சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம் பஸ்தாரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பழங்குடியினராக இருப்பதால் அயோத்தி பால ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கவிடாமல் பாஜகவினரால் தடுக்கப்பட்டார். இது பாஜகவின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது.
பழங்குடி மக்களை நாம் ஆதிவாசி என்று பன்னெடுங்காலமாக அழைத்து வருகிறோம். ஆனால் ஆதிவாசி என்ற வார்த்தையை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருகிறார். நாங்கள் உங்களை ஆதிவாசிகள் என்கிறோம், ஆனால் அவர்கள் ‘வனவாசி’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். வனவாசி மற்றும் ஆதிவாசி சொற்களுக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்பதை நீங்கள் உணரவேண்டும்.
ஆதிவாசி என்றால் நீர், வனம், நிலத்தின் மீது உரிமை உள்ளவர்கள் என்று அர்த்தம். ஆனால் வனவாசி என்றால் காட்டில் மட்டுமே வசிப்பவர்கள் என்று அர்த்தமாகிறது. பழங்குடி மக்களின் வரலாறு, மதம், கொள்கைகள் ஆகியவற்றின் மீது பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.