31 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் மூலம் விற்பனை …! கேட்டா ஐ. பெரியசாமி பேரை சொல்ராங்க..!

போலி ஆவணங்கள் மூலம் தங்களது சொத்துக்களை அபகரித்துக் கொண்டவர்களிம் இருந்து மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். போலி பத்திரப்பதிவு மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் நில மோசடி சம்பவங்களும், அரங்கேறி வருகின்றது. இதனால் பாதிக்கபட்ட மக்கள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மட்டும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் வேடசந்தூர் பகுதியில் உள்ள தங்களது பல கோடி ரூபாய் மதிப்புள்ள 31 ஏக்கர் சொத்துக்களை சிலர் கூட்டு சதி செய்து முறைகேடான ஆவணங்கள் மூலம் பத்திரம் தயார் செய்து விற்பனை செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக ஜமால் முகமது, ஜெய்னுல் ஆபிதீன், வசிம் ராஜா, ஜாகிர் நியாஸ், சண்முகம் செட்டியார் ஆகிய ஐந்து பேர் தான் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களுடைய நிலத்தை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் நிலங்களை ஜமான் முகமது, வசீம் ராஜா உள்ளிட்டோர் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். மோசடி செய்த நிலத்தை தங்களுக்கு மீட்டுத் தருமாறு கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மேலும் தங்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி வரை அனைவரையும் தெரியும், எங்களை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டல் விடுகின்றனர்.

மேலும் நீங்கள் நீதிமன்றத்திற்கு சென்றாலும் நாங்கள் பணத்தை கொடுத்து சரி செய்து விடுவோம் என மிரட்டுவதாக கூறியுள்ளனர். 128 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு தங்களுடைய சொத்துக்களை மீட்டு தர வேண்டும்” என அவர்கள் தெரிவித்தனர்.

இரும்பு கட்டிலில் படுத்து உறங்கிய தந்தை மகன் இருவர் சம்பவ இடத்திலேயே பலி..! எப்படி ஒரே நேரத்தில் நான்கு போல்ட்டுகளும் கழன்றது..!?

இரும்பு கட்டில் கால் முறிந்து விழுந்ததில் தந்தை மகன் இருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிலில் போல்ட் சரியாக மாட்டப்படாததால் இரும்பு கம்பி கழுத்தை நெறித்ததில் இருவரும் பாலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தையல் தொழில் செய்து வரும் கோபி கிருஷ்ணன். இவரது மனைவி லோகேஸ்வரி நத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கார்த்திக் ரோஷன், எஸ்வந்த் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் கார்த்திக் ரோஷனும் தந்தை கோபி கிருஷ்ணனும் எப்போதும் வீட்டின் மாடியில் உள்ள இரும்பு கட்டிலில் படுத்து உறங்குவது வழக்கம். அதேபோல் தாய் லோகேஸ்வரியும் இரண்டாவது மகன் யஸ்வந்த் கீழ் வீட்டில் படுத்து உறங்குவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கோபி கிருஷ்ணன் மகன் கார்த்திக்கும் டிவி பார்த்துக் கொண்டு இரும்பு கட்டிலில் தூங்கி உள்ளனர். அப்போது மனைவி லோகேஸ்வரி மருத்துவமனைக்கு பணிக்கு செல்வதற்காக கிளம்புவதாகக் கூறியுள்ளார். வெகு நேரமாகியும் மாடியில் இருந்து வராத தனது மகனையும் கணவரையும் தேடி மேலே சென்று உள்ளார். அப்போது கணவன் மகன் இருவரும் இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி லோகேஸ்வரி சாணார்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் இருவரின் சடலத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் இரும்பு கட்டில் கால்களில் உள்ள நான்கு போல்ட்டுகளும் இல்லாததால் இரும்பு கட்டில் கால் முறிந்து விழுந்ததில் இருவரின் கழுத்துப் பகுதி நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

தந்தை மகன் இருவர் ஒரே நேரத்தில் கட்டில் கால் முறிந்து விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் இத்தனை நாட்கள் விபத்து ஏற்படாத நிலையில், தற்போது விபத்து ஏற்பட்டது எப்படி என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போல்ட்டுகள் தானாக கழன்றதா? ஒரே நேரத்தில் எப்படி நான்கு போல்ட்டுகளும் கழன்றது? அல்லது கழற்றப்பட்டதா? எனவும் விசாரிக்க வேண்டுமென அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பழம் பறித்தவர் மீது துப்பாக்கிச்சூடு…! திண்டுக்கல் காவல்துறை தீவிர விசாரணை..!

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை, தாளக்கடை பகுதி பழங்குடி வகுப்பைச் சேர்ந்த சங்கர் மகன் வெள்ளையன். இவர் திண்டுக்கல் அடுத்துள்ள தவசிமடையை சேர்ந்த சவேரியார் என்பவர் சிறுமலை, தாளக்கடை பகுதியில் சொந்தமாக தோட்டம் வைத்துள்ளார். தோட்டத்தில் வாழை, பலா, சௌசௌ உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் வெள்ளையன் அடிக்கடி சவேரியார் தோட்டத்தில் நுழைந்து விற்பனைக்கு தயார் நிலையிலிருந்த பழங்களை பறிப்பதை வழக்கமாக வைத்தாக சொல்லப்படுகிறது.

இதனால் இரு குடும்பத்தினருக்குமிடையே முன்பகை இருந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சவேரியார் தோட்டத்தின் வழியாக நேற்று இரவு 3 மணிக்கு வெள்ளையன் நடந்து சென்றதாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சவேரியார் தான் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கி வைத்து வெள்ளையனை சுட்டுள்ளார்.

இந்நிலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் வெள்ளையனின் தலை, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு நிலைகுலைந்து அந்த இடத்திலேயே விழுந்துள்ளார். பின்னர் படுகாயமடைந்த வெள்ளையனை அவரின் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த வெள்ளையனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை பாதிக்கப்பட்டவர் தற்போது நலமாக இருப்பதாகவும், தலைமறைவாகியுள்ள நில உரிமையாளர் சவேரியாரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வாரிசு சான்றிதழ் வேண்டுமா ..! அப்ப.. 2000 கொடு..

திண்டுக்கல் அருகே உள்ள அடியனூத்து கிராமத்தை சேர்ந்த வரதராஜ் கடந்த 2003-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இவரது மனைவி அன்னலட்சுமி. இவர் தனது பெயரில் வாரிசு சான்றிதழ் வழங்கக்கோரி கடந்த 27.7.2023 இணையதளம் மூலம் அடியனூத்து கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு செய்தார்.ஆனால் அவருக்கு வாரிசு சான்றிதழ் கிடைக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து அன்னலட்சுமி தனது பேரன் கோபி நாகராஜ் மூலம் அடியனூத்து கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தத்தை பலமுறைநேரில் சந்தித்து தனக்கு வாரிசு சான்றிதழ் வழங்க கோரி வலியுறுத்தியுள்ளார். இதனை அடுத்து வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு 2000 ரூபாய் லஞ்சம் தருமாறு கோபி நாகராஜிடம் கிராம நிர்வாக அலுவலர் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபி நாகராஜ் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரின் ஆலோசனைப்படி கோபிநாத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை, கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், உதவியாளர் செந்தில்குமார் ஆகியோரை மடக்கிப்பிடித்தனர்.

பார் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திண்டுக்கல் நத்தம் அருகே வேலம்பட்டி ஊராட்சியில் நேருநகர், செல்லம்புதூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் தனியார் மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்லக்கூடிய செந்துறை சாலையோரத்தில் தனியார் மதுபான பார் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வேலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் ஊர்வலமாக நத்தம் தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், தாசில்தார் ராமையாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அண்ணாமலை நடைபயணத்தால் எந்த எழுச்சியும் ஏற்படாது..!

திண்டுக்கல் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில தலைவர் நாகை.திருவள்ளுவன் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தால் தமிழகத்தில் எந்த எழுச்சியும் ஏற்பட போவதில்லை என தெரிவித்தார்.

காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு; ‘இந்தியா’ கூட்டணி கட்சி, பா.ஜ.க.வினர் மீது வழக்கு

திண்டுக்கல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மயில் ரவுண்டானா பகுதியில் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மறியலுக்கு முயன்றதால் காவல்துறையினருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களை காவல்துறை கைது செய்து பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி ராஜமாணிக்கம், காங்கிரஸ் நிர்வாகி நேரு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் மாயவன் உள்பட 96 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் ஆளுநரை வரவேற்பதற்காக உரிய அனுமதி இல்லாமல் பா.ஜ.க. மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் பேருந்து நிலைய பகுதியில் திரண்டனர்.

அப்போது அவர்களை காவல்துறை பா.ஜ.க.வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தியபோது, அவர்கள் காவல் துறையினரை தள்ளிவிட்டு சாலை மறியலுக்கு முயன்றனர். இதனால் பா.ஜ.க.வினர், காவல் துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே பா.ஜ.க. மாவட்ட தலைவர் கனகராஜ் உள்பட 124 பேர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலகட்டத்தில் கிருமி நாசினி வாங்கியதில் முறைகேடு: மாநகராட்சி ஆணையர் வீட்டில் ரெய்டு!

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் மகேஸ்வரி, இதற்கு முன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாநகராட்சிகளில் ஆணையராக பணியாற்றிய இவர் கடந்த ஏப்ரல் மாதம் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஸ்வரி கடந்த 2020 முதல் 2021 வரை அதாவது கொரோனா காலகட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக் பணிபுரிந்து வந்தார். அப்போது கொரோனா தடுப்பு பணிகளுக்காக லைசால் கிருமிநாசினி கொள்முதல் செய்துள்ளார். அதில், முறைகேடு நடந்ததாகக் கூறி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுடர்மணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்தினர்.

இதில், லைசால் கிருமிநாசினி கொள்முதல் செய்ததில் 32 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து 22.06.23 காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் மகேஸ்வரி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு கடந்த மூன்று மாதமாக திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், 23.06.23 காலை திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியில் வசித்து வரும் மகேஸ்வரியின் வீட்டில், டி.எஸ்.பி நாகராஜன் தலைமையிலான 6 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை ஈடுபட்டனர். அதேபோல் திருப்பூரில் உள்ள மகேஸ்வரியின் வீடு. காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணியாற்றிய துப்புரவு ஆய்வாளர்கள் வீடு என மொத்தம் 5 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.