்கப்பட்டிருந்த ஆகாஷின் செருப்பை மாணவர்கள் யாரோ எடுத்து ஒளித்து வைக்க, அதனால் எழுத்த சந்தேகத்தில் சக மாணவர் ஒருவரோடு ஆகாஷ் வாக்குவாதம் செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து, மாணவர்களுக்குள் எழுந்த மோதலில், ஆகாஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மரணமடைந்த ஆகாஷின் உடல் உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆகாஷை அடித்துக் கொலை செய்ய அந்த மாணவரை காவல்துறை பிடித்து விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது போல போலி உத்தரவு தயாரித்து மோசடி..!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலுள்ள ரங்கம்மாள் அறக்கட்டளையானது, 1969 -ஆம் ஆண்டில் திரு. ஜே. கே. கே. நடராஜா என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வறக்கட்டளையின் கீழ் பொறியியல், மருந்தக கல்லூரி, பல் மருத்துவகல்லூரி, செவிலியர் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஆகியவற்றை துவக்கப்பட்டு நடத்தி வருகிறது.

இந்த ரங்கம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் ஆகியோர் வசித்து வந்தனர். இடத்தை காலி செய்யும்படி அறிவுறுத்தியும், அவர்கள் காலி செய்யாததால், அறக்கட்டளை நிர்வாகி செந்தாமரை, நாமக்கல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் செந்தாமரைக்கு சாதகமாக நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நீதிமன்ற ஊழியர்கள் அவர்களை காலி செய்ய முற்பட்டுள்ளனர்.

அப்போது தங்களை காலி செய்யும்படி நாமக்கல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதாகக் கூறி அதன் நகலை முருகானந்தம் கொடுத்துள்ளார். அந்த உத்தரவு போலியானது எனக்கூறி செந்தாமரை நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடமும் புகார் அளிக்கப்பட்டது.

அதையடுத்து இது தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. போலியாக உயர் நீதிமன்ற உத்தரவு தயாரித்தது குறித்து சிறப்புக்குழு அமைத்து விசாரிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பது. அதன்படி இதுதொடர்பாக CBCID விசாரிக்க காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு அனுமதி கொடுத்திருந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், 2 பேர் இறந்து விட்ட நிலையி்ல், மற்ற 2 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய முகாந்திரம் இல்லை எனக் கூறி நீதிபதிகள் விடுவித்தனர். பின்னர் அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மூவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து, அவர்களை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.

சிப்காட் வருவதை தவிர்க்க வலியுறுத்தி 47 வது கட்ட போராட்டம்..!

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், வளையப்பட்டி புதுப்பட்டி அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிப்காட் வருவதை தவிர்க்க வலியுறுத்தி இன்று சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் வளையப்பட்டியில் 47-வது கட்ட போராட்டம் நடைபெற்றது.இப் போராட்டத்திற்கு‌ விவசாயம் முன்னற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கம்யூனிஸ்ட் ரவீந்திரன், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், எதிர்ப்பு இயக்க பொறுப்பாளர்கள் சரவணன், பழனிவேல், தண்டபாணி, உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் குறிப்பாக சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை என்று கோஷங்கள் எழுப்பியதால் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வருகின்ற தை பொங்கல் அன்று சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கருப்பு பொங்கல் வைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு முன்னாள் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் தர்ணா..!

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்கிணறு ஊராட்சி நேரு நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய மற்றும் பல்வேறு கூலி வேலைகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் நேரு நகரில் கடந்த 2 வருடங்களாக தண்ணீர் வினியோகம் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர். இதனால் தண்ணீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்லும் நிலை உள்ளது.

மேலும் குடிநீர் வண்டி ரூ.500 வரை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே கூலி வேலைக்கு செல்வதால் குடிநீரை பணம் கொடுத்து வாங்க முடியாத நிலை உள்ளதாகவும், குடிநீர் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நேரு நகரை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

செண்டை மேளம் முழங்க… கதகளி நடனமாடி… ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட்டம்

கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி 10 நாட்கள் நடைபெறும் ஓணம் பண்டிகையை, கேரளாவில் வாழும் தமிழர்களும் வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு கொண்டாட்டங்கள் கேரளா மாநிலத்தின் நடைபெற்று வருகிறது. அதேபோல தமிழகத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகளில் ஓணம் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செயல்பட்டு வரும் கே.எஸ்.ஆர். கல்லூரி செயல்பட்டு வருகிறது. வருகின்ற ஆகஸ்ட் 29-ம் தேதி மலையாளிகளின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாட இருப்பதால் கே.எஸ்.ஆர். கல்லூரி மாணவிகள் ஓணம் பண்டிகையை கல்லூரி வளாகத்தில் கேரளா மாவேலி மன்னன் வேடமணிந்து வந்தனர்.

மேலும் கேரளா பாரம்பரிய கலாச்சாரங்களை சித்தரிக்கும் தெய்யம் விளக்கு கட்டு செண்டை மேளம் மற்றும் சிங்காரி மேளம் உள்ளிட்ட பல்வேறு வகையான இசை நிகழ்ச்சியுடன் ஊர்வலம் வந்தனர். பிறகு கல்லூரி கலையரங்கத்தில் அத்தப்பூ கோலம் போட்டு அதைச் சுற்றி நடனங்கள் ஆடி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் ஓணம் விழாவில் கே.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் அனைத்து முதல்வா்கள், இயக்குநர்கள், கல்வி வளா்ச்சிக் குழு தலைவா், பேராசிரியா்கள் மேலும் பலர் கலந்துகொண்டனா்.

மத்திய அரசு புதிய சட்ட வரைவுகளைக் கொண்டு வந்துள்ளதை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை மாற்றி புதிய சட்ட வரைவுகளைக் கொண்டு வந்துள்ளதை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர்கள் 3-வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்தனர்.

சந்திரயான் -3 வெற்றியில் நாமக்கல் மண் புதைந்து கிடக்கிறது…

இந்தியா கடந்த ஜூலை 22, 2019-ம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திராயன் 2-ல் இருக்கும் ஆர்பிட்டர் அதே வருடம் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் லேண்டர் விக்ரம் தரையில் இறங்கும் முன் 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. 3 மாதமாக இஸ்ரோ தீவிரமாக தேடியது அனாலும் பலனில்லை நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியதை நாசாவின் LROC (Lunar Reconnaissance Orbiter) விண்கல ஆய்வு கருவி மூலம் கண்டுபிடித்தது.

சந்திரயான் 2-ன் லேண்டர் இறங்காத காரணத்தால் உள்ளே இருக்கும் ரோவரும் வெடித்து சிதறியது. ஆனாலும் இந்த திட்டம் முழு தோல்வி கிடையாது. காரணம் ஆர்பிட்டர் வெற்றிகரமாக அடுத்த ஒன்றரை வருடம் நிலவை சுற்றியது. இதையடுத்து விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டையும் மீண்டும் நிலவில் வெற்றிகரமாக களமிறக்கும் திட்டத்தில் இஸ்ரோ களமிறங்கியது. சந்திரயான் -3 திட்டத்தில் சந்திரயான் -2ல் இருந்தது போல ஆர்பிட்டர் இருக்காது. மாறாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டு மட்டுமே உள்ளது.

இதில் ப்ரோபல்ஷன் மாடல் என்ற ஒரு உந்த கூடிய ப்ரோபல்ஷன் என்ற பகுதியும் உள்ளது. இதுதான் இந்த லேண்டர், ரோவரை நிலவிற்கு கொண்டு செல்லும். இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இதற்கு இந்த சந்திரயான் -3 திட்டத்தின் ரோவர் மற்றும் லேண்டர் நிலவின் தரையில் தரையிறங்குவதற்காக இங்கேயே இஸ்ரோ ஆய்வு மையங்களில் பயிற்சிகள் செய்யப்பட்டன. இந்த இரண்டும் நிலவில் இறங்குவதற்காக பூமியில் வைத்து சோதனைகள் செய்யப்பட்டது.

இதனால் இஸ்ரோ பூமியிலேயே நிலவு போன்ற சுற்றுசூழலை ஏற்படுத்தி ஆராய்ச்சி கூடத்தில் வைத்து ஆராய்ச்சியை செய்தது. அதாவது ஆராய்ச்சி கூடத்தில் நிலவில் இருப்பது போலவே ஈர்ப்பு விசை வைத்து, அங்கு இருக்கும் வாயுக்களை மட்டும் பயன்படுத்தி,மிக மிக குளிரான வானிலையில், விக்ரம் லேண்டர் சரியாக இறங்குகிறதா என்று சோதனை செய்தது. இதற்காக நிலவில் இருப்பது போல தரையும், மண்ணும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிலவில் ஆராய்ச்சி செய்ய சந்திரயான் -1ஐ அனுப்பிய போது இஸ்ரோ நாசாவிடம் இருந்து மண் வாங்கியது. இது நிலவில் இருப்பதை போலவே இருக்கும் மண் ஆகும். ஒரு கிலோ 150 டாலர் என்ற வீதம் மொத்தம் 10 கிலோ மண்ணை இஸ்ரோ வாங்கியது. ஆனால் சந்திரயான் -2விற்கு 60 கிலோ வரை இந்த மணல் தேவைப்பட்டது. பட்ஜெட் காரணங்களால் இந்தியா நாசாவிடம் இருந்து மணல் வாங்கவில்லை, அதற்கு பதிலாக நாமக்கல் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களில் இருந்து இஸ்ரோ மண் வாங்கி உள்ளது. அதே மண்ணைதான் இப்போது சந்திரயான் -3 திட்டத்திற்கும் இஸ்ரோ பயன்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் சிட்டாம்பூண்டி, குன்னமலை ஆகிய கிராமங்களில் இருந்து மண் வாங்கி உள்ளது. இங்கு இருக்கும் பாறைகளை வாங்கி, அதை சேலத்தில் உள்ள தொழிற்சாலையில் தூளாக நொறுக்கி உள்ளனர். அதன் மூலம் கிடைத்த மண் நிலவில் இருக்கும் மணலை போலவே இருந்துள்ளது. பின் அதை வைத்து வைத்து ஆராய்ச்சியை, சோதனையை செய்து பார்த்து இருக்கிறார்கள். தற்போது சந்திரயான் -3 விண்ணில் ஏவப்பட்டு, நிலவில் இறங்க உள்ளது.

போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சிக்குட்பட்ட வி.மேட்டூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் சிலரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முருகேசனை குமாரபாளையம் காவல்துறை கைது செய்தனர். இந்நிலையில் முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி நேற்று குமாரபாளையம் காவல் நிலையம் முன்பு வி.மேட்டூரை சேர்ந்த பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாத்தா-பாட்டிக்கு சிலை வைத்து வழிபடும் பேரன்கள் மற்றும் பேத்திகள்…!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மங்களபுரம் ஊராட்சி தாண்டாக்கவுண்டன் புதூர் அருகே உள்ள அத்திமரத்து குட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யமுத்து, இவரது மனைவி அய்யம்மாள். அய்யமுத்து ராமாயிபட்டியிலுள்ள இருசாயி கோவில் பூசாரியாக பல ஆண்டுகள் இருந்து வந்து போது மக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தார்.

இந்நிலையில் அய்யமுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமும், அவரது மனைவி அய்யம்மாள் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதமும் காலமானார்கள். அய்யமுத்து உயிருடன் இருக்கும்போதே இறந்த பிறகு தனக்கு சொந்தமான நிலத்தில் தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என கூறி வந்த நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் அய்யமுத்துவை அடக்கம் செய்தனர்.

ஆனால் பூசாரி அய்யமுத்து உயிருடன் இருக்கும்போது எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினாரோ, அதே இடத்தில் அய்யமுத்து, அவரது மனைவி அய்யம்மாளுக்கு சிலை வைக்க அவரது பேரன்கள், குடும்பத்தினர், உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி அவர்களுக்கு கோவில் கட்டி முழு உருவச்சிலை வைத்தனர். அய்யமுத்துவின் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்றுமுன்தினம் வேம்பு அரச மரத்தடியில் விநாயகர் சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினர்.

இதனையடுத்து அய்யமுத்து-அய்யம்மாள் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து குடும்பத்துடன் அவர்கள் வழிபட்டனர். தாத்தா-பாட்டிக்கு சிலை வைத்து வழிபட்ட பேரன்கள் மற்றும் பேத்திகளின் செயல் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி 1,008 பால்குட ஊர்வலம்

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஆடி மாத கடைசி  நேற்று வெள்ளியையொட்டி தமிழகமெங்கும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தாிசனம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த ஒருவந்தூரில் பிரசித்தி பெற்ற பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள், விநாயகர் வழிபாடு செய்தனர். தொடர்ந்து 1,008 பால்குடங்களை எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

இதையடுத்து மூலவர் செல்லாண்டியம்மனுக்கு 1,008 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.