பனை மரத்தில் நுங்கு வெட்ட ஏறியவரை கடைசியில் கிரேன் மூலம் தீணைப்பு வீரர்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அருகே கள்ளிபாளையத்தை சேர்ந்த அங்குசாமி நேற்று அப்பகுதியில் உள்ள பனை மரத்தில், நுங்கு வெட்ட கம்பி வளையம் போட்டு ஏறியுள்ளார். மரத்தின் உச்சியில் சென்ற அங்குசாமி, கம்பி வளையத்தில் இருந்து சற்று விலகினார்.
இதனால் அங்குசாமி, கம்பி வளையத்தில் இருந்து அந்தரத்தில் தொங்கியபடி இருக்க தன்னை காப்பாற்றுமாறு சத்தம் போட்டுள்ளார். இதையறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீணைப்பு குழுவினர், பனை மரத்தின் உச்சியில் இருந்து அங்கு சாமியை கீழே இறக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். பனை மரம் 60 அடி உயரம் இருந்ததால் கிரேன் வரவழைக்கப்பட்டது. பின்னர், அந்த கிரேன் ராடை உயர்த்தி, பனை மரத்தில் தொங்கி கொண்டிருந்த அங்குசாமியை சுமார் 2 மணி நேரம் போராடி மீட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.