சர்வதேச இளைஞர்கள் தினத்தையொட்டி போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான்

திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சர்வதேச இளைஞர்கள் தினத்தையொட்டி கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே எய்ட்ஸ், காச நோய் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ரெட் ரன் மாரத்தான் நடைபெற்றது.

இதற்கு சுகாதாரத்துறை துணை இயக்குனர் மருத்துவர் ஜவஹர்லால் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா ரெட் ரன் மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ- மாணவிகள், ரோட்டரி சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

`கவுன்சிலரிடம் மாமூல் கேட்ட நகராட்சி கமிஷனர்…!?’

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் இருக்கின்றன. இவற்றில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தலா ஒரு கவுன்சிலர்; மீதமுள்ள 16 கவுன்சிலர்கள் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். தி.மு.க-வைச் சேர்ந்த திருமூர்த்தி தலைவராகவும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்தி துணைத் தலைவராகவும் இருக்கின்றனர்.

திருவேற்காடு நகராட்சி கமிஷனராக, ஜஹாங்கீர் பாஷா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியமர்த்தப்பட்டார். அன்றிலிருந்தே கமிஷனருக்கும், பெரும்பாலான கவுன்சிலர்களுக்குமிடையே அடிக்கடி முட்டல் மோதல்கள்தான். அதன் உச்சமாக, `பெண் கவுன்சிலரின் கணவரிடம் கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா மாமூல் கேட்டார்; வழக்கறிஞரை ஒருமையில் பேசினார்’ என்பது போன்ற தகவல்களும் வீடியோவும் வெளியாகி, நகராட்சி நிர்வாகத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது!

நகராட்சியின் 2-வது வார்டு கவுன்சிலர் ஆஷாவின் தந்தையும், முன்னாள் கவுன்சிலருமான ஆசீர்வாதம் இது குறித்துப் பேசுகையில், “நான் கவுன்சிலராக இருந்த காலகட்டத்தில், மக்கள் பிரநிதிகளிடம் அதிகாரிகள் மரியாதையாக நடந்துகொள்வார்கள். தற்போது, கமிஷனராக வந்திருக்கும் ஜஹாங்கீர் பாஷா, கவுன்சிலர்கள் தொடங்கி மனு கொடுக்க வரும் பொதுமக்கள் வரை அனைவரையும் அவமரியாதையாக நடத்தி, அலைக்கழிக்கிறார். டி.டி.எஸ் நகரில் சாலை பிரச்னை குறித்து கமிஷனரிடம் பேசினேன். என்னிடமும் அவமரியாதையாக நடந்துகொண்டார்.

நகராட்சிக் கூட்டத்திலும் ஒரு சில கவுன்சிலர்களைத் தவிர மற்றவர்கள் பேசுவதற்கு அவர் அனுமதிப்பதில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு, தி.மு.க கவுன்சிலர் உள்ளிட்ட சிலருடன் கமிஷனருக்குத் தகராறு ஏற்பட்டு, பிரச்னை காவல் நிலையம் வரை சென்றிருக்கிறது” என்றார் ஆசீர்வாதம்.

காவல் நிலையத்தில் புகாரளித்தவர்களில் சரவணனிடம் பேசுகையில் “திருவேற்காடு, சுந்தரசோழபுரத்தில் வசிக்கும் மாணிக்கம் என்பவரின் இடம் தொடர்பாக நகராட்சித் தரப்பிலிருந்து நோட்டீஸ் வந்திருந்தது. அதைப் பற்றி விசாரிக்க மாணிக்கமும் நானும் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்றோம். மணிக்கணக்கில் காத்திருந்த பிறகே கமிஷனர் வந்தார்.

மாணிக்கத்தையும் என்னையும் கமிஷனர் அலுவலக ஊழியர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். `ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். இதனால் எனக்கும் கமிஷனருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ‘நீ வெளியே போ, நீ பெரிய வெங்காயமா…’ என்று என்னைத் திட்டினார். அதை வீடியோவாகப் பதிவுசெய்த நான், திருவேற்காடு காவல் நிலையத்தில் கமிஷனர், வீடியோ எடுத்த ஊழியர்கள் ஆகியோர்மீது புகாரளித்தேன். மறுநாள், கமிஷனர் தரப்பில் அரசு ஊழியரைப் பணிபுரிய விடாமல் தடுத்ததாக எங்கள்மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

தி.மு.க கவுன்சிலர் நளினியின் கணவர் குரு பேசுகையில், “நகராட்சியில் குப்பை அள்ளும் பணியை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறேன். அதற்கான பில்லை பாஸ் செய்யாமல் கமிஷனர் இழுத்தடித்து வந்தார். அது குறித்துக் கேட்டபோது, ஓப்பனாகவே என்னிடம் மாமூல் கேட்டார். கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் கமிஷனர்மீது எந்தவித நடவடிக்கையும் நான் எடுக்கவில்லை. அவரின் செயல்பாடுகள் அனைத்தும் மக்கள் விரோதமானவையாகவே இருக்கின்றன” என தெரிவித்தார்.

‘வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர்’ அட்மின் கைது

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கோதண்டம் மகன் பிரதீப். இவர் ‘வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர்’ என்ற ட்விட்டர் பக்கத்தின் அட்மினாக இருக்கிறார். இவர் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவதுாறுகளும், கிண்டல், கேலி செய்து மீம்ஸ்களும், வீடியோக்களும் வெளிட்டு வந்தார்.

இது குறித்து இல்லத்தரசிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இருப்பினும் முறையான புகார்கள் எதுவும் பதியப்படவில்லை. இதனால் அவர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்து தொடர்ந்து கிண்டல் செய்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அரியலுார் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த சக்திபாபு என்பவர் பிரதீப் மீது உடையார் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்கு பதிந்த காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில் சென்னை தி.நகரில் நேற்று மதியம் பிரதீப்பை உடையார்பாளையம் எஸ்.எஸ்.ஐ பழனிவேல் தலைமையிலான தனிப்படை காவல்துறை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அதிமுக ஒன்றிய செயலாளர் விஷம் குடித்து தற்கொலை கந்துவட்டி காரணமாக மனஉளைச்சல்…

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் இவருடைய மனைவி சரிதா. இதில் பிரகாஷ், அதிமுக கட்சியின் அம்மா பேரவை ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தியும் வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை 1 மணி அளவில் தன் மனைவியுடன் காரை எடுத்துக் கொண்டு எளாவூர் ஒருங்கணைந்த சோதனைச் சாவடி அருகே சென்றுள்ளார். பின்னர், காரை நிறுத்திவிட்டு இருவரும் தாங்கள் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளனர்.

பின்னர், பிரகாஷ் தனது அண்ணனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தானும் தனது மனைவி சரிதா இருவரும் விஷம் குடித்ததை சொல்லிவிட்டு, தோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் இருவருக்கும் முதலுதவி செய்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ஆரம்பாக்கம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பிரகாஷ்-ன் மரண வாக்கு மூல கடிதம் மற்றும் வீடியோ காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.

அதில், 2017-ம் ஆண்டு சொந்தமாக கார் ஒன்று ஃபைனான்ஸ் மூலமாக வாங்கினேன். அதற்கு முதல் டியூ கட்டுவதற்காக கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தசரதனுடைய மகன் ராஜா (எ) முனுசாமியிடம் முதலில் ரூ.30,000 வட்டிக்கு வாங்கினேன். அப்படியே, ஒரு ஆண்டுகளாக சிறுக சிறு மொத்தம் ரூ.1,10,000 வட்டிக்கு வாங்கினேன். இதில், 2020 வரை மாதந்தோறும் ரூ.11,000 வட்டி கட்டி வந்தேன். அதைத்தொடர்ந்து 2020 ஏப்ரல் மாதம் கொரோனா தொடங்கியவுடன் என்னால் வட்டி கட்ட முடியவில்லை.

இதனையடுத்து ராஜா அக்கம்பக்கத்தினர் மற்றும் கட்டபஞ்சாயத்து செய்பவர்களுடன் சேர்ந்து என்னை அசிங்கப்படுத்தினார். இதனால், நான் பல முறை அவரால் மனஉழைச்சலுக்கு ஆளானேன். கொலை மிரட்டல் விடுத்தும் என்னை துன்புறுத்தினார். இதனால் மனமுடைந்த நான் என்னுடைய மனைவி ஆகிய இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் சாவிற்கு ராஜா (எ) முனுசாமி என்பவர் தான் காரணம் என அந்த வீடியோ மற்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ் நேற்று மாலை 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவருடைய மனைவி சரிதா உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்டியல் காணிக்கை பணத்தை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்..!

திருவள்ளூர் மாவட்டம்,பள்ளிப்பட்டு அருகே பெருமாநல்லூர் கிராமத்தில் ஓசூர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல் பணத்தை எடுப்பதற்காக அறநிலையத்துறை திருவள்ளூர் மாவட்ட ஆய்வாளர்கள் கலைவாணர் மற்றும் உஷா ஆகியோர் காவல்துறை பாதுகாப்புடன் அங்கு சென்றனர். ஆனால் அவர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு இந்த உண்டியல் பணத்தை எடுத்துச் செல்லக்கூடாது என தடுத்தனர்.

தங்கள் கோவிலுக்கு சமீபத்தில் கும்பாபிஷேகம் ரூ.12 லட்சம் செலவில் நடத்தியதாகவும் இந்த பணத்தை கொடுத்துவிட்டு நீங்கள் உண்டியல் காணிக்கை பணத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். சுமார் 5 மணி நேரம் கிராம மக்களுடன் காவல்துறையினரும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உண்டியல் காணிக்கை பணத்தை எடுக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.