தவெக அறிவிப்பு: அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை..!

தமிழக வெற்றிக்கழகம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.

எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது என எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் துணியை காணும், பைக்கை காணும்னு வரீறிங்க..!

கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த அபிஜித் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள கால்சென்டர் ஒன்றில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார். அந்நிறுவனத்தில் பணிபுரியும், 30க்கும் மேற்பட்டோருக்கு, சேலம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஜக்கப்பன் நகரில் உள்ள ஒரு அப்பார்ட்ண்ட்மென்டில் தங்குவதற்கும் அந்நிறுவனமே ஏற்பாடு செய்துள்ளது.

அபிஜித், தனக்கு வரும் வருமானத்தை காண்பித்து, வங்கியில் கடந்த, 2023 ஜூலையில் யமஹகா, ஆர்.15 பைக் வாங்கியுள்ளார். கடந்த, 3-ம் தேதி பணி முடிந்து தான் தங்கியுள்ள அபார்ட்மெண்ட் கீழ்தளத்தில் பைக்கை நிறுத்தி சென்றுள்ளார். மறுநாள் காலை வந்தபோது பைக்கை காணவில்லை. இது குறித்து அப்பார்ட்மண்ட் மற்றும் அருகிலுள்ள ‘சிசிடிவி’ காட்சிகளை அபிஜித் பார்த்துள்ளார். அப்போது அப்பார்ட்மெண்டிலிருந்து பைக்கை ஒரு நபர் எடுப்பதும், அந்த சாலை வழியே மூன்று பேர் பைக்கை திருடி சென்றதும் தெரிந்தது. இந்த ஆதாரங்களை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் அன்றைய தினமே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், அபிஜித்தை அவர் பணிபுரியும் நிறுவனம் பணி நீக்கம் செய்தது. அவர் தங்கியிருந்த அபார்ட்மண்டையும் காலி செய்யுமாறு கூறியுள்ளது. இது குறித்து அபிஜித் கூறுகையில், நான் என் வேலையை நம்பி கடந்தாண்டு பைக் வாங்கினேன். இன்னும், 2 வருட தவணை மீதம் உள்ளது. இந்நிலையில் என் பைக்கை, மூன்று நபர்கள் திருடியுள்ளனர். ‘சிசிடிவி’ ஆதாரங்களுடன் புகாரளித்தும் காவல்துறை, புகாரை வாங்க மறுக்கின்றனர். ‘பைக்கை நன்றாக தேடி பார்த்துட்டு வாங்க’ என்கின்றனர். ‘தேர்தல் நேரத்தில் துணியை காணும், பைக்கை காணும்னு வரீறிங்க’ எனவும் திட்டுகின்றனர்.

ஆதாரத்தோடு புகாரளித்தும் காவல்துறை புகார் வாங்க மறுக்கின்றனர். நீங்கள் காவல் நிலையத்திலேயே பணிபுரியுங்கள் எனக்கூறி வேலையிலிருந்தும் என் நிறுவனம், என்னை நீக்கியுள்ளது. தங்கும் இடத்தையும் காலி செய்ய சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் திருடு போனால் காவல்துறை நடவடிக்கை எடுக்காதா, ஆதாரங்களை வழங்கியும் அலைக்கழித்து, புகார் மனுவை பெற்று ரசீது கூட வழங்கவில்லை. இது குறித்து மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளிக்க உள்ளேன் என அபிஜித் புலம்பியுள்ளார்.