தெலங்கானா கனமழை எதிரொலி ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை..! பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்களும் நாசம்..!

தெலங்கானாவில் கன மழை காரணமாக நல்கொண்டா, கம்மம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பேரிடர் மீட்புகுழுவினர் இரவு, பகலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை தெலங்கானாவில் 18-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் கன மழைக்கு உயிர் சேதத்துடன் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்களும் நாசம் அடைந்துள்ளதால், இதைதேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில், தெலங்கானா அரசு ஊழியர் சங்கத்தினர் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதியாக வழங்க முடிவு செய்தனர்.

அதன்பேரில் ரூ.100 கோடிக்கான காசோலையை அரசு ஊழியர்கள் சங்க தலைவர் லச்சி ரெட்டி தலைமையில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கினர். இதற்கிடையே, மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று ஹைதராபாத் வானிலை ஆராய்ச்சி மையம் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலோர ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளாவின் பல பகுதிகளில் ஓரிரு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.

ரேவந்த் ரெட்டி அதிரடி அறிவிப்பு: நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 நிதி

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் இன்று பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையிலும், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கோல்கொண்டா கோட்டையிலும் தேசிய கொடியேற்றி வைத்துச் சிறப்புரையாற்றினர்.

அப்போது, “இந்த அரசு மாநில நலன்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டு அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் நல்லுறவை பேணி வருகிறது. ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையில் மாநில பிரிப்பு சார்ந்து சாதகமான பலன்கள் கிடைக்கும் என அரசு நம்புகிறது.

மக்கள் நலனுக்கு இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தெலங்கானாவை உலக அளவில் பெருமை கொள்ள செய்யும் வகையில் இந்த அரசின் செயல்படும் இருக்கும் என்பது இந்நேரத்தில் நான் உறுதியளிக்கிறேன். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை குறித்து இந்த அரசு அறியும். அவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு ரூ.12,000 நிதியுதவி வழங்கப்படும்.

விவசாயிகளின் நலனை காக்கும் கடமையை இந்த அரசு கொண்டுள்ளது. ரைத்து பரோசா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.15,000 நிதியுதவி விரைவில் வழங்கப்படும். அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது தயாரிப்பு நிலையில் உள்ளது. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்” என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

காதலனை கரம் பிடித்ததால் மகள் இறந்து விட்டதாக போஸ்டர் வைத்து கதறிய தந்தை…!

தெலங்கானா மாநிலம் ராஜண்ண சிரிசில்லா மாவட்டம் பி.ஒய்.நகரைச் சேர்ந்த சிலுவேரி முரளி. இவரது மகள் சிலுவேரி அனுஷா இவர் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சிலுவேரி அனுஷா சில மாதங்களாக இளைஞர் ஒருவரை காதலித்தார். இந்த விஷயம் வீட்டில் தெரிந்தால் என்ன நடக்கும் என்று பயந்து யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்த இளைஞனை திருமணம் செய்து கொண்டார். வெளியே சென்ற மகள் வீட்டிற்கு வராததால், அவரது பெற்றோர் பயத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் செய்தனர்.

ஆனால் அனுஷா எங்கேயும் இல்லாததால் அனைவரும் கவலையில் இருந்த நிலையில் சிலுவேரி அனுஷா அவரது தந்தைக்கு நேற்று போன் செய்து, காதலித்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதாக கூறி பெற்றோருக்கு அதிர்ச்சி தகவல் கொடுத்தார். தன் மகளின் செயலைக் கண்டு கண்ணீர் மல்க சிலுவேரி முரளி புலம்பினார்.

பின்னர் மகள் செய்த செயலால் மனம் உடைந்த சிலுவேரி முரளி திடீரென தனது மகள் இறந்து விட்டதாக பேனர் அடித்து வீட்டின் முன்பு வைத்து மகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறி அகல்விளக்கு ஏற்றி ஊதுவத்தி பற்ற வைத்து கதறி அழுதார். இந்த சம்பவம் அக்கம்பக்கம் இருந்த அனைவரது மனதையும் பதற வைத்தது.

“முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் அனுப்பிய பெண் ’’

தெலங்கானா மாநிலம், ஜெகித்யாலா மாவட்டம், தண்ட்ரியால் கிராமத்தை சேர்ந்த பெண் ருத்ரா ரச்சனா. சில ஆண்டுகளுக்கு முன், இவரது பெற்றோர் விபத்தில் உயிரிழந்தனர். அந்த விபத்தில் உயிர் தப்பிய ருத்ரா ரச்சானாவை மருத்துவமனைக்கு சென்று சந்தித்து அமைச்சர் கே.டி. ராமாராவ் மனம் தளர வேண்டாம் என நம்பிக்கை ஊட்டினார்.

அதன் பின்னர், அமைச்சர் கே.டி.ராமாராவ், அப்பெண் பொறியியல் படிக்க அரசு சார்பில் உதவிகளை செய்தார். இதனிடையே, ஒவ்வொரு ராக்கி பண்டிகையின் போது, அப்பெண், அமைச்சர் கே.டி. ராமாராவுக்கு ராக்கி கட்டி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், ருத்ரா ரச்சனா பொறியியல் படிப்பை முடித்து ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் நல்ல வேலையில் சேர்ந்தார்.

இந்நிலையில் அந்த பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ‘‘என்னைப் போன்று பெற்றோர்களை இழந்து ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து வரும் கே.டி. ராமாராவ் அவர்களுக்கும், முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.

என்னை போன்று கஷ்டப்படுவோருக்காக படிக்க என்னுடைய ஊதியத்தில் சேர்த்து வைத்திருந்த ரூ.1 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளேன்’’ என்று கூறி அமைச்சர் கே.டி. ராமாராவுக்கு ராக்கி கட்டும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இதனை பார்த்த, அமைச்சர் கே.டி. ராமாராவ் ‘‘எவ்வளவு அற்புதமான மனிதாபிமான செயலை நீ செய்திருக்கிறாய். உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் தற்போது தெலங்கானாவில் வைரல் ஆகி வருகிறது.