அரசு அதிகாரிகளாக பணிபுரிபவர்கள், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் பதவிக்கு நியமனம் பெற எழுத்துத் தேர்வில் பங்கற்பார்கள். அதன்படி மாநில அரசு தனது விருப்ப அதிகாரங்களைப் பயன்படுத்தி, நேர்காணலை நடத்தி, எஸ்சிஎஸ் அல்லாத ஒதுக்கீட்டிலிருந்து காலியாக உள்ள ஐஏஎஸ் பதவியை நிரப்ப மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு பெயர்களை பரிந்துரைக்கு அனுப்பும்.
யுபிஎஸ்சி தேர்வாணையம் அவர்களுக்கு நேர்காணல் நடத்தி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக தேர்வு செய்யும். இப்படி ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமனம் பெறுபவர்கள் மீது அவர்கள் பணிக்காலத்தில் எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கை இருக்கக்கூடாது. மேலும், பணிக்காலத்தில் சிறப்பான முறையில் பணியாற்றி இருக்க வேண்டும்.
இந்நிலையில், தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றும் பிரியா ரவிச்சந்திரன், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் ஒதுக்கீட்டிலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி பிரியா ரவிச்சந்திரனுக்கு 2022 தமிழ்நாடு கேடர் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தீயணைப்புத்துறை அதிகாரி பிரியா ரவிச்சந்திரனுக்கு ஐஏஎஸ் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக தீயணைப்புத் துறையில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக ஒருவர் நியமிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.