மதுபோதையில் பொதுமக்களை துரத்தி துரத்தி தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கடை ஒன்றுக்குள் புகுந்து மற்றும் வாகனங்கள் மீது வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு சிறு குறு பெரிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பனியன் நிறுவனங்கள், விவசாய தோட்டங்கள், பண்ணைகளில் வடமாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் பலரும் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இங்கு பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் சிலர் சிக்கன் கடை ஒன்றிற்குள் புகுந்து பொதுமக்களையும், வாகனங்களையும் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் பேருந்து நிறுத்தம் பகுதியின் அருகில் உள்ள மதுபானக் கடையில் தகராறு ஏற்பட்டதால், கையில் கட்டைகளுடன் துரத்தி துரத்தி பொதுமக்கள் மீதும், வாகனங்கள் மீது ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.