தாயின் கண்ணெதிரே நடந்த கொடூரம்… தண்ணீர் டேங்கர் லாரி மோதி மாணவி உயிரிழப்பு…!

செங்கல்பட்டு மாவட்டம் கோவிலம்பாக்கம் அடுத்த நன்மங்கலம் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாய் வெங்கடேஷ் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணமாகி கீர்த்தி என்ற மனைவியும், லியோரா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கீர்த்தி சென்னை மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பிரின்ஸ் ஸ்ரீவாரி வித்யாலயா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர் பணிபுரியும் அதே பள்ளியிலேயே அவரது மகள் லியோரா ஸ்ரீ 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

 

இந்நிலையில், நேற்று கீர்த்தி வழக்கம்போல் தனது மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். கோவிலம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அந்த சாலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாகனங்கள் மெதுவாகச் சென்றன.

இந்நிலையில், கீர்த்தி கோவிலம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பெட்ரோல் பங்க் எதிரே சென்றார். அப்போது வாகனம் சாலையில் உள்ள குழியில் ஏறி இறங்கியது. இதனால், நிலை தடுமாறிய லியோரா ஸ்ரீ வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி லியோரா ஸ்ரீ மீது ஏறி இறங்கியது. இதனால், லியோரா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனால், இதை கவனிக்காத லாரியின் ஓட்டுநர் தொடர்ந்து லாரியை இயக்கினார். உடனே சாலையில் சென்ற பொதுமக்கள் கூச்சலிட்டனர். அதன்பிறகு, லாரியின் ஓட்டுநர் லாரியை நிறுத்தி அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்றார். அதனைத் தொடர்ந்து, இந்த சாலையில் இதுபோன்ற தண்ணீர் லாரிகள் அதிவேகமாக வருவதாகவும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்யும்படியும் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தண்ணீர் லாரி பள்ளி மாணவியின் மீது ஏறி இறங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.