புதுக்கோட்டை, மேல மூன்றாம் வீதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி சுகன்யா என்பவர் நச்சாந்துபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். சுகன்யா, கடந்த ஒன்றரை மாதங்களாக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வராமல் அடிக்கடி விடுப்பு எடுத்திருக்கிறார். இதற்கிடையே, தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வரவில்லை ஆகையால், இது குறித்து பணியாளர்கள் வட்டார மருத்துவ அலுவலர் மனோஜிடம் புகாரளித்துள்ளனர். இது குறித்து மனோஜ், சுகன்யாவிடம் கேட்டபோது, அதற்கு மழுப்பலாக பதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சந்தேகமடைந்த மருத்துவ அலுவலர் மனோஜ், சுகன்யாவின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்து பார்த்தபோது, ஆரம்ப சுகாதார நிலைய வங்கிக் கணக்கிலிருந்து உதவி கணக்காளர் சுகன்யாவின் வங்கிக் கணக்குக்குப் பணம் மாற்றப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ், புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 409, 419, 420 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, சுகன்யாவைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
மேலும் விசாரணையில், சுகன்யா கடந்த ஆறு மாதங்களாக சுகாதார நிலையத்துக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் வந்த பணம் மற்றும் கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத் தொகை என மொத்தம் 11,31,909 ரூபாயை நச்சாந்துபட்டி வட்டார மருத்துவ அலுவலராக இருக்கும் மருத்துவர் மனோஜின் கையொப்பத்தை போலியாகப் பதிவிட்டு மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சுகன்யாவை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.