சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், நாடு விடுதலையின் போது 77 ஆண்டுகளுக்கு முந்தைய பிரிவினை கால கொடூரங்களை நினைத்துப் பார்க்கும் போது துன்பகரமான நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. மனிதர்களின் தவறுகளால் இந்தியா துண்டாடப்பட்டு பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவினையால் ஒன்றரை கோடி அப்பாவி பொதுமக்கள் அகதிகளாக்கப்பட்டனர். எத்தனையோ லட்சம் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மை என்பது அனைவரும் சமம்தான் என்கிறது. ஆனால் இந்த நாட்டை 65 ஆண்டுகளாக ஆண்டவர்கள் இந்த சிந்தனையை உடைத்தனர்; மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தினர். உலகில் வலிமை மிக்க ராணுவமாக நாம் திகழ்கிறோம். நமது நாட்டிடம் ஆயுதங்களை பிற நாடுகள் வாங்குகின்றன. சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் முடிவு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் இருக்கும் சிலர் நமது நாட்டு பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
1947-ல் ஏற்பட்ட பிரிவினையின் வடுக்கள் ஆறவில்லை. இந்த துயரம் இப்போதும் முடிவுக்கு வரவில்லை. பிரிவினையை ஆதரித்த சித்தாந்தங்களில் ஒன்றுதான் திராவிட சித்தாந்தம். இந்தியாவை துண்டாட விரும்புகிற சித்தாந்தம் திராவிடம். இந்த நாடு மதச்சார்பற்ற நாடு என்பதை ஏற்க மறுப்பதுதான் திராவிட சித்தாந்தம்.
தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட காரணமே கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததுதான். பள்ளிகள், கோவில்களில் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகள் கவலை தருகின்றன என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.