திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக அதிமுகவை சேர்ந்த வெற்றிவேல் உள்ளார். சங்க செயலாளராக இருந்த ஜெயபால், கடந்த ஏப்ரல் 30-ல் பணி ஓய்வு பெற்றார். அதற்கு 24 நாட்களுக்கு முன் ஏப்ரல் 6-ம் தேதி அவரது பணப்பலன்களில் ரூ.16 லட்சத்து 53 ஆயிரத்தை எடுத்து கொள்ள சங்கத் தலைவர் வெற்றிவேல் அனுமதி அளித்தார்.
இந்நிலையில் இந்த சங்கத்திற்கு செயலாளராக ரவி, கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா மூலம் நியமனம் செய்யப்பட்டார். அவரை சங்கத் தலைவர் வெற்றிவேல், ஏற்கமறுத்து அக்கவுண்டன்டாக உள்ள தனசேகரனுக்கு செயலாளர் பொறுப்பு வழங்கினார். இது தொடர்பாக நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தலைவர் மட்டுமே கையெழுத்திட்டு ஒரு தகவலை மன்னார்குடி துணை பதிவாளர் அலுவலகத்திற்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், செயலாளராக பணியாற்றிய ஜெயபால், பணி ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே பண பலன்களை சங்க நிதியிலிருந்து எடுத்து கொள்ள அனுமதி வழங்கியது, சங்க பதிவேடுகளை செயலர் தனசேகரன் திருத்தியது, சங்கத்தில் இருந்து பதிவேடுகளை அப்புறப்படுத்தியது, நிர்வாக குழு கூட்டத்தில் செயலராக தனசேகரன் தேர்வு செய்யப்பட்டதாக பொய்யான தகவலை துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பியது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி வெற்றிவேலை தலைவர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இணைப்பதிவாளர் சித்ரா, நேற்றுமுன்தினம் உத்தரவிட்டு, துணைத்தலைவர் பாலகுரு பொறுப்பு தலைவராக செயல்படுவார் என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா தெரிவித்து உள்ளார்.