தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தெருநாய்கள் கடித்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்களும், பலத்த காயங்களுக்கு உள்ளாகும் சம்பவங்களும் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அரக்கோணம் பகுதியில் தெருநாய் கடித்து குதறியதில் 4 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், கணபதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பாலாஜி மகன் மகன் நிர்மல் ராஜ் 4 வயது சிறுவன். கடந்த, ஜூன் மாதம்- 26ம் தேதி வீட்டின் பின்புறமாக விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, அந்த தெரு வழியாக வந்த நாய், சிறுவனை கடித்து குதறியது. ருகிலிருந்தவர் அப்பகுதிக்கு ஓடிச் சென்று பார்த்தபோது சிறுவன் நிர்மல் ராஜை தெருநாய் கடித்துக் குதறிக் கொண்டு இருந்துள்ளது. நிர்மல்ராஜின் கை, வாய், கால் உள்ளிட்ட பகுதிகளை தெருநாய்க் கடித்து குதறியுள்ளது. இதில், சிறுவன் பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், சிறுவனுக்கு ரேபிஸ் நோய் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கடந்த 45 நாள்களாக சிறுவனக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாய்கள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டி கடிக்கச் செல்கின்றன. இதனால், தொடர்ந்து விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.