திருமுருகன் காந்தி: நீங்கதான் வீரன் ஆச்சே..! ஆதாரத்தை குடுங்க சீமான்..!

சீமான்தான் வீழ்ந்து விடாத வீரன், மண்டியிடாத மானம் என்று டயலாக் பேசுகிறாரே அப்போது தைரியமாக ஆவணத்தை பொது வெளியில் வெளியிடட்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து சில கருத்துக்களை பேசியது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சீமானின் தொடர் சர்ச்சை பேச்சால் சீமானின் வீடு இன்று முற்றுகை இடப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. இதையடுத்து நீலாங்கரையிலுள்ள சீமான் வீடு முன்பு காவலர்கள் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து சீமானின் வீட்டை முற்றுகையிட வந்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரியார் குறித்து அவதூறாக பத்திரிகையாளர் முன்புதான் பேசினார். அப்போது, அவர்கள் முன்பே பெரியார் தொடர்பான ஆதாரத்தைக் காட்ட வேண்டியதுதானே. டயலாக் பேசுவதற்கு மட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு. ஆனால் மன்னிப்பு கேட்பது மட்டும் நீதிமன்றத்திலா… பொது வெளியில் கேட்டால் சீமான் பதில் சொல்லமாட்டாரா… பதில் சொன்னால் என்ன பிரச்னை ஆகிவிடும். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் ஆவணத்தை பொது வெளியில் வெளியிடட்டும். அது என்ன ரகசிய ஆவணமா… ரகசியமாக சீமானே தயாரித்து வைத்திருக்கிறாரா. நீங்கள்தான் வீழ்ந்து விடாத வீரன், மண்டியிடாத மானம் என்று டயலாக் பேசுகிறீர்கள். அப்போது தைரியமாக ஆவணத்தை பொது வெளியில் வெளியிடுங்கள்.

பெரியார் குறித்த அவதூறுக்கான எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் அந்தப் புத்தகத்தை படித்துள்ளோம். சீமான் கூறும் ஆதாரம் எல்லாம் பாஜகவினர் எழுதிய புத்தகம். சீமானுக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லை. அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகம் என்று கதை விடுகிறார். சீமான் எந்த புத்தகமும் படிக்காமல் வாய்க்கு வந்ததை உளறுகிறார். இவர்களுக்கு எல்லாம் இதைப் பற்றி எந்தவொரு அக்கறையும் கிடையாது. பிரபாகரன் குறித்து அவதூறு பேசுவது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இழிவுபடுத்துவது, தந்தை பெரியாருக்கு எதிராக அவதூறு பரப்புவது இதுதான் அவர்களுடைய அரசியலாக இருக்கிறது.

இதற்குப் பின்னரும் தமிழக மக்கள் அமைதி காக்க மாட்டார்கள். தமிழினத்திற்காக உழைத்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதை, அதை வைத்து சம்பாதிப்பதை, பிஜேபி, RSS அமைப்புகளுக்கு கூலி வேலை பார்ப்பதை தமிழக மக்கள் என்றைக்கும் அனுமதித்து நாங்கள் பார்த்ததில்லை. இவர்கள் நிச்சயமாக விரட்டி அடிக்கப்படுவார்கள். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர் கோவை ராமகிருஷ்ணன் சீமானிடம் பெரியார் குறித்த ஆதாரத்தை கொடுக்குமாறு கேட்டார். ஆனால், சீமான் அதற்கான எந்தவிதமான பதிலையும் கூறவில்லை. அதற்குப் பின்னரும் தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பேசி வருகிறார். இப்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் சீமானிடம் கேள்வி கேட்பதற்காக வந்திருக்கிறோம்.

இதற்கும் சீமான் பதில் சொல்ல வரவில்லை என்றால் அடுத்தகட்டமாக எங்கு அரசியல் செய்கிறாரோ அந்த தேர்தல் களத்தில் அதற்கான எதிர்ப்பை தொடர்ச்சியாக தெரிவிப்போம். எந்தவொரு பிரச்னைகளுக்கும் சீமான் எதுவும் இதுவரை பேசவில்லை. இதுவரை எந்தவொரு பிரச்னைக்காகவும், சிக்கல்களுக்காகவும் மக்களுக்காக சீமான் வந்து நின்றது கிடையாது. மீனவப் பிரச்னை முதல் ஜாதிப் பிரச்னை வரை எந்த மக்கள் பிரச்னைக்காகவும் அவர் வந்ததில்லை. ஆதரவு தெரிவிப்பது, அறிக்கை அளிப்பது, பத்திரிகையாளர் முன்பு தைரியம், வீரம், கொச்சை பேசுவதை தவிர சீமான் எதுவும் செய்யவில்லை. சீமானின் அச்ச உணர்வையும், கோழைத்தனத்தையும் அம்பலப்படுத்துவதே எங்கள் வேலை. சீமான் பாஜகவுடன் வெளிப்படையாக நிற்கிறார். சீமானுக்குப் பொய் செல்வது மட்டுமே வேலை என திருமுருகன் காந்தி விமர்சனம் செய்தார்.

சென்னையில் திடீரென முளைத்த போஸ்டர்களால் பரபரப்பு…!

“அண்டப் புளுகனோடு இனியும் இருக்கப் போவதில்லை.. மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை” என்ற போஸ்டர்கள் தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே சினிமா, அரசியல் மற்றும் மக்களின் பொது நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் போஸ்டர் கலாசாரம் மக்களோடு மக்களாக இரண்டற கலந்த ஒன்றாகும்.

அதிலும் குறிப்பாக அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சி நிர்வாகிகளும் பொது மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்க்க போஸ்டர்கள் ஒட்டுகின்றனர். அப்படி, ஒரு போஸ்டர் தான் இன்று தமிழகத்தில் தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டு தமிழக அரசியல் களத்தையே பரபரப்பாக்கி உள்ளது.

“அண்டப்புளுகனோடு இனியும் இருக்கப்போவதில்லை, மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை” என்ற வாசகங்களுடன், வேறு எந்தக் குறிப்பும் இன்றி சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், இதனை யார் வடிவமைத்தது, எந்தக் கட்சிப் பொறுப்பாளர் என எந்த விவரங்களும் இல்லை. இந்த போஸ்டரை பலரும் பார்த்து, இந்த போஸ்டரில் குறிப்பிடப்படுவது யாராக இருக்கும் என கேள்வி எழுப்பி விவாதித்து வருகின்றனர். அரசியல் ரீதியான போஸ்டர் தானா? அல்லது வேறு எதும் விளம்பரமா? என்றும் தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகள், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதற்கிடையே பெரியார் பற்றி சீமான் பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய வரும் நிலையில், சீமானுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரம் அடைந்துள்ளன.

இப்படியான சூழலில், பெயர் குறிப்பிடாமல் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளன. கட்சிக்கார்களா? அல்லது எதிர்க்கட்சியினரா? இந்த போஸ்டர்களை யார் ஒட்டியது என தெரியாமல் மக்கள் குழம்பி வருகின்றனர்.

சீமான்-நாதக நிர்வாகிகள் நேருக்கு நேர் மோதல்..! நிர்வாகிகளை அடிக்க பாய்ந்த சாட்டை துரைமுருகன்..!

திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் இளைஞர் அணி பாசறை நிர்வாகி, தொகுதி செயலாளர்களை சீமான் ஒருமையில் பேசியதால் தள்ளு முள்ளு, சலசலப்பு ஏற்பட்டதால், மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். இதையொட்டி பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் துவங்குவதற்கு முன்பாக பங்கேற்க வந்த நிர்வாகிகள், தொண்டர்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வாங்கி வைக்கப்பட்டது. இது அவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இத்தனை தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சீமான், வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து பேசினார். கட்சியின் நிர்வாகிகள் யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன் எழுந்து பேச முயற்சித்தார். அப்போது, ‘இது என் கட்சி, இங்கு நான் மட்டும்தான் பேசுவேன்’ எனக்கூறிய சீமான் அவரை நோக்கி, ‘நீ யார், சாதிய அடிப்படையில் செயல்படுகிறாய், வெளியே போ’ என அவரை ஒருமையில் திட்டினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், ‘பார்வீன் கடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் நல்லமுறையில் கட்சி பணியாற்றிவர். யாரோ ஒருவர் கூறியதை வைத்து அவரை திட்டுவது சரியல்ல. சாட்டை துரைமுருகன் கூட சாதிய ரீதியில் பேசி வருகிறார். அவரை நீங்கள் கண்டிக்கவில்லையே’ எனக் கூறியதை தொடர்ந்து, அந்தோணி விஜயையும் நீயும், வெளியோ போ என சீமான் ஒருமையில் திட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகன் கெட்டவார்த்தையால் திட்டி அவரை அடிக்க பாய்ந்ததால் கூட்டத்தில் சலசலப்பு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைதொடர்ந்து கூட்டத்தை விட்டு மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், அம்பை தொகுதி பொறுப்பாளர் சார்லஸ், ராதாபுரம் தொகுதி துணைத் தலைவர் சந்திரமோகன், பாளையங்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் அரசகுமார் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பாதியில் வெளியேறினர்.

இந்நிலையில், திருநெல்வேலி விகேபுரம் தனியார் திருமண மண்டபத்தில் சீமானை மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதன்பின்னர் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ‘மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றவிடாமல் தடுப்பதற்காக எனது தலைமையில் வரும் டிசம்பர் மாதம் மாஞ்சோலைக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும்’ என்றார். தொடர்ந்து, நெல்லை ஆலோசனை கூட்டத்தில் நடந்த மோதல் பற்றி கேட்டபோது, கட்சியின் தலைவர் என்பவர் அன்பான சர்வாதிகாரியாக இருந்தால் மட்டுமே கட்சியை வழி நடத்த முடியும்’ என சீமான் தெரிவித்தார்.

நிர்வாண வீடியோ வெளியிடுவதாக கூறி மிரட்டும் நாதக நிர்வாகி மீது சைபர் கிரைமில் புகார்..!

நிர்வாண புகைப்படம், வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக பெண்ணை மிரட்டிய நாதக நிர்வாகி மீது திருச்சி மாவட்ட சைபர் கிரைமில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த பெண் திருச்சி மாவட்ட சைபர் கிரைமில் அளித்துள்ள புகாரில் நான் பி.எஸ்சி பட்டதாரி. விவாகரத்துக்குபின் திருச்சி, வயலுார் பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் வரவேற்பாளராக 2017 முதல் 2019 வரை வேலை செய்தேன்.

அப்போது மேலாளராக இருந்தவரின் உறவினரான நாதக நிர்வாகி இலங்கை தமிழர் இளங்கோ அங்கு வந்து என்னுடன் அறிமுகமானார். லண்டனில் சூப்பர் மார்க்கெட் துவங்கவுள்ளதாகவும், அதற்கு திருச்சியில் இருந்து மளிகை பொருட்களை கொள்முதல் செய்து அனுப்பி வைக்குமாறும் கூறி மாதம் ரூ.20 ஆயிரம் கொடுத்தார். பின்னர் துபாயில் என் பெயரில் ஒரு நிறுவனம் தொடங்குவதாகவும், அதற்கு உரிமம் பெற என்னை துபாய் அழைத்தார்.

அதற்காக 2 நாட்கள் நான் துபாய் சென்றபோது நான் ஆடை மாற்றுவதையும், குளிப்பதையும் எனக்கு தெரியாமல் இளங்கோ புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இந்நிலையில் எனக்கும் ஈரோட்டை சேர்ந்த வாலிபருக்கும் மறுமணம் நடந்தது. கணவரை விட்டு லண்டனுக்கு வந்து விடு, இல்லாவிட்டால் ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டினார்.

இதனால் நான் கடந்த 21.7.2024 ல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன். ஆனால், இரண்டாவது கணவர் காப்பாற்றி விட்டார். இளங்கோ தொடர்ந்து என் அந்தரங்க புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டி வருகிறார் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின்பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் நாதக நிர்வாகி இளங்கோ மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.