அண்ணாமலை கேள்வி: கையாலாகாத சுகாதாரத்துறை..! இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்..!?

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்து இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, போதிய மருத்துவர்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ளன. நான்கு ஆண்டுகளாக, மருத்துவர்களை நியமிக்காமல் என்ன செய்து கொண்டு இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்? மருத்துவர்கள் நியமனம் எதனால் தாமதமாகிறது? எத்தனை சிறு குழந்தைகளைத் தொடர்ந்து பறி கொடுத்து வருகிறோம்?

இதோ, அதோ என்று, நான்கு ஆண்டுகளில் தமிழக மருத்துவத் துறையை நாசமாக்கிவிட்டு, கொஞ்சம் கூட மனசாட்சி இன்றிப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூச்சமாக இல்லையா அமைச்சருக்கு? இத்தனை கையாலாகாத அமைச்சரை, மிக முக்கியமான சுகாதாரத் துறையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு, தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் தெரியுமா தெரியாதா?

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினருக்கு, திமுக கட்சியிலிருந்து உதவி செய்யப் போவதாகக் கூறியிருப்பது, திமுக அரசின் தோல்வியை மூடி மறைக்கவா? திமுக கொடுக்கும் பணம், குழந்தையின் உயிருக்கு ஈடாகிவிடுமா? தமிழக அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை? அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை? இந்தக் கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்? என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற கூட்டத்தில் அதிமுகவினர் அடிதடி, மோதலால் பரபரப்பு..!

எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடி, மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலியில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக் கூட்டம் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் தற்போதைய அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக தோல்வி அடைந்து வருவது குறித்து பேசிக் கொண்டிருந்தபோது சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா தரப்பு ஆதரவாளர்களுக்கும் பாப்புலர் முத்தையா தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டு இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு தொற்றியது. இதையடுத்து எஸ்.பி. வேலுமணி அவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார். மேலும் எஸ்.பி. வேலுமணி சமரசத்துக்கு பின்பு கூட்டத்தில் இயல்பு நிலைக்கு வந்தது.

அரசுப் பேருந்து பாஜக சின்னம் ஒட்ட முயற்சியில் ஓட்டுநரை சோடா பாட்டிலால் தாக்கிய பிரமுகர்…!!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில், திருநெல்வேலி திம்மராஜபுரத்தில் பயணிகளை ஏற்றிய போது பேருந்தில் பாஜக சின்னத்தை பாஜக பிரமுகர் மருதுபாண்டி ஒட்ட முயன்றுள்ளார். தடுக்க முயன்ற நடத்துனர் பாஸ்கர் உடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இத்தனை தட்டிக்கேட்ட ஓட்டுநர் சுப்பிரமணியன் மீது பாஜக பிரமுகர் மருதுபாண்டி சோடா பாட்டிலால் தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறை மருதுபாண்டியனை அதிரடியாக கைது செய்து கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

டிடிவி தினகரன் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அதிமுக உடைந்து சிதறி விடும்

திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட அமமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் பாளை கிருஷ்ணாபுரத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் டிடிவி தினகரன் பேசுகையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் நெல்லிக்காய் மூட்டை போன்று சிதறி விடும். எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.

கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளைகளில் உண்மை குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம். சினிமா பாணியில் நடந்த மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து நாளை அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கும் நாம் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.