“14 + 1 மாநிலங்களவை இடம் தருவோர் உடன் கூட்டணி அல்லது தனித்துப் போட்டி”

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் திமுக முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட உள்ளது. அதேசமயம் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் தவித்து வருகின்றன.

கடந்த முறை பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், இந்த முறை, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எந்த அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து ஆலோசனை கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. அதில் மக்களவைத் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “இன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும், தேமுதிக இந்த முறை தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கூறினார்கள். காரணம், கட்சியின் தலைவர் விஜயகாந்த் இல்லாமல் நாங்கள் சந்திக்கப்போகும் முதல் தேர்தல் இது.

விஜயகாந்த்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று அவரது நினைவிடத்தில் நாள்தோறும் மக்கள் குற்ற உணர்வுடன் கண்ணீர் சிந்துவதை நான் பார்க்கிறேன். எனவே, விஜயகாந்தின் மரணத்துக்கு வந்தது ஏதோ அனுதாப அலை என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். இது அனுதாப வாக்குகளாக மாறும், இதை அனுதாபம் என்று நினைத்துவிடாதீர்கள். எனவே, இத்தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் தேமுதிகவைச் சேர்ந்த அனைத்து மாவட்டச் செயலாளர்களின் கருத்து.

ஒன்று அதிமுக கூட்டணி, மற்றொன்று திமுக கூட்டணி, பிறகு பாஜக கூட்டணி இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவது என மொத்தம் 4 வழிகள்தான். எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் கருத்து தனித்துப் போட்டியிடுவது. அல்லது, மீதமுள்ள 3 கூட்டணிகளில் யார் தேமுதிகவுக்கு அதிகமான இடங்களை, அதாவது 14 மக்களவை இடங்கள், ஒரு மாநிலங்களவை இடம் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைக்கலாம் என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தங்களது இறுதி முடிவாக அறிவித்துள்ளனர்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவுருவச் சிலையை நிறுவ அனுமதிகோரி வட்டாட்சியரிடம் மனு..!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி தொகுதிக்கு உட்பட்ட குள்ளஞ்சாவடி குறிஞ்சிப்பாடி, மீனாட்சி பேட்டை, வடலூர் வடக்குத்து ஆகிய ஐந்து இடங்களில் தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வடக்கு மாவட்ட அவை தலைவர் ராஜாராம் அவர்களின் வழிகாட்டுதலின்படி புரட்சிக் கலைஞர் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திரு உருவச்சலையை நிறுவ அனுமதி வழங்க கோரி குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் கே. பி.ஆர் சரவணன் தலைமையில் தேமுதிகனர் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுரேஷ்குமார் அவர்களிடம் மனு அளித்தனர்.

இந்த நிகழ்வில் தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினர் சமோ சுரேஷ், குறிஞ்சிப்பாடிமேற்கு ஒன்றிய செயலாளர் வடக்குத்து வேல்முருகன், குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் சரவணன் வடலூர் நகர செயலாளர் ஜாகிர் உசேன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொருளாளர் ஜெயபிரகாஷ், கிழக்கு ஒன்றிய பெருமாள், குறிஞ்சிப்பாடி பேரூர் கழக அவைத்தலைவர் ஜோதி, ஒன்றிய துணை செயலாளர்கள் ஜோதி, ஜெய்சங்கர், பிரபாகரன், செல்வம், வெற்றிவேல், வேல்முருகன், நடராஜ், ஆரோக்கியராஜ், சத்யராஜ், சிவசுப்பிரமணியன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற ஸ்ரீ தில்லை காளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு

கடலூர் மாவட்டம், சேப்பளாநத்தம் அடுத்த மேட்டுக்குப்பம் ஆர்ச் கேட் அருகில் உள்ள வீனங்கேணி ‌ ஸ்ரீ தில்லை காளியம்மன் கோவிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் பெற வேண்டி நேற்று கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை ஊஞ்சல் தாலாட்டு மற்றும் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்த சிறப்பு வழிபாட்டில் கம்மாபுரம் தெற்கு ஒன்றிய தேமுதிக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஞான பண்டிதன், மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கமாயவேல், கருப்பு செந்தில், ஒன்றிய பொறுப்பாளர் ராமமூர்த்தி, பி.எம்.எஸ் சுரேஷ், விஜயகுமார், ஒன்றிய தலைவர் ராஜவேல் ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் மணிகண்டன், சுரேஷ் சங்கர், பெருமாள் கனகசபை , ராஜா, அரசன் தேவராசு , வடிவேல் சிவா சிவராஜன், ராஜசேகர், கே.ஜி.கே முருகன் விநாயகம் சிரஞ்சீவி மகளிர் அணி தலைவி மஞ்சுளா சந்திரசேகர் மாலா மீனாட்சி கஜேந்திரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் தேமுதிக தெற்கு ஒன்றியம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.

ஒப்பந்த பணிக்கு ரூ.3 லட்சத்து 9000 லஞ்சம் வாங்கிய அதிமுக ஒன்றிய சேர்மன்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக ஜானகிராமனும், துணை சேர்மனாக தேமுதிகவை சேர்ந்த ஜான்சிராணி உள்ளனர். இவர்கள் இருவருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. மேலும் ஒப்பந்த பணிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் கோட்லாம்பாக்கம், கரும்பூர், சாத்திப்பட்டு, அவியனூர், கரும்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வளர்ச்சி பணிகள் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அந்த பணிகளுக்கு கமிஷன் தொகையை அதிமுக சேர்மனுக்கு வழங்க நேற்று ஒப்பந்ததாரர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது சேர்மன் தனக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் பணிகள் தருவதாக பேரம் பேசினார்.

அதன்படி, லஞ்ச பணத்தை அதிமுக சேர்மனுக்கு வழங்கினர். இது சம்பந்தமாக நேற்று கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்து அதிமுக சேர்மன் அறையில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது காவல்துறை கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் சேர்மன் திணறினார். அவரது லாக்கரில் இருந்த லஞ்ச பணம் ரூ.3 லட்சத்து 9000-ஐ பறிமுதல் செய்தனர். அதிமுக சேர்மன் லஞ்சம் வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.