நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். மன்சூர் அலிகானும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்தார். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்த மன்சூர் அலிகான், “த்ரிஷாவுடன் பெட்ரூம் சீன் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் த்ரிஷாவையும் போடலாம் என்று நினைத்தேன். மிஸ் ஆகிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மன்சூர் அலிகான் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திரையுலகில் நடிகைகள், நடிகர்கள் பெரும்பாலானோர் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில், “நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
இந்த விவகாரத்தில் தாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு பரிந்துரைக்கிறோம். இதுபோன்ற கருத்துகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக கருதத் தூண்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று பதிவிட்டிருந்தது.