விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது..!

திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வரும் ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விபசார தடுப்பு பிரிவு காவல்துறை (பொறுப்பு) ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வீட்டில் ஷைன் ஸ்பா என்ற பெயரில் கர்நாடகத்தை சேர்ந்த லட்சுமி தேவி என்பவரும், 2 பெண்களும் இருந்தனர். மேலும் வீட்டில் உள்ள பொருட்களை சோதனை செய்தபோது இந்த ஸ்பா சென்டர் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த 2 பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்த காவல்துறை, மேலாளர் லட்சுமி தேவியை கைது செய்தனர். விசாரணையில், திருச்சி வயலூர் பகுதியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வரும் செந்தில் என்பவர்தான் இந்த ஸ்பாவின் உரிமையாளர் என்பது தெரியவந்தது.

இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான செந்திலை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செந்திலை விபசார தடுப்பு பிரிவு காவல்துறை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொழிலதிபர் மீது ‘ஹேமாஸ் கிச்சன்’ பெண் உரிமையாளர் மோசடி புகார்..

சென்னை, பெங்களூரு, திருச்சி மாவட்டம் சிறுகனூர் ஆகிய இடங்களில் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஹேமலதா என்பவர் ‘ஹேமாஸ் கிச்சன்’ என்ற பெயரில் உணவகங்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில், ஹேமலதா, திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், ‘திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியசாமி டவர்ஸ் உரிமையாளர், பெரியசாமி தங்கராஜன் என்கின்ற பி.டி. ராஜன் என்பவருக்கு சொந்தமான, சிறுகனூரில் உள்ள இடத்தில் ரூ.52 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு உணவகம் நடத்த அனுமதி கொடுத்தார். ஆனால் தற்போது, உணவகத்தை நடத்த விடாமல் அடியாட்களை வைத்து மிரட்டி வருகிறார்.

மேலும் இரண்டாவது முறையாக அடியாட்களை வைத்து உணவகத்தை பூட்டிவிட்டார். இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, பி.டி.ராஜன் மற்றும் அவரது அடியாட்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

மாதம் ரூ.10 லட்சம் வரை கல்லா கட்டிய பெண் உதவி ஆய்வாளர் அதிரடி கைது..!

கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த அஜிதா சரத் தம்பதியினர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபசார தடுப்பு பிரிவு காவல்துறை கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கை அஜிதாவிற்கு சாதகமாக முடித்து தரவும், குண்டாஸ் பதிவு செய்ய பரிந்துரை செய்யாமல் இருக்கவும் விபசார தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரமா, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு அஜிதா தன்னால் ரூ.10 ஆயிரம் தர முடியாது என்று கூறியிருக்கிறார்.இதையடுத்து உதவி ஆய்வாளர் ரமா அட்வான்சாக ரூ.3000 கொடுத்தால்தான் வழக்கை உனக்கு சாதகமாக முடித்து தர முடியும் என்று கூறியிருக்கிறார்.

இதுபற்றி அஜிதா திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். காவல்துறையினரின் ஆலோசனைப்படி நேற்று காலை ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் நோட்டுகளை காவல் உதவி ஆய்வாளர் ரமாவிடம் அஜிதா கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு உதவி ஆய்வாளர் ரமாவை கைது செய்தனர். மேலும் உதவி ஆய்வாளர் ரமாவின் மொபட்டில் சோதனையிட்டதில் இருக்கைக்கு அடியில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் ரமா முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் அந்த பணம் ஸ்பா சென்டர் உரிமையாளர்களிடமிருந்து லஞ்சமாக பெற்றதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பறிமுதல் செய்தனர். பின்னர் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் உதவி ஆய்வாளர் ரமாவை ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர். கைதான காவல் உதவி ஆய்வாளர் ரமா விபசார தடுப்பு பிரிவில் கடந்த 4 வருடங்களாக பணியாற்றி வந்தார். திருச்சி மாநகரை பொருத்தவரை 60 மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது. ஒரு சென்டருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை உதவி ஆய்வாளர் ரமா அவரது வங்கி கணக்கில் கூகுள் பே மூலம் பெற்றதாக கூறப்படுகிறது.

ரூ.10 ஆயிரம் என்று கணக்கிட்டாலே 60 மசாஜ் சென்டர்களுக்கு மாதம் ரூ.6 லட்சம். இதில் சில மசாஜ் சென்டர்களில் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மாதம் ரூ.10 லட்சம் வரை உதவி ஆய்வாளர் ரமா பெற்றதாக கூறப்படுகிறது. இந்த மொத்த வசூல் பணமும் இவருக்கு மட்டும் சென்றதா? அல்லது உடன் பணியாற்றும் காவல்துறை மற்றும் உயரதிகாரிகளுக்கும் சென்றதா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. கடந்த 4 வருடங்களாக எஸ்ஐ ரமா விபசார தடுப்பு பிரிவில் இருந்து உள்ளதால் கோடிக்கணக்கில் வசூல் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

பள்ளிச் சீருடையில் தலைமை ஆசிரியுடன் விமானத்தில் பறந்த மாணவி

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை – வள்ளுவரின் கூற்றிற்கு இணங்க தேசிய திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை தலைமை ஆசிரியை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று உற்சாகப்படுத்துயுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாணவநல்லூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தேசிய திறனறிவு தேர்வு மத்திய அரசால் நடத்தப்படுகிறது.

இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் வாணவநல்லூர் ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் தேசிய திறனறிவு தேர்வு நடைபெற்றது. இதில் 8 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்த தேர்வு எழுதுவதற்கு முன்பு இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை எனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று மாணவர்களை உற்சாகப்படுத்துவேன் என்று அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா அறிவித்திருந்தார்.

இதையடுத்து தேர்வில் மிருணாளினி என்ற எட்டாம் வகுப்பு மாணவி திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதைக் கண்டு தலைமை ஆசிரியை மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆசிரியை தேர்வின் போது மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு பெறுவார்கள் என்பதற்காக விமானத்தில் அழைத்துச் செல்வேன் என்று ஒப்புக்குக் கூறியதாக மாணவர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர்.

ஆனால் சொன்னதைச் செய்து காட்டுவேன் என்ற அந்த தலைமை ஆசிரியை அமுதா வெற்றி பெற்ற மாணவி மிருநாளினியை பள்ளிச் சீருடையுடன் வாணவ நல்லூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்ல டிக்கெட் வாங்கி மாணவியுடன் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்து சென்று மாணவியை அளவில்லாத சந்தோஷத்தை அடையச் செய்தார்.