சேலத்தை அடுத்த வலசையூரைச் சேர்ந்த சபரி சங்கர், சேலம் அம்மாபேட்டையில் எஸ்விஎஸ் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நகைக்கடை தொடங்கினார். பின்னர், சேலம் மாவட்டத்தில் சீலநாயக்கன்பட்டி, தாரமங்கலம், ஆத்தூர் மற்றும் நாமக்கல், திருச்செங்கோடு, கரூர், அரூர், தர்மபுரி, திருச்சி, மற்றும் கோவை ஆகிய இடங்களிலும் கிளைகளைத் தொடங்கினார். இங்கு நகை விற்பனை மட்டுமின்றி, நகை சீட்டு திட்டம், பழசுக்கு புதுசு என்ற பெயரில் பழைய நகைகளுக்குப் புதிய நகைகள் வழங்குவது, டெபாசிட்டுக்கு 2.50 ரூபாய் வட்டி எனப் பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் மூலம் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் அபிமானத்தை இந்த நிறுவனம் பெற்றது.
மேலும் பழைய நகைக்கு அதே மதிப்பில் புதிய நகைகள் விற்பனை, செய்கூலி, சேதாரத்தில் சலுகை, இலவச பரிசுகள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தின் நகை சீட்டு திட்டத்தில் கோடிக்கணக்கில் கொட்டினர். நகை சீட்டுத் திட்டம் குறித்து புரமோஷன் செய்வதற்காகவே ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்களை ஒவ்வொரு கிளைகளிலும் சபரி சங்கர் பணிக்கு அமர்த்தி இருந்தார்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்த எஸ்விஎஸ் ஜூவல்லர்ஸ் நகைக்கடைகள் மூடப்பட்டன. ஒரே நேரத்தில், வெளியூர்களில் இயங்கி வந்த கிளை நிறுவனங்களும் மூடப்பட்டன. தீபாவளி நகை சீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள், பண்டிகையையொட்டி புதிய நகைகளை வாங்குவதற்காக இந்தக் கடைக்குச் சென்றபோதுதான், கடைகள் மூடப்பட்டு இருந்த விவரமே அவர்களுக்குத் தெரிய வந்தது.
இதற்கிடையே, பல கோடி ரூபாய் நகை, பணத்துடன் கடை உரிமையாளர் சபரி சங்கர் தப்பி ஓடிவிட்டதாக தகவல் பரவியது. இந்தக் கடையில் வேலை செய்து வந்த ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே சரியாக சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஊழியர்கள், சீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள எஸ்விஎஸ் நகைக்கடைகளின் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரத்தில் செயல்பட்டு வந்த எஸ் வி எஸ் நகைக்கடை மாதந்தோறும் ஏழை, எளிய மக்கள் மாதம் ஆயிரம் ரூபாய் மாதாந்திர நகைச்சீட்டில் பணம் செலுத்தியுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே எஸ்விஎஸ் ஜூவல்லர்ஸ் மக்களின் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்ததால் செய்வதறியாது திகைத்த ஏழை, எளிய மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளனர். நகை சீட்டு மற்றும் டெபாசிட்டு தொகைக்கு அதிக வட்டி தருவதாக ஆசை வலை விரித்து 100 கோடி ரூபாய் வரை சுருட்டிக்கொண்டு தலைமறைவான நகைக்கடை அதிபரால் பணத்தை இழந்த பொதுமக்கள் செய்வதறியாது உள்ளனர்.