திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாந்தி ஹோமம் செய்யப்பட்டுவிட்டதால் அனைத்தும் தூய்மையாகிவிட்டதாக கோயிலின் தலைமை அர்ச்சகர் கிருஷ்ண சேஷாசல சுவாமி தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த 18-ஆம் தேதி தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் சர்வதேச அளவில் மிகப் பெரிய விவாதப் பொருளாக மாறியது.
இதையடுத்து, கடந்த 20-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி ஏழுமலையான் கோயிலை நிர்வகிக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியமலா ராவ், “தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளில் விலங்கு கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான நான்கு அறிக்கைகளும் ஒரே மாதிரியான முடிவுகளைத் தந்தன. எனவே நாங்கள் உடனடியாக விநியோகத்தை நிறுத்தினோம். மேலும் ஒப்பந்தக்காரரை பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளோம். அபராதம் விதிக்கும் நடைமுறையும் தொடங்கப்படும். அதோடு, சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்” என ஷியமலா ராவ் தெரிவித்தார்.
இதனையடுத்து கடந்த 20-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு இருந்ததாக வெளியாகி உள்ள அறிக்கை தவறானது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மக்களின் நம்பிக்கையை அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்” என மறுப்பு தெரிவித்திருந்தார்.
பல்வேறு பக்தர்கள் விரதம் இருந்து திருப்பதி கோயிலுக்குச் சென்று ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். அசைவ உணவு உண்பவர்களும் விரத நாட்களில் அசைவத்தை தவிர்ப்பார்கள். இந்த பின்னணியில், திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்திருந்ததை திருப்பதி தேவஸ்தானமே ஒப்புக்கொண்டதால், இதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழந்தது.
இதை கருத்தில் கொண்டு இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாந்தி ஹோமம் செய்யப்பட்டது. ஹோமத்தில் வைக்கப்பட்ட பஞ்சகவ்யம், கோயில் வளாகம், லட்டு தயாரிக்கும் சமையலறை, விநியோகிக்கும் இடங்கள், மலையில் உள்ள பிற கோயில்கள் ஆகியவற்றில் தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. தற்போது அனைத்தும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.