உடுமலைப்பேட்டை எலையமுத்தூர் கிராமத்தில் E.K. மாரிமுத்து தலைமையில் தொல்குடியினர் சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், எல்லைமுத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தொல்குடியினர் சிறப்பு முகாமை ஊராட்சி மன்ற தலைவர் E.K.மாரிமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நாடு முழுவதும், நவம்பர் திங்கள் 15 -ஆம் நாள் தேசிய தொல்குடி நாளாக கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தேசிய தொல்குடியினர் தினத்தை கொண்டாடும் பொருட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. தேசிய தொல்குடியினர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16.11.2024 முதல் தொடங்கப்பட்டு 24.11.2024 வரை சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிட பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், PM – கிசான் அட்டைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள், மக்கள் நிதி வசதி திட்ட அட்டைகள் மற்றும் வருவாய்த் துறையின் மூலம் வழங்கப்படும் பிற சான்றிதழ்கள் வழங்குதல் தொடர்பான சிறப்பு முகாம்கள் பழங்குடியின சமூக மக்களின் நலனுக்காக நடத்தப்பட்டு அதன் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்பாடுகள் அவர்களை சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் விவசாய அணி துணைத் தலைவர் கந்தர்மணி, நடராஜ், ரவி, விஸ்வநாதன், R.I கார்த்தி கிராம நிர்வாக அலுவலர் மயில்சாமி, பிரகாஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குழந்தைகளை தண்ணீர் குடிக்கவோ, கழிவறை செல்லவோ அனுமதிக்காமல் தண்டனை கொடுக்கும் தலைமை ஆசிரியை..!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தை அடுத்த துங்காவி ஊராட்சி உடையார்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கழுகரை பகுதியைச் சேர்ந்த கலையரசி என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த 20-க்கும் மேற்பட்ட பெற்றோர் குழந்தைகளை வகுப்புக்கு அனுப்பாமல் பள்ளி வளாகத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘தலைமை ஆசிரியை கலையரசி பள்ளிக் குழந்தைகளை மிகவும் மோசமாக நடத்துகிறார்.

நீங்களெல்லாம் சிறைக்கைதிகள், நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்று குழந்தைகளை மிரட்டுவதுடன் அடித்து துன்புறுத்தியுள்ளார். குழந்தைகளை தண்ணீர் குடிக்கவோ, கழிவறை செல்லவோ அனுமதிக்காமல் நூதன முறையில் தண்டனை கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை நீண்ட நேரம் கழிவறை செல்ல அனுமதிக்காததால் வயிற்று வலி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சையளித்துள்ளனர்.

மேலும் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது, ஆபத்தான முறையில் குடிநீர்த் தொட்டி மீது ஏறி தண்ணீர் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பெற்றோர் கேட்டால் அவர்களிடமும் மரியாதையில்லாமல் பேசுகிறார். போன்ற தலைமை ஆசிரியை மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்த பெற்றோர், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என்று தெரிவித்து பள்ளி வளாகத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை பாதுகாப்போடு கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கிராம சபை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடை பெறவில்லை. அன்றைய தினம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் கிராம சபைக் கூட்டத்துக்கு வரவில்லை. அதனால் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் தலைவர் இல்லாமல் கிராம சபை நடத்தக் கூடாது என கூறி கிராம சபைக்கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.

அப்போது அதிகாரிகள் வேறொரு நாளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் காவல்துறை பாதுகாப்போடு கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நேற்று முன்தினம் அலங்கியம் சாலை திரு.வி.க நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றது.

பெரியார் சிலை முன் காதல் ஜோடி சுயமரியாதை திருமணம்…!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுக்கா, வெல்லம்பட்டி கிராமம் கருப்பனம்பட்டி பகுதியில் வசிக்கும் ரமேஷ் மகன் ரஞ்சித் குமார் என்ற எம்.பி.ஏ பட்டதாரி இளைஞரும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுக்கா தொண்டாமுத்தூரில் வசிக்கும் ஏழுமலை மகள் கெஜலட்சுமி என்ற பெண்ணும் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.மேலும், இந்த சுயமரியாதை திருமணத்தை, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கரூர் மாவட்ட தலைவர் கு.கி.தனபால் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் நலக் கட்சி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தென்னரசு, மாவட்ட விவசாய அணி செயலாளர் வேலுசாமி, திமுகவைச் சேர்ந்த வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் நகரப் பொருளாளர் ரகுமான், மோகன்ராஜ் வழக்கறிஞர் உதயநிதி ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, சுயமரியாதை திருமணம் குறித்து சாமானிய மக்கள் நல கட்சியின் மாநில பொதுச்செயலாளர், வழக்கறிஞர் குணசேகரன் கூறுகையில், தந்தை பெரியாரின் கொள்கை வழியில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை தாண்டி எம்பிஏ பட்டதாரி வாலிபர், பெரியாரின் வழியை ஏற்று, சுயமரியாதை திருமணம் செய்ததை பாராட்டி வாழ்த்துகிறோம் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கரூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் கோரிக்கை மனுவினை அளித்தனர். கோரிக்கையை பெற்றுக் கொள்ள மறுத்து, கரூர் அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர், பேபி காவல் நிலையத்தில் இருந்து வெளியே சென்றார். மேலும் அங்கிருந்த காவலர்களும் காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்தனர்.

இந்நிலையில், கரூர் நகர காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி, பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்தனர். இன்று கரூர் நகர காவல் துறையினர், இருதரப்பு பெற்றோரை அழைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.சாதி மறுப்பு சுயமரியாத திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றவரிகளிடம் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் கோரிக்கை மனுவினை பெற்றுக்கொள்ளமால் காவல் நிலையத்தை விட்டு வெளியே சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

புதிய திட்டப்பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைப்பு

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடசின்னாரிபாளையம் ஊராட்சி அய்யாக்குட்டி வலசு, வீணம்பாளையம் ஆகிய பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் தலைமை தாங்கினார்.

பயிர்க்கடன்களில் முறைகேடுகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 2 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட விருகல்பட்டிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகள் அதனை திரும்ப செலுத்தியும் உரிய ரசீது வழங்கவில்லை என்று புகார் எழுந்தது. இதனால் விவசாயிகள் மேலும் பயிர்க்கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் பயிர்க்கடன் விஷயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும், விவசாயிகள் பிரச்சினைக்கு உரிய தீர்வுகாண கோரியும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்த முறைகேடு தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் கடனை உடனடியாக திரும்ப வழங்ககோரியும், முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மற்றும் அவருடைய உதவியாளர் மீது மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கையை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்க கோரியும் கடந்த 14-ந் தேதி முதல் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் முறைகேடு தொடர்பாக குடிமங்கலம் காவல் நிலையத்தில் விருகல்பட்டிபுதூரைச் சேர்ந்த விவசாயி லோகசிகாமணி என்பவர் அளித்த புகாரின் பேரில், கூட்டுறவு சங்க செயலாளர் கீதா மற்றும் துணை செயலாளர் செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் நேற்று குடிமங்கலம் காவல்துறை போலீசார் கைது செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத கவுண்டச்சிபுதூர்…! கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் வராததால் மீண்டும் பரபரப்பு…!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கடந்த சில ஆண்டுகளாகவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் 77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றம் சார்பில் கிராம சபை கூட்டம் எம்.பி.சாமி காலனி பூங்காவில் நேற்று காலை 11 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் வரதா காரணத்தால் ஊராட்சி செயலர் பெரியசாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நாச்சிமுத்து ஆதரவுடன் கிராம சபை கூட்டத்தை நடத்த முன் வந்தனர். ஆனால் ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சித்தலைவர் இல்லாமல் கூட்டத்தை நடத்துவதா என பொதுமக்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பினர்.

அப்போது ஊராட்சி செயலாளர் பெரியசாமி தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதாக தெரிகிறது. பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை கேட்பதாக கூறி கடந்த மே 1-ந்தேதி நடைபெற்ற கூட்டத்திலும் ஊராட்சி தலைவர் பங்கேற்க வில்லை, அதேபோன்று நேற்றும் புறக்கணித்ததாக கூறி அதிகாரிகளிடம் பொதுமக்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பொதுமக்கள் எழுந்து நின்று அதிகாரிகளிடம் ஊராட்சி பகுதியில் கடந்த 4 வருடங்களாக சாக்கடை, குடிநீர், தெரு விளக்கு, துப்புரவுப்பணி, தார் சாலை மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதாகவும், பிரச்சினைகளை மனு மூலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றால் முறையான பதில் எதுவும் தராமல் சத்தம் போட்டு திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

எனவே தலைவர் செல்வி கிராம சபை கூட்டத்திற்கு வர வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஒத்தி வைப்பு அதைத் தொடர்ந்து கிராம சபை கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு அதிகாரிகள் சென்றனர்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட தம்பதியினரால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை கச்சேரி வீதியில் சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வருகை தந்த உடுமலைப்பேட்டை தாலுகா சாலையூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி மற்றும் அவரது கணவர் ஆறுச்சாமி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பத்திரப்பதிவு சம்பந்தமாக சார்பதிவாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தின் மூலம் உடுமலைப்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் அங்கு வருகை தந்த காவல்துறை அந்த தம்பதியிடம் சமாதானம் பேசினார்கள். அதற்கு அவர்கள் உடன்பட மறுத்து தொடர்ந்து சார் பதிவாளர் மீது குற்றச்சாட்டு வைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை வேறு வழியின்றி அவர்களை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அந்த தம்பதிக்கு காவல்துறை அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் 44 புதிய திட்டப் பணி தொடங்கி வைப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவன்மலை, பாலசமுத்திரம்புதூர், பாப்பினி, படியூர், தம்மரெட்டிபாளையம் மற்றும் வீரணம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமையில் 42 புதிய திட்டப்பணிகளை, தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 88 அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார்.

ரூ.5 ஆயிரம் கடன் வாங்கிய இளம்பெண்ணிடம் ரூ.26 லட்சம் வசூலித்த கடன் செயலி..!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கார்த்திக் பனியன் நிறுவன தொழிலாளி இவரது மனைவி கவிதா. திருப்பூரில் உள்ள ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கவிதாவின் செல்போனுக்கு ஒரு கடன் செயலி நிறுவனத்தில் இருந்து லிங்க் வந்தது. அதனை கிளிக் செய்து பார்த்தபோது , குறைந்த வட்டியில் ரூ.5ஆயிரம் கடன் வாங்கி கொள்ளலாம் என்ற தகவல் இருந்தது. இதையடுத்து இதற்காக அவரது புகைப்படம், ஆதார் எண், வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களை கடன் செயலியில் பதிவேற்றி கவிதா அந்த கடன் செயலி மூலம் ரூ.5 ஆயிரம் கடன் பெற்றார்.

இதைத்தொடர்ந்து மாதந்தோறும் ரூ.5ஆயிரத்திற்கான தவணை தொகையை செலுத்தி வந்தார். 8 மாதங்களில் அசல், வட்டியுடன் பணத்தை முழுவதுமாக செலுத்தி முடித்தார். இந்நிலையில் கடன் செயலியை சேர்ந்த கும்பல் கவிதாவின் செல்போனுக்கு ஒரு லிங்கை அனுப்பினர். அதனை கவிதா பார்த்தபோது அவரது ஆபாச புகைப்படங்கள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடன் செயலியை சேர்ந்த கும்பலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்கள் நீங்கள் கூடுதல் வட்டி செலுத்த வேண்டியது உள்ளது. அதனை செலுத்துங்கள். இல்லையென்றால் உங்களது ஆபாச புகைப்படங்களை இணையதளம் மற்றும் உறவினர்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த கவிதா, கடன் செயலி மோசடி கும்பல் கேட்கும் பணத்தை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். 8 மாதங்களாக மிரட்டி கவிதாவிடம் இருந்து ரூ.26 லட்சம் வரை பறித்துள்ளனர். பணம் இல்லாதபட்சத்தில் கவிதா வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து பணம் செலுத்தி வந்துள்ளார். தொடர்ந்து மோசடி கும்பல் பணம் கேட்டு மிரட்டி வந்த நிலையில், பணம் இல்லாததால் இதுபற்றி தனது கணவர் கார்த்திக்கிடம் தெரிவித்துள்ளார்.

உடனே இதுகுறித்து அவர் திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல்துறைக்கு புகார் செய்தார். காவல்துறையினர் கவிதாவிடம் பணம் கேட்டு மிரட்டிய கடன் செயலி மோசடி கும்பல் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். மேலும் கவிதா, மோசடி கும்பலுக்கு செலுத்திய வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது இந்த மோசடி செயலில் வடமாநில கும்பல் ஈடுபட்டுள்ளது தெரிய வர அந்த செயலின் கணக்குகள் குஜராத், மேற்கு வங்காளம், அசாம், புதுடெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கி கணக்குகள் என தெரிய வந்தது. இதையடுத்து அந்த வங்கி கணக்குகளை காவல்துறை முடக்கி, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.