ஒய்யாரமாக பேருந்தில் புகைபிடித்த ஓட்டுநர்…!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து ஆடலூருக்கு தினமும் மதியம் 1½ மணிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து பண்ணைக்காடு, ஊத்து, குப்பம்மாள்பட்டி, தாண்டிக்குடி, தடியன்குடிசை, கே.சி.பட்டி வழியாக ஆடலூருக்கு மாலை 4¾ மணிக்கு சென்றடையும். நேற்று முன்தினம் வழக்கம் போல அரசு பஸ் ஆடலூர் நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்து மாலை 3¾ மணி அளவில் தடியன்குடிசைக்கு வந்தது. ஆனால் பேருந்தில் ஏற ஓட்டுனரும், நடத்துனரும் அனுமதி மறுத்தனர்.

பின்னர் அந்த பேருந்து தடியன்குடிசையிலேயே திரும்பி மீண்டும் வத்தலக்குண்டுவுக்கு புறப்பட தயாரானது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பேருந்திற்குள் புகைபிடித்து கொண்டிருந்த ஓட்டுனரிடம் ஆடலூருக்கு பேருந்து இயக்காதது குறித்து பயணிகள் கேட்டனர். அதற்கு அவர் ஏற்கனவே தாமதம் ஆகி விட்டதாகவும், இதனால் ஆடலூர் செல்ல முடியாது என்றும், வேறு வாகனங்களில் செல்லுமாறு தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொள்ளாத பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே பயணிகளுக்கு சரிவர பதில் அளிக்காத ஓட்டுநர், பேருந்தின் இருக்கையில் அமர்ந்தபடி புகைபிடித்து கொண்டிருந்ததை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது

திண்டுக்கல் மாவட்டம், அடியனூத்து கிராமத்தை சேர்ந்த அன்னலட்சுமியின் கணவன் வரதராஜ் கடந்த 2003-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து வரதராஜின் மனைவி அன்னலட்சுமி பெயரில் வாரிசு சான்றிதழ் வழங்கக்கோரி கடந்த 27.7.2023 இணையதளம் மூலம் அடியனூத்து கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு செய்தார்.ஆனால் அவருக்கு வாரிசு சான்றிதழ் கிடைக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து அன்னலட்சுமி தனது பேரன் கோபி நாகராஜ் மூலம் அடியனூத்து கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தத்தை பலமுறை நேரில் சந்தித்து தனக்கு வாரிசு சான்றிதழ் வழங்க கோரி வலியுறுத்தியுள்ளார். இதனை அடுத்து வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு 2000 ரூபாய் லஞ்சம் தருமாறு கோபி நாகராஜிடம் கிராம நிர்வாக அலுவலர் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபி நாகராஜ் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் அளித்தார்.லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரின் ஆலோசனைப்படி கோபிநாத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை, கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த காவல்துறை கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், உதவியாளர் செந்தில்குமார் ஆகியோரை மடக்கிப்பிடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் சிலை முன் காதல் ஜோடி சுயமரியாதை திருமணம்…!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுக்கா, வெல்லம்பட்டி கிராமம் கருப்பனம்பட்டி பகுதியில் வசிக்கும் ரமேஷ் மகன் ரஞ்சித் குமார் என்ற எம்.பி.ஏ பட்டதாரி இளைஞரும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுக்கா தொண்டாமுத்தூரில் வசிக்கும் ஏழுமலை மகள் கெஜலட்சுமி என்ற பெண்ணும் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.மேலும், இந்த சுயமரியாதை திருமணத்தை, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கரூர் மாவட்ட தலைவர் கு.கி.தனபால் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் நலக் கட்சி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தென்னரசு, மாவட்ட விவசாய அணி செயலாளர் வேலுசாமி, திமுகவைச் சேர்ந்த வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் நகரப் பொருளாளர் ரகுமான், மோகன்ராஜ் வழக்கறிஞர் உதயநிதி ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, சுயமரியாதை திருமணம் குறித்து சாமானிய மக்கள் நல கட்சியின் மாநில பொதுச்செயலாளர், வழக்கறிஞர் குணசேகரன் கூறுகையில், தந்தை பெரியாரின் கொள்கை வழியில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை தாண்டி எம்பிஏ பட்டதாரி வாலிபர், பெரியாரின் வழியை ஏற்று, சுயமரியாதை திருமணம் செய்ததை பாராட்டி வாழ்த்துகிறோம் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கரூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் கோரிக்கை மனுவினை அளித்தனர். கோரிக்கையை பெற்றுக் கொள்ள மறுத்து, கரூர் அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர், பேபி காவல் நிலையத்தில் இருந்து வெளியே சென்றார். மேலும் அங்கிருந்த காவலர்களும் காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்தனர்.

இந்நிலையில், கரூர் நகர காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி, பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்தனர். இன்று கரூர் நகர காவல் துறையினர், இருதரப்பு பெற்றோரை அழைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.சாதி மறுப்பு சுயமரியாத திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றவரிகளிடம் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் கோரிக்கை மனுவினை பெற்றுக்கொள்ளமால் காவல் நிலையத்தை விட்டு வெளியே சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை..!

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள அக்கரைப்பட்டி கிழக்கு தெரு பகுதியில், சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர், சாலை, சாக்கடை, கழிப்பறை, சுகாதாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அக்கரைப்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த மக்கள், அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு நேற்று காலை திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் “அபேஸ்…”

மதுரை கிருஷ்ணாபுரம் நடராஜர் காலனியை சேர்ந்த கூலிவேலை செய்யும் சுரேஷ்குமார். இவர் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், நான் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த அய்யாதுரை என்பவரின் மகள் லட்சுமியை திருமணம் செய்துள்ளேன். இதனால் நாங்கள் சின்னாளப்பட்டி பகுதியில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட முடிவு செய்தோம். இதற்காக எனது மாமனாரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருமான அய்யாத்துரையை தொடர்பு கொண்டேன்.

அவர் நிலம் வாங்கி தருவதாக கூறி என்னிடம் பல தவணைகளாக ரூ.20 லட்சம் வரை வாங்கினார். ஆனால் அவர் நிலம் வாங்கி தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் பணத்தை திருப்பி கேட்டபோது தராமல் இழுத்தடித்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.