ரூ.5 கோடி மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது… மனைவி தலைமறைவு…

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூர் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சங்கர் மற்றும் அவரது மனைவி மாதவி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மாத ஏலச்சீட்டு நடத்தியுள்ளனர். அதில், களம்பூர், ஆரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பணத்தை செலுத்தியுள்ளனர். முறையாக நடத்தாததால், பணம் செலுத்தியவர்களுக்கு உரிய காலத்தில் தொகையை வழங்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பலரும் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மாதவி சங்கர் தம்பதியர் தலைமறைவாகினர். பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள், திருவண்ணாமலையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை கடந்த மே மாதம் முற்றுகையிட்டு ரூ.5 கோடிக்கும் அதிகமான தொகையை சீட்டு நடத்தியவர்கள் ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர் சங்கர் தலைமறைவாக இருப்பது தெரியவர, திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நேற்று அதிகாலை சங்கரை கைது செய்தனர். மேலும் அவரது மனைவி மாதவியை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வயிற்று வலியால் துடித்த மகள்.. வந்தவாசி அரசு மருத்துவர் அலட்சியம்..

திருவண்ணாமலை மாவட்டம், வெண்குன்றத்தைச் சேர்ந்த திமுக மாவட்ட பிரதிநிதியான தியாகராஜனின் மகளுக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில், அங்கு பணியில் இருந்த மருத்துவர் அலட்சியமாக மருத்துவம் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. ஆத்திரம் அடைந்த தியாகராஜன் மருத்துவமனை எதிரே வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் மகளுடன் சாலை மறியல் நடத்தினார்.

அவ்வழியே அரசுப் பேருந்து ஒன்று வந்த நிலையில், சாலை மறியலால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தியாகராஜனுடன் சமாதானம் பேசினர். இதையடுத்து தன் மகளுக்கு சிகிச்சை பார்க்காமல் தியாகராஜன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பல லட்சம் மோசடியில் இழந்த அப்பாவி மக்கள்..!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகா மதுரைபெருமட்டூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், எங்கள் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. அந்த நிறுவனத்தில் முகவர்கள் மூலமாக நீண்ட மற்றும் குறுகிய கால வைப்பு திட்டம், தொடர் வைப்பு திட்டம், மாதாந்திர வைப்பு திட்டம் என பல்வேறு திட்டங்களை தெரிவித்து வைப்புத் தொகைகளுக்கு குறுகிய காலத்தில் பல மடங்கு முதிர்வு தொகை கொடுப்பதாக கூறினார்கள்.

அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியை சேர்ந்த உள்ளூர் நபர்கள் முகவர்களாக இருந்த காரணத்தினால் நாங்கள் ரூ.200 முதல் ரூ.2000 வரை என மாதாந்திர வைப்பு திட்டத்தில் 60 மாதங்கள் பணம் செலுத்தினோம். மேலும் பலர் ஒரே தவணையாக பணத்தை செலுத்தி உள்ளனர். எங்கள் கிராமத்தில் மட்டும் பல லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளனர்.

முதிர்வு தேதி முடிந்த பிறகு பணம் கொடுக்கவில்லை. முகவர்களாக செயல்பட்ட நபர்களும் உரிய பதில் அளிக்கவில்லை. நாங்கள் அனைவரும் கூலி தொழிலாளிகள். எனவே எங்கள் பணத்தை மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர். இதுகுறித்து விரிவான விசாரணை செய்து நாங்கள் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.