`கவுன்சிலரிடம் மாமூல் கேட்ட நகராட்சி கமிஷனர்…!?’

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் இருக்கின்றன. இவற்றில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தலா ஒரு கவுன்சிலர்; மீதமுள்ள 16 கவுன்சிலர்கள் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். தி.மு.க-வைச் சேர்ந்த திருமூர்த்தி தலைவராகவும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்தி துணைத் தலைவராகவும் இருக்கின்றனர்.

திருவேற்காடு நகராட்சி கமிஷனராக, ஜஹாங்கீர் பாஷா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியமர்த்தப்பட்டார். அன்றிலிருந்தே கமிஷனருக்கும், பெரும்பாலான கவுன்சிலர்களுக்குமிடையே அடிக்கடி முட்டல் மோதல்கள்தான். அதன் உச்சமாக, `பெண் கவுன்சிலரின் கணவரிடம் கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா மாமூல் கேட்டார்; வழக்கறிஞரை ஒருமையில் பேசினார்’ என்பது போன்ற தகவல்களும் வீடியோவும் வெளியாகி, நகராட்சி நிர்வாகத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது!

நகராட்சியின் 2-வது வார்டு கவுன்சிலர் ஆஷாவின் தந்தையும், முன்னாள் கவுன்சிலருமான ஆசீர்வாதம் இது குறித்துப் பேசுகையில், “நான் கவுன்சிலராக இருந்த காலகட்டத்தில், மக்கள் பிரநிதிகளிடம் அதிகாரிகள் மரியாதையாக நடந்துகொள்வார்கள். தற்போது, கமிஷனராக வந்திருக்கும் ஜஹாங்கீர் பாஷா, கவுன்சிலர்கள் தொடங்கி மனு கொடுக்க வரும் பொதுமக்கள் வரை அனைவரையும் அவமரியாதையாக நடத்தி, அலைக்கழிக்கிறார். டி.டி.எஸ் நகரில் சாலை பிரச்னை குறித்து கமிஷனரிடம் பேசினேன். என்னிடமும் அவமரியாதையாக நடந்துகொண்டார்.

நகராட்சிக் கூட்டத்திலும் ஒரு சில கவுன்சிலர்களைத் தவிர மற்றவர்கள் பேசுவதற்கு அவர் அனுமதிப்பதில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு, தி.மு.க கவுன்சிலர் உள்ளிட்ட சிலருடன் கமிஷனருக்குத் தகராறு ஏற்பட்டு, பிரச்னை காவல் நிலையம் வரை சென்றிருக்கிறது” என்றார் ஆசீர்வாதம்.

காவல் நிலையத்தில் புகாரளித்தவர்களில் சரவணனிடம் பேசுகையில் “திருவேற்காடு, சுந்தரசோழபுரத்தில் வசிக்கும் மாணிக்கம் என்பவரின் இடம் தொடர்பாக நகராட்சித் தரப்பிலிருந்து நோட்டீஸ் வந்திருந்தது. அதைப் பற்றி விசாரிக்க மாணிக்கமும் நானும் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்றோம். மணிக்கணக்கில் காத்திருந்த பிறகே கமிஷனர் வந்தார்.

மாணிக்கத்தையும் என்னையும் கமிஷனர் அலுவலக ஊழியர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். `ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். இதனால் எனக்கும் கமிஷனருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ‘நீ வெளியே போ, நீ பெரிய வெங்காயமா…’ என்று என்னைத் திட்டினார். அதை வீடியோவாகப் பதிவுசெய்த நான், திருவேற்காடு காவல் நிலையத்தில் கமிஷனர், வீடியோ எடுத்த ஊழியர்கள் ஆகியோர்மீது புகாரளித்தேன். மறுநாள், கமிஷனர் தரப்பில் அரசு ஊழியரைப் பணிபுரிய விடாமல் தடுத்ததாக எங்கள்மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

தி.மு.க கவுன்சிலர் நளினியின் கணவர் குரு பேசுகையில், “நகராட்சியில் குப்பை அள்ளும் பணியை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறேன். அதற்கான பில்லை பாஸ் செய்யாமல் கமிஷனர் இழுத்தடித்து வந்தார். அது குறித்துக் கேட்டபோது, ஓப்பனாகவே என்னிடம் மாமூல் கேட்டார். கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் கமிஷனர்மீது எந்தவித நடவடிக்கையும் நான் எடுக்கவில்லை. அவரின் செயல்பாடுகள் அனைத்தும் மக்கள் விரோதமானவையாகவே இருக்கின்றன” என தெரிவித்தார்.